ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Tuesday, March 29, 2005

காத்தடிக்குது.... காத்தடிக்குது....!

கானா - ஒப்பாரியாய் கொண்டாட்டம்!

"சிங்கள பைலா பாடல்கள் போல, கானா ஒரு கலாச்சார அடையாளம். அடித்தட்டு மக்களின் குதூகலம். பச்சையப்பன் கல்லூரி B மைதானத்தில் கிரிக்கெட் ஆடப்போகும் போது, டாஸ் ஜெயித்ததிலிருந்து, பேட்டிங் எடுத்தோமானால், நம்மணி வீரர்களை உற்சாகப் படுத்த தொடர்ச்சியாக 3 -4 பேர் மாற்றி, மாற்றி கானா பாடுவோம். கானாவின் மிக முக்கிய அம்சமே participation. தனிநபர் கானா பாடினாலும், சுற்றியிருப்பவர்கள், கை தட்டியும், ஊடாக பாடிக்கொண்டும், சில சமயங்களில் தாளம் போட்டுக் கொண்டிருத்தலும், வேறெந்த இசைவடிவத்திலும் சாத்தியமில்லை. கர்நாடக கச்சேரிகளுக்கு போனால், பாகவதர் பாடிக்கொண்டேயிருப்பார். நம் பக்கத்திலிருப்பவர் கொட்டாவி விட்டுக்கொண்டோ, சாப்பிட்ட போண்டாவின் பெருமைகளை பேசிக்கொண்டோ இருப்பார். ஆனால், கானாவில் அது கிடையாது. எல்லோரின் பங்குதலும் உண்டு. இசை கருவிகள் என்று எதுவுமில்லை. மேஜை, பஸ்ஸின் ஏறுமிடம், பஸ்ஸில் உச்சி, டிபன்பாக்ஸ், கரவோசை, ஷூ சத்தம் என எதுவேண்டுமானாலும் செட்டாகுமாறு பாடல்கள் அமைய வேண்டும். மிக எளிமையான சந்தங்கள் அடங்கியிருக்க வேண்டும்"

---நாராயணன்.



கானா பாடல்கள் பற்றி நாராயணன் எழுதி வருகிறார். இன்னும் எழுதுவதாக, தனது கல்லூரி கால கானாக்களை பதிவதாகவும் சொல்லியிருக்கிறார். நாரயணணை நினைக்க பொறாமையாய் இருக்கிறது. கானா கலந்த கல்லூரி வாழ்க்கை! ஒவ்வொரு கல்லூரி நினைவும் ஏதாவதொரு கானாவுடன் பின்னி கிடக்கும். அவரே ஒரு இன்ஸ்டண்ட் கானா பாடகர் என்றும் தெரிகிறது. பஸ் பயணம், சண்டைகள், ('ஆரோக்கியமான') ஈவ்டீசிங் தொடங்கி எல்லா கல்லூரி நிகழ்வுகளின் நினைவுகளும் கானா வரிகளுடன், இளயராஜாவின் ஃபுயுசன் செய்த இசை போல பிரித்தெடுக்க இயலாமல் கலந்திருக்கும். அனுபவத்தை பதிந்த கேசட் போல், ஒரு கானாவை அவிழ்த்து விட்டு நினைவுகளை மீட்டி நனவிடை தோயலாம். திருநெல்வேலியிலும், தூத்துகுடியிலும் கழிந்த என் கல்லூரி வாழ்க்கையின் குறைந்த அளவிலான குறிப்பிடத் தகுந்த சம்பவங்களும், சுவாரசியங்களும் கானா போன்ற எந்த கலை வடிவத்துடனும் பிணைக்கப் படவில்லை. நல்லவேளையாய் இளையராஜா எத்தனையோ பாடல்களை படைத்திருக்கிறார்.

இப்படி கானாவுடன் நேரடி உறவு வைத்திராமல், ஒரு செவிமடுப்பாளன் என்ற நிலையில் சில கருத்துக்களை கூற நினைக்கிறேன். கானா குறித்த என் அத்தனை அறிதல்களும் இரண்டாம் கை, இரண்டாம் கைகளிலிருந்து கிடைத்த மூன்றாம் கை அனுபவங்களாகவே உள்ளன. நந்தனம் கலை கல்லூரியில் படித்த நண்பன் விவரித்தது, விகடனில் படித்த இரண்டு கட்டுரைகள், கேசட்டில் கேட்ட சில கானாக்கள், பிறகு அண்ணன் தேவா திரையிசையில் உருவாக்கிய கானா அலையில் எல்லோருக்கும் தெரிந்த பாடல்கள் என்ற படியே கானா அனுபவம் எனக்கு அறிமுகமாகியிருக்கிறது. இன்று கானாவுக்கு அங்கிகாரங்கள் கிட்டி, அதில் ஆராய்ச்சி செய்வதும், கட்டுரைகள், புத்தகங்கள் வெளிவருவதையும் அறிகிறேம். அது எதையும் படிக்காமல், இங்கே இணையத்தில் பேசப்பட்ட ஆசாத்தின் புத்தகத்தை கூட பார்க்காமல், மேலோட்டமான என் அறிவை வைத்து, குறிப்பாய் சினிமாவின் கானா பாடலகளை அவதானித்து, கானாவின் சில பண்புகள் குறித்து எழுதுவதே இந்த பதிவின் நோக்கம்.

நாரயணனும் சொன்னதுபோல் கானாவின் வேர்கள் சென்னை நகரின் இறுக்கமான சேரிகளில் இருந்தாலும், அதை சென்னை நகரத்து (கலைக்)கல்லூரிகளே பிரபலப்படுத்தியது. விவேகாநந்தா, லோயலா போன்ற எலீட் கல்லூரிகளுக்கு இதில் எந்த பங்கும் இருக்காது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பச்சையப்பா கல்லூரி, அதன் தலித் மாணவர்கள் இந்த பிரபலப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்ததாக என் எண்ணம். அங்கிருந்த புறப்பட்ட கூட்டமே பின்னர் 'தலைவாசல்' படம் மூலம் சினிமாவில் கானாவை அறிமுகப்படுத்தியது என்று நாராயணணும் சொல்கிறார். ஆனால் இந்த கல்லூரி கானா என்பது நான் இங்கே அணுக விரும்பும் தேவா கானாவிலிருந்து சில பண்புகளால் வேறுபடுவதாக நினைக்கிறேன். (முதலில் சேரி கானா என்று சொல்லலாமா என்று யோசித்து பின்னர் இந்த தருணத்தில் தோன்றியபடி தேவா கானா என்று அழைக்கிறேன்.) 'தலைவாசல்' படத்தில் அறிமுகமானது ('நான் தினந்தோறும் ரிக்ஷா ஒட்டி பிழைக்கிறேன்' தவிர்த்து) கல்லூரி கானாவெனில், இந்த தேவகானத்தை சினிமாவில் அறிமுகபடுத்தி பிரபலபடுத்தி ஒரு புரட்சி செய்தவர் அண்ணன் தேவா. இந்த தேவா கானாவில் இருந்து கல்லூரி கானா கொஞ்சம் வேறுபடுவதாக தோன்றினாலும், சும்மா வார்த்தைகளில் விளையாடாமல் பொத்தாம் பொதுவாய் எல்லாவற்றையும் கானா என்றே சொல்லிச் செல்கிறேன்.

பல வருடங்கள் முன்பு வி.அரசு கானா பாடல்கள் குறித்து பேசும் போது, கானாவின் தோற்றமாக சொன்னது நினைவுக்கு வருகிறது. பொதுவான எலீட் கலாச்சாரத்திற்கு மாறான ஸபால்டர்ன் மக்களின் கலாச்சாரத்தில் சாவு என்பது ஒரு கொண்டாடப்படும் நிகழ்வாக இருப்பதை அறியலாம். இது சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதுமே (எனக்கு தெரிந்து ஆந்திராவிலும்) காணக்கூடிய ஒரு பண்பு. சாவு, அதுவும் வயதான சாவு விழுந்த உடனேயே சாராயத்திற்கும், மோளத்திற்கும் ஏற்பாடாகும். பொணம் எரிக்கப் படும்வரை, டப்பாங்கூத்தும், ஆட்டமும், சாராயமும் வெள்ளமாய் பாய்ந்துகொண்டிருக்கும். சாவு இவ்வாறு கொண்டாடப்படும் நிகழ்வாவது குறித்து சமூகவியல் ஆராய்ச்சிகள் ஏதாவது இருக்கிறதா என்று தெரியவில்லை. 'இந்த உலக வாழ்க்கை துன்பத்தாலும், பாவத்தாலும் நிறைந்ததால், அதிலிருந்து விடுவிக்கும் சாவு கொண்டாட தகுந்தது' என்ற எளிய மதத்தனமான தத்துவ காரணம் கொண்டு இதை விளக்க முடியும் என்று தோன்றவில்லை. (ஆப்பிரிக்க சமுதாயங்கள், பல ஆதிவாசி சமுதாயங்கள் கொண்டிருக்கும் பல சாவு சடங்குகளுடன் ஒப்பிட்டு இதை புரிந்து கொள்ள முயலலாம்.)

சென்னை சேரிகளில் சாவு விழுந்தால் பல காரணங்களுக்காக பிணத்தை இரவு முழுவதும் வைத்திருக்க நேர்கிறது. அந்த இரவுப் பொழுதை கழிக்கும் விதமாய் உருவாக்கப்பட்டே கானா பிறந்ததாய் அறிகிறேன். இது நான் அணுகப் போகும் கானாக்களின் முக்கிய இலக்கணத்தை புரிந்துகொள்ள உதவுகிறது. இழவு வீட்டில் அந்த கணத்தில் தோன்றிய வார்த்தைகளால், கைகளை தட்டி உருவாக்கிய தாளத்துடன் பாடப்பட்டு கானா உருவாகியது என்று கேள்விப் படுகிறேன். இன்று வரை கானா தோன்றிய விதமாக இந்த வறலாற்றையே கற்பித்துக் கொண்டிருக்கிறேன்.

இதன் காரணமாகவும், பின்னர் கானா புழங்கிய எல்லா தளங்கள் காரணமாகவும், கானாவின் வரிகளும் மெட்டும் ஒரு கணநேர படைப்பாக்க தன்மையுடன் வெளிப்பட்டாக வேண்டியிருக்கிறது. அதில் அர்த்தம் முக்கிய இடத்தை பெற முடியாது. அர்த்தத்தை விட சந்தத்திற்கே முக்கியத்துவம் இருக்க வேண்டியது காட்டாயமாகிறது. அர்த்தம் சந்தத்தை பற்றிகொண்டு உருவாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இந்த தன்மையுடைய கானா கல்லூரிகளில் புகுந்து அமோக வரவேற்பை பெற்றது ஆச்சரியத்திற்குரியது அல்ல. கல்லூரி மாணவர்கள் தங்கள் படைப்புத்திறனை காட்ட இதை விட வேறு சிறந்த பாடல் வடிவம் இருக்க முடியுமா? 'தடவட்டுமா விக்ஸு, நீ படிக்கிறியா செக்ஸு?' என்பது போல் கணநேரத்தில் பாடலை உருவாக்கி, மெட்டும் அமைத்து, டிபன் பாக்ஸில், பஸ் சுவரில் தாளமடித்து உடனே சந்தர்பத்திற் கேற்றவாறு பாடமுடியும்.

சேரிகளில் வாழும் மக்கள் தங்கள் முந்தய கிராம அடையாளத்தை நகர வாழ்க்கையில் நீட்டிக் கொள்வது போல், அல்லது நகர வாழ்க்கைக்கு ஏற்ப இசை வடிவம் பரிணமிப்பது போல், டப்பாங்குத்தை (நாட்டுபுற இசையை) ஒத்த, அதன்மீது நகர்புற முலாம் பூசப்பட்ட மெட்டிலேயே கானா அமைகிறது. என்றாலும் சாதாரணமாய் டப்பாங்குத்து/நாட்டுபுற இசை என்று அழைக்கப்படும் இசையிலிருந்து கானா மெட்டு தெளிவாக வேறுபடுகிறது. கானா தனது வேர்களை டப்பாங்குத்தோடு பொருத்திகொள்கிறது என்று மட்டுமே தோன்றுகிறது. கானாவின் பண்புகளான கணநேர படைப்பாக்கத்திற்கு இந்த வகை இசையே பொருத்தமாக இருக்கிறது. டப்பாங்குத்தை விட 'டண்டணக்கா' தாளம் இன்னும் வீரியத்துடன் கானாவில் ஒலிக்கிறது. பல புதிய பீட்டுகளை போட்டும் பாடமுடிகிறது.

'ஆக கிராமத்திலிருந்த புலம் பெயர்ந்த அடித்தட்டு மக்களின், நகர்புற வாழ்க்கைக்கு ஏற்ப, பரிமாண வளர்ச்சி அடைந்த ஒரு இசை வடிவம்தான் கானாவா' என்று கேட்டால், அது மட்டும் கானாவை பற்றி விளக்க போதுமானாதாய் இல்லை என்று தோன்றுகிறது. கானாவின் முக்கிய பண்பாய் இருப்பது ஒப்பாரித்தனமான அதன் கொண்டாட்டமே என்று எனக்கு தோன்றுகிறது.

இந்த பண்பு கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்படும் கானாவில் எந்த அளவு இருக்கிறது என்று தெரியவில்லை. நாரயணன் போன்றவர்களால் பதில் சொல்ல இயலக்கூடும். தேவா அவர்களால் திரை இசையில் புகுந்து, பிரபலமான கானாக்களின் முக்கிய பண்பாக இந்த ஒப்பாரித்தனமான கொண்டாட்டமே இருப்பதாக தோன்றுகிறது.

இங்கே கவனிக்க வேண்டியது. திட்டமிட்டு எழுதப்பட்டு, திட்டமிட்டு இசையமைத்து பதியப்பட்டு சினிமாவில் கானா பாடல் உருவாக்கப் படும் போது, சென்ற பத்திகளில் குறிப்பிட்ட கணநேர படைப்புதன்மை போன்ற பண்புகள் காணாமல் போகவேண்டியிருப்பதை கவனிக்க வேண்டும். தாளமும் தன் எளிமையை துறந்து ஆர்பாட்டமாவதுடன், பிண்ணணி இசையும் சேர்ந்துகொள்கிறது. ஆயினும் தேவா இசைத்த கானாவின் தன்மையாய் இருப்பது அதன் ஒப்பாரித்தனமான கொண்டாட்டம்தான்.

உதாரணமாய் முதலில்(?) தேவா இசையமைத்து, பாடி பிரபலமான 'கவலைப் படாதே, சகோதரா!' பாடலை எடுத்துக் கொள்வோம். பொதுவாய் பாடலகளுக்கு, அதுவும் திரை பாடலுக்கு, தேவையான கல்சர்ட் குரலாய் இல்லாத ஒரு குரல். இதில் பெரிய புதுமை இல்லை. ஏற்கனவே இளயராஜா சுருதியுடன் ஒத்துவராமலோ, சுருதி சுத்தமாய் இல்லாமலேயோ பாடி பல அற்புத பாடல்களை தந்துள்ளார். (ஒரு உதாரணம் 'மெட்டி ஒலி காற்றோடு..!'). மட்டுமில்லாமல் 'அண்ணே..அண்ணே..' போன்ற பாடல்களில் ரஸ்டிக் குரல்களை போட்டு, பிரபலபடுத்தி வழக்கமான நியதிகளை உடைத்திருப்பார். ஆனால் இந்த பாடல் அவைகளில் இருந்தும் வேறுபடுகிறது.

இந்த பாடலில் தேவா ஒரு உச்ச ஸ்தாயில் பாட்டை துவங்குகிறார். உச்ச ஸ்தாயில் என்றால், அது டி.எம்.எஸ் 'ஏரி கரை மேலே..' என்று பாடும் உச்ச ஸ்தாயி இல்லை. பாட்டிற்கும், மெட்டிற்கும் 'தேவைப்படாத'/'பொருந்தாத' என்று நினைக்கக் கூடிய ஒரு ஹை பிட்ச்! இங்கேதான் வழக்கமான சாஸ்திரிய சங்கீதம் பரிச்சயமானவரும், அதற்கு தன் ரசனையை பழக்கப் படுத்திகொண்டவரும் முகத்தை சுளிக்கக் வேண்டி வரும். அப்படி ஒரு உச்சஸ்தாயில் தொடங்குவது மட்டுமல்ல, 'யம்மா யம்மா ..'என்று பல்லவியிலேயே (சரணத்தில் 'நூறு ரூவா நோட்ட பாத்தா...!') எதிர்பாராத, மெட்டிற்கு சற்றும் பொருந்தவில்லை என்று சாதாரணமாக இசையை ரசிக்கும் மனம் கருதக்கூடிய உச்சத்தில் போய், 'எதுக்காக இப்படி கத்த வேண்டும்?' என்று வால்யூமை குறைக்கவும், காதை பொத்தவும் வைக்கும். இந்த உச்சக் குரல் ஒரு சோகத்தை வெளிப்படுத்தும் புலம்பலுக்கானது. அழுகை கத்தல் இவற்றை ஒத்த ஒப்பாரித் தன்மையை கொண்டது. ஆனால் பாட்டோ இதற்கு மாறாக ரொம்ப ஜாலியானது. பிண்ணணி 'டமுக்கு டப்பான்' இசையும், பாடலின் ஆதார சுருதியும் சந்தோஷத்திற்கானது. வாழ்வை இன்பத்தை கொண்டாடும் தன்மை கொண்டது. இதைத்தான் ஒப்பாரியாய் கொண்டாடுதல் என்று குறிக்கிறேன்.

எனக்கு தெரிந்து தேவா (வேறு யார் கானா பாட்டளித்தார்கள் அதனால் சினிமா) அளித்தததில் கானா பாடல்கள் என்று அடையாளப்படுத்தப் படும் அத்தனை பாடல்களிலும் இந்த தன்மையை பார்க்க முடியும். 'தேவையற்றதொரு' உச்ச குரலில், ஒப்பாரியாய் ஒரு புலம்பல்தொனி கலந்து வெளிப்படும் கொண்டாட்டததையே கானாவின் முக்கிய இலக்கணமாக நான் பார்கிறேன். இங்கே ஒன்றை நினைவில் வைத்துகொள்ள தோன்றுகிறது. வழக்கமான டப்பாங்குத்திலிருந்து விலகி வித்தியாசமாக தேவா சில பாடல்களை தந்திருப்பார். உதாரணமாய் 'சிவ சிவ சங்கரா..' 'திருப்பதி ஏழுமலை வெங்கடேசா!', யப்பா, யப்பா அய்யப்பா..' இந்த பாடல்களை எந்த விதத்திலும் கானா பாட்டு என்று சொல்லமுடியாது. கானாவின் மேற்சொன்ன எந்த தன்மையும் இல்லாதவை இவை. நாரயணன் பேசும் கல்லூரி கானாக்களை ஒருவேளை சிங்கள பைலா பாடல்களுடன் ஒப்பிட முடியலாம். ஆனால் நான் இங்கே அணுகும் கானாக்களின் எதிர்பிசை தன்மை காரணமாக, என்னால் சிங்கள பைலா பாடல்கள் போன்றவற்றுடனும் கூட கானாவை ஒப்பிட முடியவில்லை. உதாரணமாய் இப்போது சினிமாவில் நகைச்சுவை நடிகராய் மாறியிருக்கும் பாடகர் கர்ணா, சொற்களே இல்லாமல் வார்த்தைகளை போட்டு பாடல்கள் உருவாக்குவார். அது போன்றவற்றையே பைலா பாடல்களுடன் ஒப்பிட முடியும் என்று தோன்றுகிறது.

இந்த இலக்கணத்துடன் வந்த திரைகானா பாடல்களிலேயே மிக அற்புதமான பாடலாக எனக்கு 'காத்தடிக்குது.. காத்தடிக்குது..' பாடல் தெரிகிறது. பாடலின் வரிகள் (ஒரு திரைப்பாடலாய் திட்டமிடப் பட்டிருந்தாலும்) மிக எதேச்சைதன்மையுடன் வெளிப்பட்டதாக உள்ளது. 'வடை சுடாதடா நவாசு' போன்ற தொடக்க வசனங்களும், வழக்கமான முறையில் இல்லாமல் திடீரென தொடங்கும் பாடலும், மற்ற வரிகளும் எதேச்சையாய் சிக்கிய வார்த்தைகளில் செய்யப்பட்டது போல், சந்தத்தை முன்வைத்து இசையும் வரிகளும் எதிர்பாராமல் போகிறது. (ஏற்கனவே இருந்த கானாவை அடிப்படையாய் வைத்து இந்த பாட்டு உருவாகியிருக்கலாம். எனக்கு விவரம் தெரியவில்லை.)

'கடிச்சிகினும் ஊத்திக்கலாம் ஊத்திக்கினு கடிச்சிக்கலாம், ,
போத்திக்கினு படுத்துக்கலாம், படுத்துக்கினும் போத்திக்கலாம்'

சுத்த 'நான்சென்ஸாக' தெரியும் இந்த வரிகள் உலக வாழ்க்கையின், வாழ்வதின், நாம் கொள்ளும் நியதிகளின் அபத்தத்தை முன்வைப்பதாக தெரிகிறது. அதை தொடரும் 'காத்தடிக்குது... காத்தடிக்குது..' இந்த அபத்தமான வாழ்வில் கிடைக்க கூடிய (சிற்)இன்பத்தை குறிப்பதாகவும் வாசிக்க முடிகிறது. அதுவும் சமத்துவமாய் அனைவருக்கும் கிடைக்க கூடிய இன்பம் 'காத்தடிக்குது!'. வாழ்வின் அபத்தத்தை, நிகழ்கால இன்பத்தின் முக்கியத்துவத்தையும் ஒரு புலம்பலாய் ("பாவம் அந்த வயித்துக்கு பசிக்க சொல்லி தந்ததாரு.. ஊத்திக்கினு கடிச்சுக்கலாம்.. கடிச்சுக்கினு ஊத்திக்கலாம்...!") இந்த பாடலில் இந்த வரிகள் சொல்வது போல் தீவிரமாய் வேறு எதுவும் சொல்வதாக எனக்கு தோன்றவில்லை. (இப்படியெல்லாம் தோன்றுவது 'கொஞ்சம் ஓவரோ' என்று எனக்கே சந்தேகம் இருந்தது. ஆனால் அப்படி ஒரு சந்தேகத்தையும் வெகு காலம் வைத்திருந்து, பரிசீலித்து யோசிக்கும் போது, பாடல் வரிகள் அவ்வாறு உத்தேசித்து எழுதியிரா விட்டாலும், இப்படி ஒரு வாசிப்பு எனக்கு சாத்தியமாகிறது.)

இசையமைப்பில் தேவா ஒரு மாபெரும் ரகளை பண்ணியிருப்பார். டாப்பாங்குத்தில் புரட்சி செய்த இளையராஜவை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விளையாடியிருப்பார். பாடல் முடியும் போது வரும் பிண்ணணி அடிகளை கவனிக்கவும். பாடல் முழுவதும் ஒரு சோகத்தை, அபத்தத்தை உள்ளடக்கி, புலம்பும் பாவனையில் பெரும் கொண்டாட்டமாய் விரிகிறது.

இந்த பாடலுக்கு இன்னொரு முக்கியமான அம்சமும் உண்டு. திரைப்படம் என்ற கலை வெளி அதன் வணிகதன்மை, மற்றும் சமூகத்தின் பொது மதிப்பீடு காரணமாய் எதையும், குறிப்பாக மக்கள் கலைகளை, கொச்சைபடுத்தியே வெளிப்படுத்தும். கானா இசை திரையிசையில் குறிப்பிட்ட இடத்தை பெற்றாலும், அவ்வாறு இடம்பெறுதல் 'தரம்குறைந்ததாக', ஒரு சமரசமாகவே பார்க்க படுகிறது. கானா பாடல் என்பது ஹீரோ சோகமாய் இருக்கும் போதோ, அல்லது வேறு காரணங்களுக்காகவோ, படத்தின் துணை பாத்திரங்கள் ஹீரோவை குஷிபடுத்த, கதாநாயகியை போல அவ்வளவு 'கண்ணியமில்லாத' ஆட்டகாரிகளுடன் சேர்ந்த ஆடலுடன், பாடப்பட்டு காட்சியமைக்கப் பட்டிருக்கும். 'காத்தடிக்குது..' பாடலின் காட்சியமைப்பு இந்த விஷயத்தில் மாறுபட்டிருக்கும். பிரபுதேவா என்ற அற்புத ஆட்டக்காரன், தேவாவின் இசைக்கு ஏற்ப இன்னோரு ரகளையை நடத்தியிருப்பார். பாட்டும் அதன் இசையும் எததனை கொண்டாட்டத்தை வெளிப்படுத்துகிறதோ, அதே அளவு கொண்டாட்டத்தை பாடலின் காட்சியமைப்பும் வெளிப்படுத்தியிருக்கும். எல்லா வகையிலும் இதனுடன் ஒப்பிடக் கூடிய ஒரு பாடலை என்னால் தமிழ் திரையிசையில் காணமுடியவில்லை. சென்ற நூற்றாண்டின் பல சிறந்த பாடல்களில் ஒன்றாக நான் இந்த பாடலை தெரிவு செய்கிறேன்.

பொடிச்சி எதிர்பிசை குறித்த தன் பதிவில், 'தமிழில் எதிர்பிசை ஏன் உருவாகவில்லை?' என்று கேட்டிருப்பார். நானும் என் பங்கிற்கு கே.ஏ. குணசேகரன் தொடங்கி PWGயின் புரட்சி பாடகர் கதார் வரை பேசியிருப்பேன். ஆனால் அவை எல்லாமே நாட்டுப் பாடல் என்ற வடிவத்தை, அதன் அழகியலை அப்படியே கொண்டு, உள்ளடகத்தில் மட்டுமே எதிர்ப்பு என்ற தளத்தில் (பிரச்சாரமாய்) வெளிப்படுவதாக தோன்றுகிறது. பல வித்தியாசங்கள் இருந்தாலும், எலீட்தன்மையோடு வேறு பட்டாலும், நாட்டுபுறப்பாடலின் அழகியல் ஏதோ ஒரு விதத்தில் சாஸ்திரிய மற்றும் தரப்படுத்தப் பட்ட இசை வடிவங்களை 'ஒத்து இயைந்த கரகரப்புடனேயே' இருக்கும். அதனாலேயே 'மேல்மட்ட' ரசனைக்கும் ஏதோ விதத்தில் உவப்பானதாகவே இருக்கிறது. கானா பாடல்கள் தரப்படுத்தப் பட்ட இசைகளுக்கு நேரெதிரான அழகியலை கொண்டிருப்பதாகவும், எலீட் ரசனையை உறுத்துவதாகவும், அதன் அழகியல் நியதிகளை குப்புற போடுவதாகவும் தோன்றுகிறது, அந்த வகையில், சினிமாவில் அது கொச்சைபடுத்தப் பட்டாலும், கானா பாடல்கள் மட்டுமே தமிழின் எதிர்பிசையாக எனக்கு தோன்றுகிறது.

பின் குறிப்பு 1: பல கானா பாடல்கள் பெண்கள் குறித்த மலினமான கருத்துக்களை முன்வைப்பதாகவும், வழக்கமான 'பெண்கள் ஏமாற்றுபவள்' , 'சீறும் பாம்பை நம்பினாலும்,சிரிக்கும் பெண்னை நம்பகூடாது' போன்ற ஆட்டோ வசனங்களை ஒத்த 'தத்துவங்களை' கொண்டதாகவும் இருப்பதை காணலாம். இதற்கு முக்கிய காரணம் ஆண்களாலேயே கானா படைக்கப்படுவதும், எல்லா சமூகங்களை போல அடித்தட்டு சேரி சமூகமும் ஆணாதிக்கமாய் இருப்பதுவும் என்று தோன்றுகிறது. இது உள்ளடக்கதுடனான ஒரு பிரச்சனையே அன்றி, வடிவம் அழகியல் சார்ந்த பிரச்சனையாக எனக்கு தோன்றவில்லை.

பின் குறிப்பு 2: நண்பர் சுந்தர மூர்த்தி 'மழை பெஞ்சி ஊரெல்லாம் தண்ணி' என்ற நாட்டு பாடலை அடியொற்றி, பாடப்படும் பாடல்கள் 'கானா வகையில் சேருமா?' என்று கேட்டிருந்தார். மேலே உள்ள எனது விளக்கப்படி அதை கானா என்ற genreயில் சேர்க்க முடியாது என்றே நினைக்கிறேன். சுந்தரமூர்த்தியின் கேள்வியின் காரணமாகவே என் அவதானிப்புகள் இந்த பதிவாக மாறியுள்ளது. அதற்கு அவருக்கு நன்றி!

Post a Comment

25 Comments:

Blogger கறுப்பி said...

ரோசாவசந்த் கானாப் பாடல்கள் மட்டுமல்ல எல்லா சினிமாப் பாடல்களுமே பெண்களை பண்ணுவதாகத்தான் அனேகமாக இருக்கின்றன. ஆனால் கானாப்பாடல்கள் ஒரு இல் பாடுவதற்கும் ஆடுவதற்கும் மிகவும் ஏற்றதாக இருக்கின்றன. அதனால் நான் அவற்றைக் கொஞ்சம் பாடமாக்கி வைத்திருப்பேன்.

3/30/2005 12:52 AM  
Blogger Jayaprakash Sampath said...

நீண்ட நாட்கள் கழித்து, என் ரசனை லெவலுக்கு இறங்கி வந்து எழுதியிருக்கிறீர்கள். அதுக்கு முதலில் நன்றி. கானாவைப் பொறுத்த மட்டில், ஸ்கூல் லெவலிலேயே எனக்கு அறிமுகமாகிவிட்டது.. 'கமலுக்கும் ரஜினிக்கும் சண்டை' என்ற பாடல் என்று நினைக்கிறேன். ஆனால், அவை பெரும்பாலும், பிரபலமான பாடல்களின் ரீமிக்ஸாகத்தான் இருந்தது. கல்லூரியிலும் ஹாஸ்டல் விடுதிகளிலும் சில கானா விற்பன்னர்கள் இருந்தனர். அவர்கள் மூலமாகவும் சில பாடல்களைக் கேட்டிருக்கிறேன். வா முனிம்மா, பெரம்பூரு லோகோ... , வந்தனம் வந்தனம், ...சென்னையின் மணத்தை சுவாசிக்காதவர்களுக்கு, இந்த கானா கலாசாரம் புரியாது. ' நான் தெனந்தோறும் ரிக்சா ஓட்டிப் பொழைக்கிறேன்'' என்ற பாடல் ஒரு அற்புதமான பாடல். " பெடலுக்கட்டைய மெரிக்கும் போது மாரு கொஞ்சம் வலிக்கிது... " என்ற வரிகளில் இருக்கும் புலம்பலை, சென்னை மொழியைத் தெரிந்தவர்களும், ரிக்ஷாவில் பயணித்தவர்களும், ரிக்ஷா ஓட்டுபவர்களும் மட்டும் தான் எளிதில் கண்டு கொள்ள முடியும். இளையராஜா கானாப் பாடல்கள் பக்கம் போகாதற்கு காரணம், அவர் பண்ணைபுரக் கிராமத்தில் இருந்து வந்தவர் என்றால், தேவா, கானாவில் கொடிகட்டிப் பறந்ததற்குக் காரணம், அவர் சென்னைச் சேரிகளில் புரண்டு வளர்ந்ததுதான் காரணம். ரஹ்மானின் பாய்ஸில், ஒரு நல்ல கானா இருந்தது கவனித்தீர்களா? ( ஜெயிலில் சித்தார்த்தும், அவர் நண்பர்களும் பாடுவார்கள்)

3/30/2005 1:06 AM  
Blogger Narain Rajagopalan said...

வசந்த், பதிலெழுதப் போய் அதுவே பதிவு நீளத்திற்கு போய்விட்டதால், இதற்கான பதிலை என் பதிவுலேயே பதிகிறேன்

3/30/2005 2:00 AM  
Blogger Narain Rajagopalan said...

This comment has been removed by a blog administrator.

3/30/2005 2:12 AM  
Blogger Thangamani said...

கலகுக்குங்க ரோசா!
எனக்கும் காத்தடிக்குது காத்தடிக்குது புடிக்கும். 'பாவம் அந்த வயித்துக்கு பசிக்கச் சொல்லி தந்ததாறு?' யாரும் சொல்லித்தராத விசயங்களில் இருந்தே புரிதலின் முதல் இலை துளிர்க்கிறது.

3/30/2005 3:08 AM  
Blogger Venkat said...

வஸந்த் - நல்ல பதிவு. கவலைப்படாதே சகோதரா தமிழ்த்திரையிசை உலகில் ஒரு மைல்கல். தேவா இதற்கு முன்பே அடித்தளம் போட ஆரம்பித்துவிட்டார் (லாலாக்கு லோல் டப்பிம்மா - சூரியன்).

லயோலா, விவேகாவில் கானா கிடையாது என்பதை என்னால் நம்பமுடியவில்லை. ஐஐஎஸ்ஸியில் படிக்கும் பொழுது பல நண்பர்கள் (பெரும்பாலும் இந்த இரண்டிலிருந்தும் வந்தவர்கள்) நிறைய கானா பாடுவார்கள் (அப்பொழுது கானா என்ற பெயர் அவ்வளவு பிரசித்தம் கிடையாது). உதாரணமாக - வா முனிம்மா மெட்டில் வரும் வா லைலா (லயோலா) என்ற பாடல் நினைவிருக்கிறது.

கும்பகோணத்தில் படிக்கும்பொழுதும் நிறைய சினிமா பாடல்களை உள்ளூர் விஷயங்களைப் போட்டு மாற்றிப்பாடுவோம் (இந்தக் கச்சேரிகளில் பெரும்பாலும் டேப்ளா (டேபிளில் போடும் தபேலா) வாசிப்பது நாந்தேன். (எனக்கு சில ரசிகர்கள் கூட உண்டு). நானொரு சிந்து, பட்டுக்கோட்டை அம்மாளு போன்ற மெட்டுக்களில் பாடும் பாடல்களை ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் - அபச்சாராம் ;)

நெறைய எழுதகீது மாமு. ப்ளாகர் கொதறிப்புடும் என்பதால் இதனை இத்துடன் (யார்டா அங்க, அண்ணாத்தேக்கு ஒரு ஸோடா ஒடி)

3/30/2005 11:23 AM  
Blogger Vijayakumar said...

வசந்த் வெகு சுவையான ஒரு கானா அலசல். Flow வெகு சீராக செல்லுகிறது கட்டுரை.

சினிமா பாட்டை தவிர, சென்னையில் சில ஆண்டுகளாக வசித்த போது நம்ம எலெக்டிரிக் ட்ரெய்ன்ல தானுங்கோ நான் கேட்ட live கானா பாட்டுகள்.

// பச்சையப்பா கல்லூரி, அதன் தலித் மாணவர்கள் இந்த பிரபலப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்ததாக என் எண்ணம்.//

தலீவா! ஜாதிகளை உள்ளே இழுக்காம எழுதவே மட்டீங்களா?

3/30/2005 11:46 AM  
Blogger இளங்கோ-டிசே said...

ரோசாவசந்த்,
கானா பற்றிய விரிவானதும், ஆழமானதுமான நல்லதொரு பதிவு இது. ஒரு காலத்தில் கானாப்பாடல்களை வெறிபிடித்தமாதிரி, கேட்டபடி அலைந்திருக்கின்றேன். அந்த ஆசைக்கு ஐங்கரன் போன்ற இசைத்தட்டு வெளியிடுபவர்கள், கானா கலக்கல், கானா மன்னன் தேவா என்று பலவிதமான தெரிவுகளில் இசைத்தட்டுக்கள் வெளியிட சேகரித்தெல்லாம் வைத்திருந்திருதேன். கானாப் பாடல்கள் கேட்ட அனுபவந்தான், என்னை இப்போது Rapபக்கம் இழுத்துக்கொண்டுபோனதோ என்று சிலவேளைகளில் நினைப்பதுண்டு. நரேன் தனது முதற்பதிவில் கூறியதுமாதிரி கானாவிற்கும், Rap பாடல்களுக்கும் பலவிதமான ஒற்றுமைகளை அவதானிக்கலாம். நேரம் வாய்த்தால் இரண்டையும் இணைத்துப்பார்த்து ஒரு பதிவாவது எழுதிட ஆசை. பார்ப்போம்.

3/30/2005 1:09 PM  
Blogger Narain Rajagopalan said...

கானாவுக்கும், ராப்புக்கும் இடையே நிறைய சம்பந்தமிருக்கலாம் என்று தோன்றுகிறது. எனக்கு தெரிந்த காரணங்கள்.

1. இரண்டுமே அடித்தட்டு, புறக்கணிக்கப்பட்ட மக்களால் பாடப்படுவது
2. இரண்டுமே கிண்டலாக, நக்கலாக, ஆதிக்க சக்தியினை இடைச்செருகலாய் திட்டுவது (கறுப்பினத்தவர்களுக்கு "வெள்ளைக்காரர்கள், நம்மாளுக்கு "அய்யிரு")
3. சுஃபி பாடல்களையொத்த ஏகாந்தமான மனநிலையை பாடலிலும்,கேட்பவர் மனதிலும் கொண்டுவருவது
4. மிக முக்கியமாக, பொது கட்டுப்பாடுகளையும், நியதிகளையும் உடைத்தெறிவது (குடித்து விட்டு பாடுதல், கையில் கொடுத்ததை கொண்டு இசையமைப்பது)
5. தங்களின் இருப்பின் ஆளுமையை ரசிக்கும்படியாக செய்வது.

3/30/2005 1:33 PM  
Blogger ROSAVASANTH said...

கருத்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

கறுப்பி, நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் நான் குறிப்பிட விரும்பியது, பல கானாக்கள் காதலியால் வஞ்சிக்கப்பட்ட கருவின் அடிப்படையில் அமைந்து இருக்கும். அத்தகைய பாடல்களை கணக்கில் கொண்டு கானாமீதான சின்ன விமர்சனமாய் அதை சொன்னேன். நன்றி!

இகாரஸு,
//நீண்ட நாட்கள் கழித்து, என் ரசனை லெவலுக்கு இறங்கி வந்து எழுதியிருக்கிறீர்கள். //

என்ன சொல்ல வரீங்கன்னு புரியுது. அப்பப்ப முயற்சி பண்றேன். பாய்ஸ் படத்தின் கானா பற்றி நீங்கள் குறிப்பிட்ட பின், அப்படி இருந்ததாக ஒரு நினைவு, கனவில் வந்த காட்சிபோல், பிரமையடிக்கிறது. நான் படத்தை கொஞ்சம் சிக்கலான சூழ்நிலையில், ரவி ஸ்ரீனிவாஸிற்கு பதில் சொலும் ஒரு கட்டாயத்தின் காரணமாய் பார்தேன். மீண்டும் பார்க்க முடியுமா தெரியவில்லை. கருத்துக்கு நன்றி!

நாரயணன், உங்க பதிவிலே வந்து பதில் தரேன், அல்லது இன்னும் விரிவா பிறகு பார்போம். கருத்துக்கும் தனி பதிவுக்கும் நன்றி!

தங்கமணி கருத்துக்கு நன்றி!

வெங்கட், நீங்கள் சொல்வது சரியாய் இருக்கலாம். நான் லயோலா, விவேகா னந்தாவில் கானா இல்லவே இல்லை என்று சொல்லவரவில்லை. கானாவை பிரபலபடுத்தியதில் பங்கு இருக்காது என்றுதான் சொன்னேன். நிச்சயம் எல்லாமே கல்லூரிகள் என்ர அளவில் ஒன்றுக்கு ஒன்று கொடுக்கல் வாங்கல் என்று பாதிப்பு இருக்கும், ஒரே ட்ரெயினில், பஸ்ஸில் போகவேண்டியிருக்கும். கானா வின் பாதிப்பு தூத்துகுடி வவுசி கல்லூரிவரை கூட அடிக்கலாம். நான் சொல்ல வந்தது பச்சையப்பா, நந்தனம் கலை கல்லூரிகள் போல் கானா கல்லூரி வாழ்வுடன் கலந்திருக்குமா என்பது பற்றியே. ஒருவகையில் விவேகாநந்தாவில் படிப்பது நல்ல பையனின் அடையாலமாகவும், பச்சையப்பாவில் படிப்பதி 'தறுதலை'யாக இருப்பதன் அடையாளமாக பார்க்கபடுவதும் உண்மைதானே. ஆனால் யதார்தத்தில் கொஞ்சம் அப்படி இப்படித்தானே இருக்கும். (ஐ. ஐ எஸ்சியில் அதிகம் படிக்கும் ஜெயின் கல்லூரி பையன்களிடமும் கானா உண்டு. எலெக்ட்ரிக் ட்ரெயினில் கேட்டிருக்கிறேன். ஆனால் நான் குறிப்பிடும் கானாக்கள் பச்சையப்ப வெரைட்டி என்றுதான் நினைக்கிறேன்.)உங்கள் கருத்துக்கு நன்றி!

அல்வாசிட்டி விஜய், உங்கள் கருத்துக்கு நன்றி. கானா தனது வேர்களை சென்னை நகர்புற தலித் மக்களின் அடையாளத்தில்தான் கொண்டிருக்கிறது என்பது தெரிந்த விஷயம். அது குறித்து நான் அதிகம் பேசவில்லை என்பதுதான் உண்மை. ஒரே ஒரு வரி எழுதியது உங்களை ஏன் உறுத்துகிறது என்பது மிகவும் ஆழமாய் ஆராய்சி செய்ய வேண்டிய விஷயம். சாதிரீதியாய் தெருக்களும் வசிப்பிடங்களும் அமைந்த திருநெல்வேலி வாழ்க்கையில் அது உங்களை உறுத்தவில்லை. எத்தனையொ செய்திகளில் உறுத்தவில்லை. கானாவின் வேர்களின் அடையாளமாய் நான் சொன்ன ஒரு வரியில் இருக்கும் தலித் என்ற வார்த்தை உங்களை உறுத்துகிறது. இதை சமூகத்தின் மன நோய் கூறாகத்தான் என்னால் பார்க்க முடிகிறது. நான் பலமுறை குறிப்பிட்ட லாஜிக் இதை மாற்றி சொல்பவனிடம் பிரச்சனை இருப்பதாக திசைதிருப்பும். மேலும் உங்கள் தகவலுக்காக தலித் என்பது வெறும் சாதிய அடையாளம் கிடையாது.

டீஜே, கருத்துகளுக்கு நன்றி!

3/30/2005 1:51 PM  
Blogger ROSAVASANTH said...

நா.., நான் எழுதிகொண்டிருக்கும்போது இட்டிருக்கிறீர்கள். நீங்கள் 3வதாய் சொன்ன சூபி மனநிலை மட்டும் சரிவராததாய் ஓவராய் படுகிறது. சூபி இசை/மனநிலையுடன் ஒப்பிட எதுவும் இருப்பதாக தோன்றவில்லை. உங்களுக்கு தோன்றினால் எழுதவும். மற்ற கருத்துக்களை ஏற்றுகொள்கிறேன். மீதி உங்கள் பதிவில், நன்றி.

3/30/2005 1:54 PM  
Blogger Narain Rajagopalan said...

//தலித் என்பது வெறும் சாதிய அடையாளம் கிடையாது.//
அதே. அதே. There ends the issue. தலித்தினை சாதியாக மட்டும் பார்க்காதீர்கள்.

வசந்த், சுஃபி என்று சொன்னது ஒரு உவமையாகவே. சுஃபி பாடல்களில் வெளிவரும் ஒரு ஒன்றுபட்ட, ஏகாந்தமான, இசைமட்டுமே குறியாயுள்ள விஷயத்தினை மட்டுமே சொல்ல விரும்பினேன். மற்றபடி, சுஃபியின் ஆன்மிகத் தேடலுக்கும், கானாவின் மண்ணுலகத் தேடலுக்கும் ரொம்பதூரம்.

//பச்சையப்பாவில் படிப்பதி 'தறுதலை'யாக இருப்பதன் அடையாளமாக பார்க்கபடுவதும் உண்மைதானே. ஆனால் யதார்தத்தில் கொஞ்சம் அப்படி இப்படித்தானே இருக்கும்.//
இருக்கலாம். ஆனால், நல்ல கல்லூரிகளால் வெறும் உத்தியோகஸ்தனைத் தான் கொண்டு வரமுடிந்தது. தமிழகத்தின் மிகச் சிறந்த கலைஞர்கள், கலைக் கல்லூரிகளிலிருந்தும், "தறுதலை" பாடசாலைகளிடமிருந்தும்தான் வந்திருக்கிறார்கள். இதனால், தறுதலையாய் இருப்பது அவசியமானது என்று சொல்லவரவில்லை. நான் இங்கு சொல்ல வந்தது ஒரு செய்தி மட்டுமே. மற்றபடி உங்கள் கருத்துக்களோடு ஒத்துப்போகிறேன்.

3/30/2005 2:19 PM  
Blogger Narain Rajagopalan said...

This comment has been removed by a blog administrator.

3/30/2005 2:21 PM  
Blogger ROSAVASANTH said...

தேங்க்ஸ்பா!

3/30/2005 2:23 PM  
Blogger Jayaprakash Sampath said...

//நல்ல கல்லூரிகளால் வெறும் உத்தியோகஸ்தனைத் தான் கொண்டு வரமுடிந்தது. தமிழகத்தின் மிகச் சிறந்த கலைஞர்கள், கலைக் கல்லூரிகளிலிருந்தும், "தறுதலை" பாடசாலைகளிடமிருந்தும்தான் வந்திருக்கிறார்கள். //

ஹியர்... ஹியர்....

3/30/2005 2:40 PM  
Blogger Narain Rajagopalan said...

கலீஞர் பிரகாஷ் வால்க!! ;)

3/30/2005 2:55 PM  
Blogger Vijayakumar said...

//சாதிரீதியாய் தெருக்களும் வசிப்பிடங்களும் அமைந்த திருநெல்வேலி வாழ்க்கையில் அது உங்களை உறுத்தவில்லை. எத்தனையொ செய்திகளில் உறுத்தவில்லை//

ஆஹா... ஆரம்பச்சிட்டாரைய்யா... ஆரம்பிச்சிட்டாரு.... எனக்கு காது எல்லாம் வலிக்குது கேட்டு கேட்டு... அந்த விசயம் எல்லாம் தெரியாம தான் தெளிவில்லாம வெலங்காம இருக்கேன். :-)


//ஒரே ஒரு வரி எழுதியது உங்களை ஏன் உறுத்துகிறது என்பது மிகவும் ஆழமாய் ஆராய்சி செய்ய வேண்டிய விஷயம். //

//கானாவின் வேர்களின் அடையாளமாய் நான் சொன்ன ஒரு வரியில் இருக்கும் தலித் என்ற வார்த்தை உங்களை உறுத்துகிறது. இதை சமூகத்தின் மன நோய் கூறாகத்தான் என்னால் பார்க்க முடிகிறது.//

இது வேலைக்காகது. இப்போதைக்கு விடு ஜூட்டு... ஆராய்ச்சி பண்ணிங்கன்ன ரிசல்டை கட்டாயம் சொல்லுங்க. அதே மாதிரி ஆராய்ச்சிக்கு சமூதாய மனநோய் கண்டுபிடிக்க என்னோட மனசு தேவைப்பட்ட சொல்லுங்க சோதனை எலி மாதிரி வந்து உதவுறேன்.

இப்போதைக்கு அப்பீட்டு ஆகிட்டு அடுத்த பதிவுக்கு வாறேன். ஆளைவிடுங்க சாமி

(எங்கிருந்தோ ஒரு குரல்)புற முதுகிட்டு ஓடும் *****

ஓட்றா ஓட்றா ஒட்றா....

3/30/2005 3:19 PM  
Blogger ROSAVASANTH said...

நன்றி விஜய். உங்கள் நகைச்சுவை உணர்வு, மற்றும் நேர்மையை பாராட்டணும்னு ஆசதான். ஆனால் எகப்பட்ட பேர் அப்படி இருப்பதனால ஸாரி!

3/30/2005 3:43 PM  
Blogger ROSAVASANTH said...

// "தறுதலை" பாடசாலைகளிடமிருந்தும்தான் வந்திருக்கிறார்கள்.......//

நாராயணன், நான் 'தறுதலை' என்று கோட்டேஷன்குள்ள சொன்னது, எனக்கு தறுதலை மேலுள்ள ஒரு நல்ல அர்த்தத்தில்தான்!

3/30/2005 4:04 PM  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

வசந்த், நாராயண்,
கானா பற்றிய அறிமுகம், விளக்கங்களுக்கு நன்றி. இது போன்ற கணப்பொழுது பாட்டுகள்/கவிதைகள் எல்லா இடங்களிலும், அந்தந்த சூழ்னிலைக்கு தகுந்தபடி இருக்கும் என்று நினைக்கிறேன். சென்னையிலிருந்து அதிக தொலைவில் (மொழியில் கூட வித்தியாசம்) இல்லாத வேலூரில் இரண்டு கலைக்கல்லூரிகளில் தான் படித்தேன். மதியச்சாப்பாட்டு இடைவெளியில் இதுபோன்ற பாட்டு/ஆட்டங்கள் உண்டு. கான்வெண்டில் படித்த வகுப்பு நண்பன் ஒருவன் ஆங்கிலத்தில் கூட இப்படி பாடுவான்.

ஒன் ஹாட்டு சம்மரு மார்னிங்
எ கேர்ள் வெண்ட் fஆர் வாக்கிங்

என்று பாடுவதை நாங்கள் ஆங்கிலம் பேச வராத நாட்டுப்புறத்துக்காரகள் வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருப்போம்.

காமன்லி மை மைண்ட் இஸ் கோல்டு - ஒரு
காம்பெடிஷன் வந்து விட்டா போல்டு

போன்று சினிமாப்பாடல்களையும் சரளமாக 'மொழி பெயர்த்து' பாடுவான்.

இதேபோல தெருக்கூத்துகளில் கட்டியங்காரன்/கோமாளி கதைக்கு சம்பந்தமில்லாதவாறு அந்த சூழ்னிலைக்குத் தகுந்தவாறு பாடுவார்.

மிருதங்கம் வாசிக்கும் மன்னாரைப் பார்த்து:

மன்னாருன்னா மன்னாரு - இவரு
மகிமையுள்ள மன்னாரு - அந்த
ராவணன ராமர் தானே கொன்னாரு.

ராஜா வேஷம் கட்டிய, முன்னாள் ராணுவ வீரரைக் காட்டி:

இந்த -
பாழாப்போன நடேசனுக்கு
பட்டாளத்துல குடித்தனம் - உனுக்கு
யார்ரா குடுத்தான் தொரத்தனம்

ஒருமுறை மேடை சரிந்து விழுவது போல இருந்த சமயத்தில் பாடிய இன்னொரு கணப்பொழுதுப் பாட்டு ஒன்று நன்றாக நினைவில் இருக்கிறது.

இன்னும் ஒரு அவரு - இங்க
இடியப்போவுது சுவரு - இது
கவர்மெண்டு பவரு - நீ
எடத்த வுட்டு நவுரு

3/30/2005 8:52 PM  
Blogger ROSAVASANTH said...

//ஒன் ஹாட்டு சம்மரு மார்னிங்
எ கேர்ள் வெண்ட் fஆர் வாக்கிங்.//

இது சினிமா பாட்டாக இருக்கிறது. நாளை வருகிறேன். கருத்துக்கு நன்றி!

3/30/2005 11:30 PM  
Blogger ROSAVASANTH said...

சுமு, கருத்துக்கு நன்றி. ஹாட் சம்மரு மர்னிங் சினிமா பாடலாக வந்துள்ளது . ஒரு காலத்தில் சிலோன் ட்ர் தமிழ் சேவையில் பிரபலமானது. வெகு காலம் கழித்து தூள்.காமில் பார்க்க முடிந்தது. இப்போது ஒருவழியாய் தேடி எடுத்தேன்.

http://www.tfmpage.com/cgi-bin/stream.pl?url=http://www.dhool.com/sotd/hotsummer.rm

நீங்கள் சொல்வது போன்ற கானாக்கள் எல்லா கல்லூரிகளிலும் இருக்கும் என்பது உண்மைதான்!

3/31/2005 1:53 PM  
Blogger வித்யாசாகரன் (Vidyasakaran) said...

கானா பத்தி இல்லாம, 'காத்தடிக்குது ...' பாட்டைப் பத்தி..
அந்தப் பாட்டுல, இடையில கொஞ்ச நேரத்துல ப்ரபுதேவாவும், மயில்சாமி, தாமு எல்லோரும் சேர்ந்து, ராமாயணத்தையே நடன-நாடகமா நடிச்சுக் காட்டியிருப்பாங்க. கவனிச்சீங்களா? எத்தனை தடவை பாத்தாலும் அலுக்காது...

- வித்யாசாகரன்

4/01/2005 9:36 PM  
Blogger ROSAVASANTH said...

ஆமாம், இதை நாராயனன் தான் பதிவில் எழுதியிருப்பார். உங்கள் கருத்துக்கு நன்றி!

4/02/2005 8:21 PM  
Blogger ROSAVASANTH said...

http://urpudathathu.blogspot.com/2005/03/blog-post_29.html

4/02/2005 8:22 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter