ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Wednesday, May 31, 2006

செந்தூரப்பூவே! -1

அடைமொழி வைப்பதை கலாச்சாரத்தின் பகுதியாய் கொண்டிருக்கும் தமிழ் சமூகத்தில், அபூர்வமாய் அது பொருந்திப் போவதும் உண்டு. அத்தகைய ஒரு உதாரணமான இசைஞானி இளயராஜாவை பற்றி, இசை அறிவு உள்ள பலர் ஏராளமாய் எழுதியிருக்கிறார்கள். வெங்கட் எழுதியது தவிர்த்து, நான் அதிகமாய் படிக்காவிட்டாலும், இணையத்திலும் நிறைய இருக்கும். இதில் நான் புதிதாய் என்ன சொல்ல இருக்கிறது என்று தெரியாவிட்டாலும், ஏதோ எண்ணத்தில் பட்டதை நட்சத்திர வாரத்தில், தலைவனை பற்றி எழுதும் பேராவலில் தட்டி வைக்க நினைத்து விட்டேன். முன்னொரு பதிவில் சொல்லிவிட்ட படி, இளயராஜாவின் இசையின் மேன்மையை அதன் முக்கியத்துவதை உணர்ந்திருப்பதாய் நினைத்தாலும், அதை வார்த்தைகளில், இசைக்கான கலைச்சொற்கள் கொண்டு சொல்லும் அறிவு எனக்கு இல்லை. பல வகை இசைகளை தொடர்ந்து கேட்டு வந்திருந்தாலும், செவ்வியல் இசைக்கான (கேட்பதற்கும் ரசிப்பதற்குமான அளவில் கூட) பயிற்சி எதுவும் எனக்கு கிடையாது. என்றாலும் உணர்வை, அனுபவத்தை அடிப்படையாய் வைத்து என் போக்கில் எழுது முயல்வதே இந்த பதிவும், தொடர்ந்த பதிவுகளும

ராஜா ஒரு இசைமேதை மட்டுமில்லாமல் தனக்குள் தொடர்ந்த ஒரு ஆன்மீக தேடலையும் கொண்டவர். அவரது ஆன்மீக தேடலுக்கான ஊடகமாகவே இசை அவரிடமிருந்து வெளிப்படுவதாக தெரிகிறது. ஆன்மீகம் என்பதாகவும், ஆன்மீகத் தேடல் என்பதாகவும் அவர் தன் கருத்தில், செயல்களில், கவிதை என்பதாக நினைத்து கொண்டு செய்தவைகளில் முன்வைப்பதெல்லாம், இசையை தவிர வேறு எதுவும் தனக்கு தெரியாது என்ற முதிர்ச்சி வராததால் விளைந்த அசட்டுத்தனங்களாவே இருக்கின்றன. ஆனால் ஒரு 'பிரபஞ்சம் தழுவிய தேடல், மனப்பயணம், படைப்பு நிலை நோக்கிய தவம்' என்பதாக ஒரு 'ஆன்மிகத் தேடல்' இல்லாமல், அவரின் பல வகை இசை வெளிபாடு சாத்திய முற்றிருக்காது.( இதில் எந்த வகை மெடாஃபிசிகல் அர்த்தத்தையும் நான் சேர்க்க முனையவில்லை.) உள்ளே தேடலை கொண்டிருந்தாலும், சந்தர்ப்ப சூழல், வணிக நிர்பந்தத்திற்கு ஏற்பவே அவரது இசை வெளிபாடு அமைய வேண்டியிருக்கிறது.


ராஜவின் தேடல், இயல்பான எதிர்பார்ப்பின் படி, இந்திய இசையின் சாஸ்திரியச் சட்டகத்தினுள்தான் வெளிபட்டிருக்க வேண்டும். ஆனால் துவக்கத்திலிருந்தே, எந்த themeஐ வேர் கொண்டு தொடங்கியிருந்தாலும், அவரது இசை மேற்கத்திய இசையின் அமைப்பைக் கொண்டு, நாட்டிசையின் ரத்த ஓட்டத்துடன் உயிர்ப்பிக்கிறது. அது வலிந்து செய்ததாக அல்லாமல், மிக இயல்பாக வெளிப்பட்டாலும், அவர் அதை சுயநினைவுடன் செய்வதாகவே தோன்றுகிறது. அவர் இதுவரை வெளிப்படுத்தியுள்ள (உளரல்கள் உட்பட்ட) கருத்துக்கள் எதிலும், இந்திய கலைகள் எல்லாவற்றையும் - குறிப்பாக சாஸ்திரிய இசையை - கறைபடுத்தியுள்ள இந்திய வர்ண அமைப்புமுறை குறித்த, எந்த அரசியல் பிரஞ்ஞையும் அவரிடம் இருப்பதாக தெரியவில்லை. அப்படிபட்ட பிரஞ்ஞைக்கு எதிராக இருப்பதாக அவர் காட்டிகொண்டு வந்திருப்பதாகவே தோன்றவும் கூடும். ஆனால் ஏதோ ஒரு விதத்தில் இந்திய இசை சட்டகத்தை தனக்கு போதாததாக அவர் நினைப்பதையும், தனது எல்லா இசை பயணத்திற்கும் மேற்கத்திய இசையின் அமைப்பையே அவர் தகுந்ததாக கொண்டு தேர்தெடுத்துள்ளதையும் காணலாம். இது ஏதேச்சையாக நிகழ்ந்ததாக கருத இயலவில்லை.


இந்திய சாஸ்திரிய இசையை (செவ்வியல் என்று சொல்வது பொருத்தமாய் படவில்லை) ராஜா புறக்கணிக்கவில்லை. தீவிரமாய் பயின்றதுடன், அதன் அதிகப்படியான சாத்தியங்களுடன் பயன்படுத்தவும், அதிலும் தன் கையெழுத்தை அழுத்தமாய் பதிக்கவும் தவறவில்லை. ஆனால் தனது இசையின் அடித்தள அமைப்பிற்கு மேற்கையே நாடுகிறார். அவர் தேர்ந்தமைத்து கொண்ட வடிவத்தில், மேலே சொன்ன வர்தக சூழல்/வணிக நிர்பந்தங்களின் விளைவாய், சிறு பொறிகளாய் விண்மீன்களை மட்டும் நம் கண்களுக்கு காட்டி விட்டு, விண்மீன்களுக்கு இடையே நாம் அறியாதிருக்கும் பெருவெளியைப் போன்ற மாபெரும் இசை ரகசியத்தை தனக்குள் வைத்துக் கொண்டிருக்கிறார்.


ஒரு வகையில் தமிழ் சினிமா அவர் இயல்புக்கு முழுவதும் ஒத்து வராவில்லைதான். பல இடங்களில் அவர் அளித்த அற்புதங்களை விளங்கி கொள்ள கூட இயலாமல், அசட்டுத்தனமாக காட்சியமைக்கப் பட்டு, (உதாரணங்களுக்கு பஞ்சமே இல்லை என்றாலும், உதாரணமே இல்லாமல் எழுதக்கூடாது என்பதால், ஒரு உதாரணத்திற்கு 'நினைவெல்லாம் நித்யா'வில் 'பனிவிழும் மலர்வனம்') அவரது கற்பனைக்கு ஏற்ப தமிழ் சினிமா எடுத்தவர்களால் சிறகு விரிக்க முடியவில்லை. அவருக்கான வெளியை சினிமாவால் முழுமையாய் அளிக்கவும் முடியவில்லை. ஆனால் தமிழ் சினிமாதான் அந்த மேதையை உலகுக்கு அடையாளம் காட்டியது. அவரை கொண்டாட வைத்தது, கொண்டாடியது. சினிமா என்ற ஊடகம் இல்லாவிட்டால் இளயராஜா என்ற கலைஞன் அடையாளம் காணப்படாமலே, அவரது தனித்த இசைக்கான ஒரு வெளி வாய்க்காமலேயே கூட போயிருக்கலாம்.


தமிழ் சினிமா அளித்த வெளியில் அவரால் வெறும் துணுக்குகளை மட்டுமே தர முடிந்தது. தமிழ் சினிமாவை தவிர வேறு எதுவும் ராஜாவின் இசைக்கான பொருத்தமான ஒரு வெளியை அளித்திருக்க முடியாது என்றே தோன்றினாலும், அதே சினிமாப் பாடலிசையின் தேவைகளை மிக பொருத்தமாய் (ஒரு விஸ்வநாதனைப் போல, ரஹ்மானைப் போல) அவராய் திருப்தி செய்ய இயலவில்லை என்றும் தோன்றுகிறது (ரீ ரெகார்டிங் சமாச்சாரம் வேறு) .அதற்கு பிறகு வருகிறேன். அதே நேரம் அவர் போகிற போக்கில் அளித்த சில அற்புத இசைத் துணுக்குகளை கூட ஒழுங்காய் பயன்படுத்திக் கொள்ள தமிழ் சினிமாவின் கேமெராக்களுக்கு வக்கில்லை என்றும் தோன்றுகிறது.


மிக விதிவிலக்குகளான(ராஜாபார்வை தீம் இசைபோல, 'ராக்கம்மா கையை தட்டு' போல, 'தென்றல் வந்து தீண்டும் போது' போல) சில இடங்களை தவிர, அவரால் சிறிய அளவில் கூட சினிமா இசையில் பயணிக்க முடிந்ததில்லை. நிச்சயமாய் அவரது மேதமை வெளிப்பட்டது. ஆனால் அதை ஒரு பயணித்த வடிவத்தில், நிறைவான வகையில் அவரால் அளிக்க இயலவில்லை. எத்தனையோ பாடல்களின் இடையீடுகளில், எத்தனையோ காட்சிகளின் பிண்ணணி இசையில், ஆயிரக்கணகான துணுக்குகளாய் இளையராஜா அற்புத பொறிகளை அளித்துள்ளார். அவையனைத்தும் ஒரு மாபெரும் கலைப்படைப்பிலிருந்து மேற்கோள் மட்டும் காட்டப்பட்ட ஒற்றை வர்ணணையை போல, பயணிக்காமல் போன ஒரு பெரும் இசையின் ஒரு பெயர்க்கப் பட்ட துண்டாய், 30 ஆண்டுகால சினிமா உலகில் சரியாய் அடையாளம் காணப்படாமல் இருக்கிறது.

சினிமா தவிர்த்து 80களின் இடையில் அவர் வெளியிட்ட 'Nothing but wind, How to name it?' ஆல்பங்கள், அண்மையில் வெளிவந்த 'திருவாசகம்' தவிர வேறு எங்கேயும் அவரின் இசை, அதன் ஓரளவு சாத்தியங்களுடனாவது பயணப்பட்டதாக தெரியவில்லை. ஒரு துணுக்கு வடிவத்திலேயே அவரின் இசை தேங்கிவிட்டதாக தோன்றுகிறது. இது குறித்த வருத்தம் எனக்கு பல காலமாய் இருந்தாலும், காலப்போக்கில் அது அர்த்தமற்றது என்றும் புரிந்தது. புதுமைப் பித்தனின் தனது கதை ஒன்றில் குழந்தை ஒன்று ஆற்றங்கரை படித்துறையில் உட்கார்ந்துகொண்டு பாதி காலை தண்ணீரில் மூழ்கியிருக்கும். 'சின்னக் கால் காப்புகள் தண்ணீரிலிருந்து வெளி வரும் பொழுது ஓய்ந்துபோன சூரிய கிரணம் அதன் மேல் கண் சிமிட்டும். அடுத்த நிமிஷம் கிரணத்திற்கு ஏமாற்றம், குழந்தையின் கால்கள் தண்ணீருக்குள் சென்று விடும்.' அப்போது புதுமைபித்தன் எழுதுவார், "சூரியனாக இருந்தால் என்ன? குழந்தையின் பாதத் துளிக்கு தவம் கிடந்துதான் ஆக வேண்டும். இளையராஜாவிடமும் நாம் அத்தகைய ஒரு குழந்தை அளிக்கும் சூரிய பிரகாசமாய், ஒரு இசைத் துணுக்கோ அல்லது பயணப்பட்ட ஒரு இசையோ கிடைக்க கூடிய சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதை தவிர, அது குறித்து விசனப்படுவதில் பொருளிருப்பதாக தெரியவில்லை.

அந்த வகையில் நமக்கு கிடைத்த துணுக்குகள் அத்தனையையும் (வைரம் ரத்தினம் என்ற திடமான வார்த்தைகள் அதை அர்த்தமற்று போகவைக்கக் கூடும்), வேறு ஒரு திறமை படைத்த, உழைக்கத் தயாரான ஒரு இசைஞனுக்கு பெரும் இசையை வேர்கொள்ள உதவும் விதையாக நாம் கருதலாம். அப்படிப்பட்ட திறமை வாய்ந்த ஏ.ஆர். ரகுமான் போன்றவர்கள் அதை கணக்கில் கொண்டாலே அது முக்கிய நிகழ்வாக இருக்க கூடும்.

(தொடரும்.)

Post a Comment

16 Comments:

Blogger Jayaprakash Sampath said...

தொடருங்கள். தொடர்ந்து வரவிருப்பதையும் படித்து விட்டு எழுதுகிறேன்.

5/31/2006 4:37 AM  
Blogger Suka said...

அருமை.

//சினிமா தவிர்த்து 80களின் இடையில் அவர் வெளியிட்ட 'Nothing but wind, How to name it?' ஆல்பங்கள், அண்மையில் வெளிவந்த 'திருவாசகம்' தவிர வேறு எங்கேயும் அவரின் இசை, அதன் ஓரளவு சாத்தியங்களுடனாவது பயணப்பட்டதாக தெரியவில்லை. ஒரு துணுக்கு வடிவத்திலேயே அவரின் இசை தேங்கிவிட்டதாக தோன்றுகிறது.//

நானும் இவ்வாறு உணர்ந்திருக்கிறேன். திருவாசகம் உண்மையில் அவருக்கு ஒரு நல்ல மாற்றம்.

தனியாக இசையை மற்றும் கொண்ட ஆல்பங்கள் அதிக அளவில் வெளிவர ஆரம்பிக்கவேண்டும். சினிமா ஒரு கூண்டு.

சுகா

5/31/2006 4:42 AM  
Blogger நியோ / neo said...

>> எத்தனையோ பாடல்களின் இடையீடுகளில், எத்தனையோ காட்சிகளின் பிண்ணணி இசையில், ஆயிரக்கணகான துணுக்குகளாய் இளையராஜா அற்புத பொறிகளை அளித்துள்ளார். அவையனைத்தும் ஒரு மாபெரும் கலைப்படைப்பிலிருந்து மேற்கோள் மட்டும் காட்டப்பட்ட ஒற்றை வர்ணணையை போல, பயணிக்காமல் போன ஒரு பெரும் இசையின் ஒரு பெயர்க்கப் பட்ட துண்டாய், 30 ஆண்டுகால சினிமா உலகில் சரியாய் அடையாளம் காணப்படாமல் இருக்கிறது. >>

அற்புதமாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

நாம் மனசுக்குள்ளேயே வைத்திருந்து சொல்ல நினைக்கும் கருத்து திட உருவாக (நாம் உணர்வது போல) ஆகிடுச்சா எனக் குமைந்து கொண்டிருக்கும் போது இன்னொருவர் - 'இதைததான்' சொல்ல நினைச்சோம் இல்ல? என்று நாம் மகிழ்வது போல சொல்லிவிடும் உற்சாக + இன்ப அலைகளை உருவாக்கிவிடுதல் , உங்களிடத்தில இப்போது இரண்டாவது முறையாக நடந்திருக்கு. :)

5/31/2006 5:05 AM  
Blogger Unknown said...

அவர் இதுவரை வெளிப்படுத்தியுள்ள (உளரல்கள் உட்பட்ட) கருத்துக்கள் எதிலும், இந்திய கலைகள் எல்லாவற்றையும் - குறிப்பாக சாஸ்திரிய இசையை - கறைபடுத்தியுள்ள இந்திய வர்ண அமைப்புமுறை குறித்த, எந்த அரசியல் பிரஞ்ஞையும் அவரிடம் இருப்பதாக தெரியவில்லை.//

1.அவர் உளறல்கள் எவை என்று சில உதார்ணம் தர முடியுமா?

2.சாஸ்திரிய சங்கீதத்தில் இந்திய வர்ண அமைப்பு முறையின் தாக்கம் குறித்து உங்களுக்கு இருக்கும் அதே சிந்தனை அவருக்கும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களோ என்ற ஐயம் எழுகிறது.

5/31/2006 5:09 AM  
Blogger Unknown said...

உங்கள் சிம்பு பற்றிய கட்டுரைக்கு என் விமர்சனத்தை இங்கு இட்டுள்ளேன்.படித்து பார்த்து உங்கள் கருத்தை சொல்லவும்.

http://holyox.blogspot.com/2006/05/95.html

அன்புடன்
செல்வன்

5/31/2006 6:07 AM  
Blogger Muthu said...

நல்ல அலசல்..ரோசா..மற்ற பகுதிகளை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்

5/31/2006 1:29 PM  
Blogger ஜோ/Joe said...

ரோசா சார்,
அருமையான பதிவு .இசையின் நுணுக்கங்களை அறியாத என் போன்றோரையே இளையராஜா என்னும் மேதை பரவசப்படுத்தும் போது ,இசையறிந்த பலரும் இளையராஜாவை சிலாகிப்பதில் ஆச்சரியம் இல்லை .தமிழ் சமுதாயத்தில் அள்ளித் தெளிக்கப்பட்டும் அர்த்தமற்ற அடைமொழிகளுக்கு நடுவே இசைஞானி ,நடிகர் திலகம் போன்ற வெகுசில மட்டுமே சந்தேகத்திற்கிடமில்லாமல் பொருந்துகின்றன.

இளையராஜாவின் ஒரு பாமர ரசிகனாய் இந்த பதிவுக்கு மீண்டும் நன்றி!

5/31/2006 5:02 PM  
Blogger G.Ragavan said...

வசந்த், மிகவும் நல்ல அலசல். இசைத்திறமையில் இளையாராஜா சிறந்தவர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது. இசைத்தேடலில் முழுமை கொண்ட அவர் ஆன்மீகத்தில் இன்னமும் செல்ல வேண்டியது நீண்ட தொலைவு என்றே கருதுகிறேன். அதற்குத் தக்க முறையான சமயமும் இதுவே.

உளரல்கள் என்று நீங்கள் சொன்னது ஒரு குறிப்பிட்ட விதத்தில் உண்மைதான். அவர் எழுதிய வெண்பாக்களைப் படித்தால் நீங்கள் சொல்வதில் எவ்வளவு உண்மை என்று எல்லாருக்கும் புரியும். அதை விடக் கொடுமை...அதற்கு வார்த்தைச் சித்தரில் விளக்கங்கள். நல்ல விளக்கம் சொல்லக் கூடியவர் வலம்புரி. அவரே தடுமாறியிருக்கிறார். இதை இளையராஜாவின் தவறு என்று சொல்ல முடியாது. ஆன்மீக முயற்சியில் இதுவும் ஒரு வழி. அதை அவர் முயற்சித்திருக்கிறார். ஆனாலும் எழுத்தை விட இசை அவருக்கு மிகவும் பொருத்தமானது.

விஸ்வநாதன் ஒத்தையடிப் பாதை போட்டு நடந்து போனார். ராஜா அந்த ஒத்தையடிப் பாதையைத் திருத்தி தார் ரோடு போட்டு காரில் போனார். அந்தத் தார் ரோட்டை சிமிண்ட்டு போட்டு செம்மைப் படுத்தி ரகுமான் விமானத்தில் போகிறார். இதுதான் பரிணாமம். இதில் ஒருத்தர் அவரவர் வேலையைச் சரியாகச் செய்யாமல் போனாலும் அடுத்தவர் அந்த வேலையைச் செய்ய வேண்டியிருந்திருக்கும். முன்னேற்றமும் தள்ளிப் போயிருக்கும்.

இப்பொழுது இசையில் இருக்கும் வெற்றிடம் எதனால் என நினைக்கிறீர்கள்? சிமிண்டு ரோட்டில் விமானம் ஓட்டத்தான் ஆள் இருக்கிறார்கள். அதை மேம்படுத்தி ராக்கெட் விட ஆள் இல்லை. அந்த ஆள் வருகையில் இசை இன்னொரு படி மேலே போகும்.

ஒரு இசையமைப்பாளர் என்ற வகையில் இளையராஜாவை எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக எழுபதுகளின் பின்பாதியும் என்பதுகளின் முன்பாதியும்.

5/31/2006 5:05 PM  
Blogger ROSAVASANTH said...

//அவர் உளறல்கள் எவை என்று சில உதார்ணம் தர முடியுமா?//

நடராஜன் ஆசிரியராக இருந்த, பாவை சந்திரன் போன்றவர்கள் மிகுந்த அளவு பங்களித்த , 'புதிய பார்வை' என்ற பத்திரிகையில் இளயராஜா ஒரு ஆன்மீக தொடர் எழுதிவந்தார். அது புத்தகமாக கூட வந்திருக்க வாய்புண்டு. ஆனால் நான் பார்த்ததில்லை. இளயராஜாவின் உளரல்களுக்கு வேறு உதாரணங்கள் உண்டு எனினும், இதை ஒரு உதாரணமாக சொல்லலாம்.

5/31/2006 5:27 PM  
Blogger ROSAVASANTH said...

ஜோ நன்றி. ராகவன் உங்கள் விரிவான கருத்துக்களுக்கும். மற்றவர்களுக்கு நன்றி.

இதை விரிவாக எழுத நினைக்கிறேன். இந்த வாரம் முடிக்க இயலும் என்று தோன்றவில்லை. இன்னும் ஒரு பதிவு வரும். அதற்கு பிறகு இந்த வாரம் முடிந்த பின்புதான் பார்க்க வேண்டும்.

5/31/2006 5:46 PM  
Blogger -/பெயரிலி. said...

//அவர் உளறல்கள் எவை என்று சில உதார்ணம் தர முடியுமா?//

திருவாசகத்துக்கு முன்னால், அவர்பேசும் சில வாசகமே போதுமே :-(

5/31/2006 10:03 PM  
Blogger Unknown said...

திருவாசகத்துக்கு முன்னால், அவர்பேசும் சில வாசகமே போதுமே :-( //

நான் தமிழ்நாட்டை விட்டு வந்து ரொம்பநாள் ஆச்சுங்க.திருவாசகம் எல்லாம் கேட்டதில்லை.என்ன சொன்னாருன்னு சொன்னா புரிஞ்சுக்குவேன்

நன்றி

அன்புடன்
செல்வன்

6/01/2006 2:11 AM  
Blogger சாணக்கியன் said...

Hello Sir,
I agree that Tamil Film did not utilise the skills of Ilayaraja to the full. But I disagree with that that he could not fit rightly to the film music like MSV and ARR. He has incredibily contributed to film music and did lots of experiments and innovations in that. Everything cannot be spoonfed. Even to enjoy an art you have to spend some time and learn to enjoy that Art. Modern Art is an example for that. Similarly, to understand and enjoy IRs music completely one have to have a passion for music. What I am trying to say is that once we understood or enjoy some pieces of his music and feel that is incredible then as a fan of music it is our duty to search/research the treasures kept inside his works(music). Even in folk songs or the so called 'kuthu pattu' IR given nice tunes and the best use of instruments in that. 'Ayya veedu thoranduthan irukku' from Kadalukku mariyadai and 'Kana karunguyile' from SETHU are few of them to quote. IRs given excellent tunes for the situations in the film which adds a lot of value to the film. But those songs do not become hit in audios. Thats not his mistake. Thats our mistake. Many of the music lovers have identified such songs of IR and still listening. ARR on the other hand composes only for the audios. Those may not fit best to the situations that come in the movie. You can't imagine any other music director composing such a fitting song to the situation that of the song, 'vooru vittu vooru vandu' from KARAGATTAK KARAN. So, I disagree with you that he could not fit into the film music. Its the people who didnot realise the treasures he has kept in his music.

Sorry for giving feedback in tamil. The tool that I have been using is not working now.

Thanks,

6/02/2006 8:09 PM  
Blogger ROSAVASANTH said...

sorry I replied in the second part

6/02/2006 8:41 PM  
Blogger பனிமலர் said...

அருமையான தொகுப்பு, எனது தேவைக்காக உங்களது சுட்டிகளை பயன்படுத்திக்கொண்டுள்ளேன். ஆட்சோபிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

9/01/2009 2:54 AM  
Blogger ROSAVASANTH said...

நன்றி பனிமலர். இந்த இரண்டு பத்வுகளும் நான் நீளமாக எழுத நினைத்து தொடர இயலாமல் போன தொடரின் துவக்கம் மட்டுமே. அதனால் சில மட்டையடிகளாகவும், தொடர்பு அறுந்தவைகளாகவும் இருக்கலாம். நீங்கள் இதை பயன்படுத்துவது குறித்து பிரச்சனை எதுவுமில்லை.

9/01/2009 3:42 AM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter