ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Friday, April 28, 2006

1. தேர்தல் -2006

வழக்கத்தை மாற்றாமல் ஒரு பல்லவியுடன் தொடங்க வேண்டுமென்றால், நண்பர் ஜோ கேட்டுக் கொண்டபடி, தேர்தலை முன்வைத்து பதிவு எழுதத் தொடங்கினால், நடக்கும் கூத்துக்களை பார்த்து எரிச்சல் என்ற வார்த்தையை எல்லாம் தாண்டி ஏதோ ஒன்று வருகிறது. அந்த எதோ ஒன்றில் ஆட்பட்டு, இது போல வலிந்து எழுதிய எதையும் சொதப்புவதே என் வழக்கம் என்றாலும், சொதப்புவதால் என்ன குடிமுழுகப் போகிறது என்று நினைத்து தொடங்கியிருக்கிறேன்.

தேர்தல் அரசியலில் எதற்கும் கொஞ்சம் கூட விவஸ்தை கிடையாது என்பது காலகாலமாய் தெரிந்த விஷயமானாலும், இந்த அளவு கேவலமாய் எந்த தேர்தலும் நடந்ததாய் தெரியவில்லை. இந்திராகுமாரி திமுகவில் சேர்வதற்கு, கலைஞரை சந்திக்க சில நிமிடங்கள் முன்பு, நினைவு படுத்தப் பட்டு, பேண்டேஜால் கையில் பச்சை குத்தியிருந்த ஜெயலலிதாவின் படத்தை மறைத்து கொண்டதை, கேவலமான கூத்துக்களின் உச்சமாய் சொல்லலாம். மற்றபடி வைகோவின் பேச்சுக்கள், சரத்குமார் என்று தொடங்கி பெரிய பட்டியலே உள்ளது. இந்த தேர்தல் கூத்துக்களின் மூலம் ஒரு குறிப்பிட்ட தரப்பை 'வாழ்வா சாவா' என்ற தீவிரத்தில் ஆதரிக்கத் தோன்றாமல், எல்லோருக்கும் ஆர்வமற்று போவதும் ஒருவகையில் நல்லதிற்குதான் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த தேர்தலின் மூலம் நடக்க வாய்ப்புள்ள, மிக மிக ஆபத்தான, தமிழகம் அதிகம் விலை தரவேண்டி வரக்கூடிய நிகழ்வு, ஜெயலலிதா மீண்டும் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியமைப்பது என்று நினைக்கிறேன். 'சோ'க்கள், இதர பார்பனிய சார்பு ஆசாமிகள் அதிமுக திரும்ப வருவதை பிரச்சாரம் செய்வதில் ஆச்சரியம் எதுவுமில்லை. நான் வேறு மாதிரி நினைத்த சில நண்பர்கள் கூட(வலைப்பதிவில் அல்ல), விரக்தியின் விளைவாய், ஜெயலலிதா மீண்டும் வந்தால் கூட பரவாயில்லை என்று நினைப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது, எனக்கும் அத்தகைய விரக்தியும் வெறுப்பும் இருக்கிறது என்றாலும்.

திமுக (ஒருவேளை பெரும்பான்மை பலத்துடன்) ஆட்சிக்கு வந்தால் எந்த பெரிய நல்லதும் நிகழப் போவதில்லை என்பது மட்டுமில்லாமல், குடும்பத்தின் கொள்ளை முன் பார்திராத வண்ணம் நடைபெறும். ஆட்சி, வாரிசின் கைகளில், எல்லோரும் உணர்ந்து எதிர்பார்த்து ஏற்றுகொள்ளும் லாவகத்துடன், வழுக்கிகொண்டு விழுவதும் நடைபெறும். இதிலெல்லாம் துகளளவும் ஐயம் இல்லை. அது தவிர பாமக போன்ற திமுகவின் தோழமை கட்சிகள், அதிகாரமும் சாதகமாய் இருந்தால், 'தமிழ் கலாச்சார பாதுக்காப்பு நடவடிக்கை'களாக, என்னவென்ன நடுத்தெரு அராஜகத்தில் ஈடுபடுவார்கள் என்பதும் ஊகிக்க முடியாதது அல்ல.

ஒரமாய் தேர்தல் அறிக்கையில் இருந்ததை, எல்லோரும் சேர்ந்து 'விவாத'த்திற்கு உள்ளாக்கி, இப்போது ஏற்பட்டு இருக்கும் நிர்பந்தத்தில், திமுக ஆட்சிக்கு வந்தால் 'இலவச கலர் டீவி கொடுக்கும் திட்டம்' நிஜமாகவே தொடங்கப் படும் என்றே தோன்றுகிறது. 'கலர் டீவி கொடுப்போம்' என்ற வாக்குறுதியை விட கேலிக்கூத்தாக, அதை உண்மையிலேயே செயல்படுத்தத் தொடங்கும் நடவடிக்கைகள் இருக்கும். திமுகவினர் கலர் டீவி திட்டத்தில் செய்யப் போகும் ஊழலும், ஒரு கலர் டீவியை பெற ஓவ்வொரு குடிமகனும், எல்லா மட்டங்களிலும் அளிக்கப் போகும் லஞ்சமும் என்று வரலாறு காணவியலாத லஞ்ச லவாண்யக் கூத்துக்கள் நடைபெறும். (எனக்கு தெரிந்து ஒரு அம்மா, சென்ற திமுக ஆட்சியில், நிராதரவான பெண்ணுக்கு அளிக்கப்படும் 10000ரூபாயை வாங்க, 4000ரூபாய் +பல முறை அலைச்சல்கள் + சிபாரிசுகள் கொடுக்க வேண்டியிருந்தது.)

இது தவிர தலித் ஆதரவு நிலைபாடு கொண்ட அனைவரும், விடுதலை சிறுத்தைகள் எந்த அளவு திமுகவால் கேவலப்படுத்தப் பட்டு அதிமுக பக்கம் சேர நேர்ந்தது என்பதையும், பாமக பல சால்ஜப்புகளை சொல்லி அது குறித்து முனகக் கூட முன்வராமல் செய்த துரோகத்தையும் மறக்க இயலாது. தமிழ் பாதுகாப்பு இயக்கத்திற்கு தலமை என்றெல்லாம் கேடயமாக பயன்படுத்தப் பட்ட திருமாவளவன், அதிகாரம் என்று வரும்போது பொருட்டில்லாமல் போவதை கவனிக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தில் கருணாநிதி, ஃபார்வார்டு பிளாக்கின் 'சிங்கம்' சின்னப் பிரச்சனையை முன் வைத்து, தேவர்களின் ஜாதிவெறி பெருமையின் குறியீடாய் இருக்கும் 'சிங்கம்' என்ற வார்த்தையில் விளையாடி, "சிறுத்தை நடமாடும் போது சிங்கம் ஏன் நடமாடக் கூடாது?" என்று கேட்டதும், அதை திமிராய் மீண்டும் நியாயப் படுத்தியதையும் கணக்கில் கொள்ளாமல் இருக்க முடியாது. (திமுகவை எதிர்க்கும் பலரும் இதை பெரிதுபடுத்தாதையும் கவனிக்க வேண்டும்.)

இதையெல்லாம் தாண்டியே ஜெயலலிதா மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதே, சாத்தியமாகும் தேர்தல் முடிவுகளில், மிக மிக ஆபத்தானது என்று நினைக்கிறேன். மூன்று மாதம் முன்பு வரை கூட, வைகோ தாய் சொல் மறந்து 'அம்மா'வின் செருப்படி தேடி சரணடைந்த போதும் கூட, ஜெயலலிதா மீண்டும் வரமாட்டார் என்று மிகவும் நம்பிக்கையாய் இருந்தது. இப்போது அந்த நம்பிக்கை ரொம்பவே வலுவிழந்து வருகிறது. ஏற்கனவே ஜெயலலிதா மீது மக்களுக்கு பெரியதாய் எந்த கோபமும் இல்லை. சொல்லப் போனால், நிவாரண நெரிசலில் மக்கள் நசிங்கி செத்த கணக்குகளை தாண்டி, மழை வெள்ள நிவாரணப் பணிகளில் ரெண்டாயிரம் 'ஒழுங்காய் கிடைத்தது' பற்றி மக்கள் கூட்டம் சந்தோஷமாகவே இருக்கிறது. திமுக ஆதரவு சேரிகளில் கூட, மக்கள் இந்த விஷயத்தில் நிறைவாகவும், திமுக 'இந்த பக்கமே வரவில்லையே' என்ற ஆதங்கத்தோடும் இருப்பது தெரிகிறது. அல்லது அப்படி ஒரு மாயையாவது இருக்கிறது. வேறு காரணங்களாலும் திமுக மீது அவநம்பிக்கையும் அதிகரித்து வருவதாகவே தெரிகிறது. அதற்கு மிகப் பெரிய புண்ணியத்தை சன் டீவி, தனது கச்சாவான விளம்பர பாணியினால் சேர்த்து கொண்டிருக்கிறது. ஒரு வகையில் திமுக மிடையத்தின் நட்பும் அன்பும் இல்லாமல் தவிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதன் மிக பலம் வாய்ந்த ஊடகங்களான சன் டீவி, தினமுரசு, தமிழ்கரன் விளம்பர பாணி பிரசாரம் எல்லாம் எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. மழை பெய்வதையும் வெள்ளத்தையும் கேமாராவில் படம் பிடித்து காட்டினால் கூட,' சன் டீவிக்காரன் புளுகறான்' என்று மக்கள் சொல்கிறார்கள்.

சென்ற சட்டசபை தேர்தலின் போதும், கலைஞரின் ஆட்சிமீது மக்களுக்கு பெரிய கோபம் எதுவும் இல்லைதான். ஆனால் மக்கள் கலைஞர் மீது கோபமில்லாமல் இருப்பதற்கும், ஜெயலலிதா மீது பெரிய கோபம் இல்லாமல் இருப்பதற்கும் மிக பெரிய உளவியல் வித்தியாசம் இருக்கிறது. ஜெயலலிதா மீது வண்டி வண்டியாய் குற்றச்சாட்டு ஆதரங்களோடு வருவதற்கும், தயாநிதி மாறன் நாட்டில் 'நேர்மைக்கு' பெயர் போன டாடா நிறுவனத்தை மிரட்டியதாக 'செய்தி = வதந்தி' வந்து பரவுவதற்கும் கூட வித்தியாசங்கள் உண்டு. 'இந்தாளு ஆட்சிக்கு வந்தால் மழை எப்படி பெய்யும்?' என்று கருணாநிதி பற்றியும், 'அந்த அம்மா என்ன செய்யும்?' (அல்லது 'அந்த மகாராசன் என்ன செய்வான்?') என்று ஜெயலலிதா எம்ஜியார் பற்றியும், கேட்டு பழகிப் போன, கருப்பு வெள்ளை உளவியலுக்கு அடிமையாகிப் போன சமூகம் தமிழர்களுடையது. அதனால் 96ஐபோல ஜெயலலிதா மீது மக்கள் ஆத்திரம் இல்லாத நிலையில், எந்த கணத்திலும் மனம் மாறி அதிமுகவையே கடைசி நேரத்தில் வெற்றி பெறச் செய்யக் கூடிய சாத்தியம் உள்ளது. இத்தனையும் தாண்டி ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வரவில்லையெனில் மூச்சுவிட்டு கொள்ளலாம். அவ்வளவுதான்!

ஏன் ஜெயலலிதா வரக்கூடாது என்பதற்கு நீட்டி முழக்க வேண்டிய காரணங்கள் எதுவும் இல்லை. எனக்கு ஜெயலலிதா ஒரு நடிகை என்பதோ, ஒரு நடிகை ஆட்சியில் இருப்பதில் கேவலமோ, அவர் 'கன்னடத்தவர்' என்பதோ எந்த விதத்திலும் காரணமல்ல. அதையெல்லாம் பொதிவான விஷயங்களாக, தமிழகம் குறித்து பெருமை பட்டுகொள்ளக் கூடிய விஷயங்களாகவே நான் பார்கிறேன். ஆனால் ஜெயலலிதா கையில் மீண்டும் ஒரு ஐந்து வருட ஆட்சி, அதுவும் கடந்த ஐந்து வருடத்தை அங்கீகரிக்கும் வகையில் தொடர்ச்சியாக போனால், அவர் என்னவெல்லாம் செய்வார் என்பதை ஊகிக்க கூட முடியாது. லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை ஒரே வீச்சில் தூக்கி எரிந்ததையும், பின்பு பல பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுத்ததும், கடந்த ஐந்து வருட எதேச்சதிகாரங்களில், ஏராளத்தில் ஒரு உதாரணம் மட்டும்தான் என்றாலும், அதைவிட தெளிவான வேறு உதாரணம் இருக்க முடியாது. (அதையும் 'சோ'க்களும், வேறு பல சிந்தனையாளர்களும், துணிவான நடவடிக்கைகளாக, பாராட்டியதை பார்க்கவேண்டும்.) பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின் ஜே சற்று மாறியதாய் காட்டிகொண்டு தொடரப் போகும் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து இறங்கி வந்தாலும், மீண்டும் ஒரு வெற்றியில், அதுவும் தேர்தலை எதிர்கொள்ள 5 வருடங்கள் கையில் இருக்கும் சாதகத்தில் அவர் எந்த ஆட்டத்தையும் ஆடத் தயங்கமாட்டார். இந்த அளவிற்கு அராஜகமான நடப்புக்கள் திமுக ஆட்சியில் அதுவும், திமுக தலைமையிலான ஒரு கூட்டணி ஆட்சியில் நிச்சயமாய் நடைபெறாது என்று நம்பிக்கை கொள்ள முடியும்.

திமுக என்ன செய்யும் என்பதை ஊகிக்கவாவது முடியும். மேலும் திமுகவிற்கு பெரும்பான்மை கிடைக்க மிக மிக குறைந்த வாய்ப்பே உள்ளது. வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒரு கூட்டணி ஆட்சி என்ற வகையில், திமுக அதிமுகவை விட கூடுதல் ஜனநாயகத்துடனேயே நடந்து கொள்ளும் என்றுதான் கடந்த காலம் எடுத்துரைக்கிறது. ஸ்டாலின் கையில் லாவகமாக ஆட்சியை கலைஞர் தன் காலத்தில் நகர்த்தினாலும், அவரது மறைவுக்கு பிறகு, திமுக தொண்டர்கள் உட்பட பலரால் ஸ்டாலின் ஏற்றுகொள்ளக் கூடியவராக இருக்க மாட்டார். அப்போது தமிழக அரசியலில் நிகழும் மாற்றங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

சங்கராச்சாரியை உள்ளே போட்டதை முன்வைத்து ஞாநி போன்றவர்கள் 'சபாஷ் ஜே' போட்டபோது, சொன்ன கருத்தையே மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது. பார்பனர்களுக்கு சங்கராச்சாரியை விட முக்கியமான அடையாளம், மற்றும் தேவை ஜெயலலிதாதான். சங்கராச்சாரியை ஜே ஏன் உள்ளே போட்டார் என்பதன் சரியான பிண்ணணி இன்னமும் தெரியவில்லை, தெரியாமலே கூட போகலாம். ஆனால் பார்பனர்களுக்கு அது ஒரு எரிச்சல் மட்டுமே. அந்த காரணத்திற்காக கூட திமுகவை ஒரு நாளும் அண்டமாட்டார்கள் என்பதையே இப்போதும் நிருபித்து வருகிறார்கள். இந்துத்வவாதிகளின் நிலையும் அதுதான். பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்த சென்ற தேர்தலின் போதே, இந்து முண்ணணியும், பிராமண சங்கமும், அதிமுகவை வெற்றி பெறச் செய்ய விண்ணப்பிக்கும் அறிக்கைகளை தனிசுற்றாகவும், கோவில்களிலும் விநியோகித்தார்கள். இப்போது திமுகவும் கூட அசட்டுத்தனமாய் நம்புவது போல, சுப்பிரமணியனின் கைதினால் விளைந்த கோபத்தில் காவியும் பூணுலும் திமுகவை அண்டப் போவதில்லை. முதலில் ஜெயலலிதாவை ஒளிப்பதே இலக்கு என்பதாக கோஷமிட்ட (சுப்பிரமணிய சாமி உட்பட்ட) கூட்டம் இப்போது பேசும் தொனியை கவனிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 70 வருடப் பிரயதனங்களுக்கு பிறகும் தனக்கான வெளியை கைப்பற்ற இயலாத இந்துத்வ சக்திகள், 5 வருட ஜெயலலிதா ஆட்சியில் அதை எளிதாக விரைவாக சாதித்து கொண்டனர். கட்சியின் இருப்பே யாருக்கும் தெரியாமல் இருந்த பாஜக ஒரு கூட்டணியின் மூலம், அதன் தின அறிக்கைகள் கவனிக்கப் பட்டு, பின்னர் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாய் தமிழகத்தில் வளர்ந்தது. இந்த தேர்தலில் பாஜக தனிமைப் படுத்தப் பட்டாலும், ஜெயலலிதா அடைப்படையில் பாஜகவை விட தீவிர இந்துத்வவாதி என்பதை கவனிக்க வேண்டும். அரசியல் நிர்பந்தங்களால் அவர் சற்று நிறம் மாற்றி செயல்பட வேண்டியிருக்கிறது. மாறாக திமுக, அரசியல் நிர்பந்தங்களால் இந்துத்வத்துடன் சமரசம் செய்துகொண்டாலும், தனது அரசியல் குடும்ப நலன்கள் பாதிக்கப் படாத போது, இந்துத்வத்திற்கு எதிராகவே இருக்கும். ஆகையால் இந்துத்வத்தின் (அதன் எதிரொலியாய் இஸ்லாமிய அடிப்படைவாதம் வளர்வது உடபட்ட) ஆபத்துக்களை உணர்ந்த அனைவரும் ஜெயலலிதா மீண்டும் வருவது மிக ஆபத்தானது என்பதை உணர வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட சிலர் சுப்பிரமணியனை உள்ளே போட்டதை முன்வைத்து இன்னமும் புளகாங்கிதத்தில் இருப்பதை பார்க்க பாவமாய் இருக்கிறது.

திமுகவால் ஒதுக்கப் பட்டு, பாமகவால் கைவிடப்பட்டு, வேறு வழியில்லாமல் திருமா அதிமுக பக்கம் சேர்ந்தாலும், கருணாநிதி கண்டிக்கப் படவேண்டிய பேச்சுக்களை பேசியிருந்தாலும், அதிமுக அடிப்படையில் ஒரு தேவர் ஆதரவு கட்சி என்பதை மறக்க இயலாது. முந்தய சட்டசபை தேர்தலுக்கு முன்பு மறவர் குல மாணிக்கங்கள் வெளிப்படியாகவே 'எங்க ஆட்சி' பற்றி பேசியதும். அதிமுக வென்ற பின், கிராம அளவில் நடந்த அட்டூழியங்களையும் கணக்கில் கொள்ளாமல் இருக்க முடியாது. இப்போது தேர்தல் முடிந்தவுடன் சசிகலா லாபி என்னவகை புது அவதாரமெடுக்கும் என்பதும் ஊகத்திற்கு அப்பாற்பட்டே இருக்கிறது.

இன்னும் காரணங்களை அடுக்க முடியும் என்றாலும் எதேச்சதிகாரமும், இந்துத்வ ஆபத்துக்களுமே ஜெயலலிதா மீண்டும் வரக்கூடாது என்று நினைக்க எனக்கு காரணமாயிருக்கிறது. ஆகையால் இருக்கும் சாத்தியங்களில் ஜெயா மீண்டும் வருவது மிக ஆபத்தானதாக தெரிகிறது. திமுக பெரும்பான்மை பெறாமல், திமுக தலைமையில் ஒரு கூட்டணி ஆட்சி வருவது, இருக்கும் சாத்தியங்களில் நல்லதாகவும் எனக்கு தோன்றுகிறது. இரண்டுக்குமே சம அளவில் வாய்ப்பு இருப்பதாகவே தோன்றுகிறது. இந்த நிச்சயமின்மை சுவாரசியத்தை கிளப்பியிருக்க வேண்டும். கடந்த இரண்டு தேர்தல்களிலும் முடிவு முன்பே தெளிவாக தெரியும் என்ற நிச்சயம் இருந்தது. 96இல் அதிமுக தோற்கப் போவது தெரிந்தும், தோற்றாக வேண்டுமே என்ற படபடப்பும், அடுத்தமுறை திமுக தோற்பது உறுதி என்று தெரிந்தும், ஒருவேளை ஜெயித்துவிடாதா என்ற நப்பாசையும் நிலை கொள்ளாமல் இருந்தன. இந்த முறை இருக்கும் நிச்சமின்மையையும் மீறி எந்த விதத்திலும் சுவாரசியமோ ஆர்வமோ இருக்கவில்லை. எது நடந்தாலும் பாதிக்காத மனநிலையிலேயே நான் இருக்கிறேன். ஜோ அவர்கள் கேட்டுகொண்டதால் இந்த பதிவு. அவருக்கு நன்றி.

(இன்னும் ஒரு பதிவு வரும்.)

Post a Comment

25 Comments:

Blogger -/பெயரிலி. said...

தினமுரசு, தமிழ்கரன் ??

பட்டை அட்ஸுக்கிட்டா எயுதுறே தலீவா? ;-)

4/28/2006 4:29 PM  
Blogger மா சிவகுமார் said...

அருமையான கருத்துகள். இந்தத் தேர்தலில் பலம் பெற்று விடக் கூடாதவர்கள்:
1. இந்துத்துவ சக்திகள்
2. சசிகலா மாஃபியா
3. பாமக
4. மாறன் குடும்ப ஊடகத் தொழில்

இவற்றுக்கு ஒரு செக் வைக்கும்படியான ஆட்சி அமைந்தால் நல்லது.

4/28/2006 4:37 PM  
Blogger ப்ரியன் said...

நீங்கள் சொல்வது 100 / 100 உண்மை அம்மா அடுத்து என்ன செய்வார் என்பது அவருக்கே தெரியாது

4/28/2006 4:52 PM  
Blogger ஜோ/Joe said...

ரோசா வசந்த்,
எனது வேண்டுகோளை மனதில் கொண்டு இந்த பதிவை தந்ததற்கு மிக்க நன்றி!

மறுத்துச்சொல்ல முடியாத வகையில் கருத்துக்களை இரு புறங்களிலும் எடுத்து வைத்திருக்கிறீர்கள் .என்னைப் போன்றவர்கள் இது போன்று இரு புறங்களிலுமுள்ள தீமைகளை கூட்டிக்களித்து ,சற்று அதிக தீமை உள்ள பக்கம் வெற்றி செல்லாமல் இருப்பது நல்லது என்ற கோணத்தில் இயங்கினாலும் ,எழுதினாலும் முத்திரை குத்தப்படுகிறோம்.

உங்கள் கருத்துக்களில் உள்ள நேர்மைக்கும் ,தெளிவுக்கும் வணக்கங்கள் .தொடரும் உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.நன்றி!

4/28/2006 5:09 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

Roza,
Good post. Will come later with specific comments !

//தினமுரசு, தமிழ்கரன் ??

பட்டை அட்ஸுக்கிட்டா எயுதுறே தலீவா? ;-)
//
:))))))))))))))

4/28/2006 6:03 PM  
Blogger நன்மனம் said...

Hamid,ஈ-கலப்பையில் தானே தட்டச்சு செய்கிறீர்கள்?

ஸ்ரீதர்

4/28/2006 6:06 PM  
Blogger krishjapan said...

நடுநிலைமை, தெளிவு, ஆதங்கம், உயர்ந்த எண்ணம்....

4/28/2006 6:41 PM  
Blogger நன்மனம் said...

Hamid நீங்கள் http://www.thamizha.com சென்று, ஈ-கலப்பை இறக்கம் செய்து கொல்லலாம்.



Category: eKalappai
eKalappai 2.0b (Anjal) Version: 2.0b
Submitted Date: 2004/11/7
Description:

This is the latest version(2.0Beta) of eKalappai with Anjal Keyboard layout.
(Download the file and unzip and then install )


14889 1.08 MB Windows

ஸ்ரீதர்

4/28/2006 7:17 PM  
Blogger Gurusamy Thangavel said...

நான் நீண்ட... நாட்களாக எழுத வேண்டும் என நினைத்திருந்ததின் மையக்கருத்தை நீங்களும், முத்துவும் (தமிழினி) நான் எழுதியிருந்தால் அமைந்திருப்பதைவிடவும் மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். உங்களிருவரின் பதிவையும் மற்ற சில நண்பர்களின் இன்றைய அரசியல் பற்றிய பதிவுகளையும் படிக்கும்போது நானும் பதியவேண்டும் என்ற உத்வேகம் வருகிறது.

4/28/2006 7:35 PM  
Blogger நன்மனம் said...

hamid, கொள்ளலாம் என்று படிக்கவும், பிழை பொருக்கவும்.

ஸ்ரீதர்

4/28/2006 7:35 PM  
Blogger ROSAVASANTH said...

கருத்தளித்த எல்லா நண்பர்களுக்கு நன்றி. இன்னொரு பதிவையும் எழுதி இன்றே இட நினைத்தேன். முடிக்கவில்லை. நாளை இடுகிறேன். மீண்டும் நன்றி.

4/28/2006 8:54 PM  
Blogger Srikanth Meenakshi said...

ரோசா,

அடிப்படையில் உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன் - அதாவது, கருணாநிதி தலைமையில் கூட்டணி ஆட்சி வருவதே (நீங்கள் பட்டியலிடும் பாதகங்களையும் கடந்து) நல்லது என்று நினைக்கிறேன். ஜெயலலிதா மீண்டும் வந்தால் என்ன நடக்கும் என்ற ஊகங்கள் அச்சம் தருவனவாக இருக்கின்றன.

ஜெயலலிதாவை எதிர்த்து நீங்கள் வைக்கும் பல குற்றச்சாட்டுகளை (எதேச்சாதிகாரம், சசிகலா குடும்பம், தாந்தோன்றித் தனம்) ஏற்க முடிந்தாலும், அவரை 'பாஜகவை விட தீவிர இந்துத்வவாதி' என்று முத்திரை குத்துவதை ஏற்க இயலவில்லை. தீவிர இந்து மதப் பற்றாளர், மூட நம்பிக்கைகள் நிறைந்தவர், சடங்குகளைப் பின்பற்றுபவர் என்றெல்லாம் தனிப்பட்ட முறையில் சொல்ல முடிந்தாலும், தனது நம்பிக்கைகளை பொதுவில் கொண்டு வந்ததற்கு ஆதாரங்கள் எதையும் நீங்கள் முன்வைக்கவில்லை. இவர்கள் ஆதரிக்கிறார்கள், அவர்கள் வரவேற்கிறார்கள் போன்றவை இக்குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் ஆகா.

நன்றி.

4/28/2006 10:38 PM  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

பதிவுக்கு நேரடித் தொடர்பில்லாவிட்டாலும், தலித் அரசியலையும் தொடுவதால் இந்த சிறு கேள்வி: அ. மார்க்சின் இந்த கட்டுரையைப் படித்தீர்களா?
http://www.keetru.com/ungal_noolagam/mar06/marx.html

4/29/2006 1:07 PM  
Blogger மாயவரத்தான் said...

//இதிலெல்லாம் துகளளவும் ஐயம் இல்லை//

துக்ளக்களவும்னு படிச்சு தொலச்சிட்டேன்.

4/29/2006 7:51 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

//அவரை 'பாஜகவை விட தீவிர இந்துத்வவாதி' என்று முத்திரை குத்துவதை ஏற்க இயலவில்லை.
//
இது தான் என்னுடைய கருத்தும் ! ஜெ பார்ப்பன இனத் தலைவர் என்பதற்கு அப்பாற்பட்டு இருப்பதனால் தான், அவர் அரசியலில் இன்று வரை தாக்குப் பிடித்திருக்கிறார்.

//இந்துத்வத்துடன் சமரசம் செய்துகொண்டாலும், தனது அரசியல் குடும்ப நலன்கள் பாதிக்கப் படாத போது, இந்துத்வத்திற்கு எதிராகவே இருக்கும். ஆகையால் இந்துத்வத்தின் (அதன் எதிரொலியாய் இஸ்லாமிய அடிப்படைவாதம் வளர்வது உடபட்ட) ஆபத்துக்களை உணர்ந்த அனைவரும் ஜெயலலிதா மீண்டும் வருவது மிக ஆபத்தானது என்பதை உணர வேண்டும்.
//

இது எந்த வகையில் ஜெயின் போக்கை விட சிறந்தது என்று புரியவில்லை !

சார்பு நிலை மாற்றும் நலிந்த செயலையும் , ஊழலையும், அராஜகப் போக்கிற்கு எந்த வகையிலும் குறைந்ததாக மதிப்பிட இயலாது.

யார் வந்தால் நல்லது என்பது இன்னும் குழப்பமாகவே உள்ளது :-(

4/29/2006 8:32 PM  
Blogger ROSAVASANTH said...

மீண்டும் கருத்தளித்த அனைவருக்கும் நன்றி. எதிர்பார்த்ததை விட பெரிதாக போனதால் இன்னும் ஒரு(மூன்றாவது) பதிவு தேர்தல் பற்றி எழுதும் நோக்கம் உள்ளது. பாதி எழுதியுமாகி விட்டது. திங்கள் உள்ளிடலாம்.

சுந்தரமூர்த்தி, அ.மார்க்சின் கட்டுரையின் சுட்டிக்கு நன்றி. எழுதிக் கொண்டிருக்கும் அடுத்த பதிவு திருமாவின் அரசியலை முன்வைத்ததே. அதற்கு மார்க்ஸின் கட்டுரை உதவியாகவும் இருக்கிறது.

ஸ்ரீகாந்த்,

கவனித்தீர்கள் என்றால் ஜெயலலிதாவின் எதேச்சதிகாரம், தான் தோன்றித்தனத்திற்கு கூட ஆதாரங்கள் எதையும் பெரிதாய் முன் வைக்கவில்லை. ஆதாரத்துடன் எழுதுவது அல்ல என் நோக்கம், என் பொதுவான பார்வையை, முடிந்தவரை தெளிவுடன் முன்வைப்பது மட்டுமே. ஜெயலலிதாவின் இந்துத்வ சார்புக்கு அவர் உதிர்த்துள்ள பல வாக்கியங்களில் இருந்தே ஆதாரம் தரமுடியும். ராமஜென்ம பூமியில் நேரடியாகவே இந்துத்வ நிலைபட்டை ஆதரித்து பேசியுள்ளார். பாஜகவுடன் சேர்ந்தது மிக இயற்கையானதாகவே எல்லோராலும் பார்க்கப் பட்டது. அவருக்கும் அது குறித்து விளக்கம் அளிக்க கூட தேவை இருந்தது இல்லை. மாறாக திமுகவிற்கு ஏகப்பட்ட விளக்கம் அளிக்க தேவை வந்தது. ஜெயலலிதாவை போல அல்லாமல் அது குறித்து பேசுவதில் தர்ம சங்கடமும் இருந்தது. பாஜகவுடன் கூட்டு சேர்ந்தாலும், கொள்கைகளை விடவில்லை என்பதாக காட்டிகொள்ள, தொடர்ந்த பல ஸ்டேட்மெண்ட்களை கலைஞர் எல்லா இடத்திலும் விடவேண்டி வந்தது(அதனால் ஒரு பக்கம் இந்துத்வ எதிர்பாளர்களிடமிருந்தும், இன்னொரு பக்கம் ஆதாரவாளர்கள் இருவரின் கோபத்தையும் கிளப்புவதாய் இருந்தது.) இதை ஆதாரபூர்வமாய் பேசுவதில் பிரச்சனையில்லை. ஆனால் இப்போது என் கரிசனம் அதுவல்ல.

ஆனால் நான் முன்வைத்த வாதம் எப்படி கிண்டலுக்கு உரியது என்று புரியவில்லை. திமுக பாஜகவுடன் கூட்டு வைத்திருக்கிறது. அதற்காக தனது பல நிலைபாடுகளை மென்மையாக்கிக் கொண்டு பேசுகிறது. ஆனால் இந்து முண்ணணி ராமகோபாலன் இவர்கள் எல்லாம் தெளிவாக ஜெயலலிதாதான் தங்கள் ஆள் என்பதாக இருக்கிறார்கள். அப்படி பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்களுடய புரிதலை வைத்து, ஜெயலலிதாவின் இந்துத்வ சார்பை கோடிட்டு காட்டுவதில் என்ன லாஜிக்கல் பிரச்சனை இருக்கிறது என்று புரியவில்லை. உங்கள் கருத்துக்கு நன்றி.

4/29/2006 8:49 PM  
Blogger ROSAVASANTH said...

Bala, Mays,

Saw your comment later. Thanks for that

4/29/2006 8:53 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

ரோசா
மிக சரியான அலசல்.
தேர்தல் 2006 பற்றி நிறைய எழுதுங்கள்.
கலைஞர் தலைமையில் கூட்டணி ஆட்சி வருவதே
பொதுவான மக்களுக்கு நல்லது. கலைஞர் நல்லபடியாக
ஆட்சிக்கு வந்துவிட்டால் மாறன் குடும்பத்தில் நிறைய மன மாற்றங்கள் வரும் என்று
நான் நினைக்கிறேன். குடும்ப பாசம், ராதிகா, விசு அதிமுக சென்ற காரணங்களால்
சன் புதிய யுக்திகளை கையாளுவார்கள் என்றே நான் நம்புகிறேன்.
திமுகவின் பலம் மற்றும் பலகீனம் சன் தொலைகாட்சி என்று நினைக்கிறேன்.

தேர்தலுக்கு பிறகு தமிழ்பாதுகாப்பு மூலம் ராமதாஸ் மற்றும் திருமா மீண்டும்
சேருவார்கள் என்றும் நம்புகிறேன்.

வாழ்த்துகள் பல.
நன்றி
மயிலாடுதுறை சிவா...

4/29/2006 8:56 PM  
Blogger ROSAVASANTH said...

Thanks for the comment

4/29/2006 9:00 PM  
Blogger Srikanth Meenakshi said...

Rosa, this is not a big deal in the scheme of things, but let me just clarify one point.

ஜெயலலிதா solid-ஆக பத்து வருடங்கள் ஆட்சியில் இருந்திருக்கிறார். அச்சமயத்தில் நூற்றுக்கணக்கான முடிவுகளை எடுத்திருக்கிறார். அவர் இந்துத்துவ ஆதரவாளர் என்றால் அவரது ஆட்சியின் *செயல்களிலிருந்து* ஏராளமான ஆதாரங்களை சுலபமாக எடுத்து வைக்க முடிய வேண்டும். அப்படி இல்லை என்று நான் நினைக்கிறேன். இப்படி நான் நினைபதற்குக் காரணம் எனது அறியாமை என்றால் அதைத் தயவு செய்து திருத்தவும்.

வைகோ, விஜயகாந்த் போன்ற ஆட்சியில் இருந்திராதவர்களின் நிலைப்பாடுகளை அறிய அவர்களது சொற்களை ஆராயலாம். ஆட்சியில் இருந்தவர்களை மதிப்பிடும் போது அவர்களது செயல்கள் சொற்களை விட உரக்கப் பேசுகின்றன. ஜெயலலிதா ஆட்சியில் யானைகளுக்கு ஓய்வு/relief camp என்ற விஷயத்தில் அவரது நம்பிக்கைகளின் கரை தெரிந்தது. மற்றபடி இல்லை.

ஆதலால் தான், அவரை ஊழல்வாதி, எதேச்சாதிகாரி, ஊடகங்களை மதிக்காதவர் என்றெல்லாம் சொல்வதை சுலபமாக ஏற்கும் என்னால், அவரை மதவாதி என்று சொல்வதை ஏற்க முடியவில்லை.

ராமகோபாலன் வகையறாக்கள் ஜெவை ஆதரிப்பதனால் அவர் இந்துத்துவவாதி என்பது சரியான பார்வையாகப் படவில்லை. அவர்கள் இவரை ஆதரிப்பதற்கு ஹிந்து மதத்தை சமயம் கிடைக்கும் போதெல்லாம் கர்மசிரத்தையாக நக்கலடிக்கும் கருணாநிதியை விட இவர் தேவலாம் என்ற சிந்தனை தான் காரணம் என்று நினைக்கிறேன். ஆதலால், நீங்கள் செய்யும் accusation by association -ஐ ஆதாரமாகக் கொள்ள முடியாது.

There is another thing, and I could be wrong about this, but I just wanted to get it off my chest - ஜெயலைலிதா தனது மத நம்பிக்கைகளை வெளிப்படையாக, கூச்சமில்லாமல் பழகுவது தவறு/அருவருக்கத்தக்கது என்று நினைப்பவர்கள் தான் அவரை மதவாதியாக சித்தரிக்க முற்படுகிறார்கள் என்றும் நினைக்கிறேன்.

4/30/2006 11:49 AM  
Blogger ROSAVASANTH said...

ஸ்ரீகாந்த் மீண்டும் கருத்துக்கு நன்றி.

ஜெயாவின் பேச்சுக்களை விட்டுவிட்டு ஆட்சியிலிருந்து கேட்டீர்கள் என்றால், வேதாகம கல்லூரி என்று அவரது முந்தய ஆட்சியில் நடந்த பல சமஸ்கிருத மயமாக்க செயல்களை உதாரணமாய் சொல்லலாம். இந்த ஆட்சியிலும் மதமாற்ற தடைச்சட்டம் போன்றவற்றை சொல்லலாம். 70 ஆண்டுகளாய் தமிழகத்தில் வெளியை கைப்பற்ற இயலாத இந்துத்வா, 91-96 ஜெயலலிதா ஆட்சியில் பெருமளவு கைப்பற்றியதாகவும், அதற்கு அவரது இந்துத்வ சார்பே காரணம் என்பதே என் கருத்து. இது புதிய கருத்து அல்ல. வேறு பலரும் இப்படி கருதுகின்றனர். விரிவாய் இதை அணுகும் தேவை ஏற்பட்டால் அப்போது முடிந்தவரை விரிவாய் எழுதுகிறேன். நன்றி.

5/01/2006 2:01 AM  
Blogger சன்னாசி said...

//ஜெயலைலிதா தனது மத நம்பிக்கைகளை வெளிப்படையாக, கூச்சமில்லாமல் பழகுவது தவறு/அருவருக்கத்தக்கது என்று நினைப்பவர்கள் தான் அவரை மதவாதியாக சித்தரிக்க முற்படுகிறார்கள் என்றும் நினைக்கிறேன்.//

ஸ்ரீகாந்த், சர்வாதிகார மனோபாவமுடையவரென்று அனைவராலும் அறியப்பட்ட ஒரு நபர் இப்படிக் கூச்சநாச்சமில்லாமல் யானையைத் தானம் செய்வது, கோயில்களில் மிருக பலியைத் தடுப்பது, ஜோசியம் பார்த்து 7 அல்லது 9 என்று வருமாறு அனைத்தையும் பண்ணுவது (108 அல்லது 1008 ஜோடிகள் திருமணம், அரசு ஊழியர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டு திரும்ப உள்ளழைத்துக்கொள்ளப்பட்டபோதும் இந்த 9 என்ற எண் குறித்து எங்கோ படித்திருக்கிறேன் ;-) - என்ற ரீதியில் பல விஷயங்களைச் சொல்லலாம் - they are not as tangential as they seem to be) உங்களுக்கு அசௌகரியமாகப் படவில்லை? மஞ்சள் துண்டு என்பது போன்ற விஷயங்களைக் கருணாநிதியும் மறைமுகமாகச் செய்துகொண்டிருக்கலாம், ஆனால் அதைப் பொதுவில் மறைப்பது/ஒப்புக்கொள்ளத் தயங்குவது கூட, அரசியல் லாபங்கருதியாவது பொது விமர்சனத்துக்கு அஞ்சும் அவரது மனோபாவம் என்று கொண்டால் - அதை ஒத்துக்கொள்வது சுலபமா அல்லது எதையும் சட்டைசெய்யாத ஜெயலலிதாவின் மனோபாவத்தை ஒத்துக்கொள்வது சுலபமா என்று கேட்டால், பதில் வெகு சுலபமென்று நினைக்கிறேன். ஜெயலலிதாவின் இந்த ரீதியான "வெளிப்படையான மதநம்பிக்கைகளை" சிலாகிப்பது - it's an overture to disaster. ஐந்து வருடங்கள் என்பது ஒரு emotional time-span அல்ல - கடந்த இரண்டு ஆட்சிகளிலும் ஜெயலலிதாவின் பெரும்பாலான முடிவுகள் இந்த அடிப்படையில் எடுக்கப்பட்டவையே என்றிருக்கையில், தனது "கூச்சமின்மையை" அடிப்படையாகக் கொண்டு அப்படியொரு பாதைக்குச் செல்ல அவர் முற்பட்டால், விமர்சனங்களால் அவற்றை நிறுத்திவிடவோ/மறுபரிசீலனை செய்யவைக்கவோ முடியுமா? மற்றொரு பாராளுமன்றத் தேர்தல்/மாநிலத் தேர்தல் வரும்வரை காத்திருக்க வேண்டியதுதான்.

5/01/2006 2:37 AM  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

ஸ்ரீகாந்த்,
உங்களுடைய வாதம் ஆச்சரியமளிக்கிறது.
யானைதானம், பச்சை நிறம், 9 எண், Jayalalithaa வில் உள்ள மிகுதியான a போன்றவை வேண்டுமானால் சொந்த நம்பிக்கைகளாக இருக்கலாம். ஆனால்
செங்கல் பூஜைக்கு ஆளனுப்புவது, ராமஜென்மபூமி காய்ச்சல் உச்சத்திலிருந்தபோது ராமர் கோயிலை அயோத்தியில் கட்டாமல் எங்கு கட்டுவதாம் என்று கேட்டது, வேதாகமக் கல்லூரி, மதமாற்றத் தடுப்புச் சட்டம், ஆடு-கோழி பலித் தடுப்புச் சட்டத்தை தூசி தட்டி அமல்படுத்தியது, நரேந்திரமோடிக்கு வெளிப்படையான ஆதரவு, "சோனியா காந்தி வெளிநாட்டவர்" பிரச்சாரம் போன்றவையும் சொந்த நம்பிக்கைகள் என்கிறீர்களா? இவையெல்லாமே மத அடிப்படையில் எடுத்த அரசியல் முடிவுகள். இவை இந்துதுவ அரசியலுக்கு நெருக்கமாக இல்லையா?

5/01/2006 2:44 AM  
Blogger ROSAVASANTH said...

சன்னாசி, சுமு நன்றி.

பின்னூட்டங்களை மட்டுறுத்த மட்டுமே வந்தேன். இப்போது கிளம்பியாக வேண்டும். புதிய பின்னூட்டங்கள் இருந்தால், நண்பர்கள் நாளை (இங்கே) மாலை வரை பொறுத்தருளா வேண்டும். நன்றி!

5/01/2006 2:50 AM  
Blogger Srikanth Meenakshi said...

ரோசா, சன்னாசி, சுந்தர், நீங்கள் முன்வைக்கும் சில நடவடிக்கைகளை அவர் திருப்பிப் பெற்றுக் கொண்டு விட்டாலும், பொதுவாக உங்களது வாதங்கள் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டியவை தாம். விளக்கங்களுக்கு நன்றி.

5/02/2006 2:44 AM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter