ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Wednesday, May 03, 2006

4. தேர்தல் - 2006.

இவை தவிர தொகுதி ரீதியாய் எனக்கு இருக்கும் அக்கறை, வேலூரில் போட்டியிடும் சல்மா (கவிஞர் அல்ல), காட்டு மன்னார் கோவிலில் விடுதலை சிறுத்தைகளின் வேட்பாளரான நம் அன்புக்குரிய அறிஞர் ரவிக்குமார்.

வேலூரில் போட்டியிடும் சல்மா ஒரு அரவாணி. அவரை வெற்றி பெறச் செய்தால், அது அரவாணிகளை சகமனிதர்களாக ஒப்புகொள்ளும் நம் சமூகத்தின் சகிப்புதன்மைக்கு எடுத்துக் காட்டாகவும், பன்மை தன்மையை அங்கீகரிக்கும் பரந்த மனப்பான்மை கொண்ட கலாச்சாரத்தை நோக்கிய பயணமாகவும் இருக்கும். அரவாணிகள் மீது நம் சமூகம் பிரயோகிக்கும் வன்முறையையும், அவர்கள் இருப்பையே அங்கீகரிக்காத கீழான பார்வையையும் விளக்க வேண்டியதில்லை. அவர்களின் அடையாளமாய் இருக்கும் கூவாகத்திலேயே (1998இல் நேரில் சென்றபோது கண்டதில்) அவர்கள் மீது நிகழும் வன்முறைக்கு அளவில்லை. இந்நிலையில் சல்மாவை வேலூர் மக்கள் வெற்றி பெறச் செய்வார்களெனில், தமிழர் நாகரீகம் ஆரோக்கியம் அடைந்து வருவதன் அடையாளமாக எண்ணிக் கொள்ளலாம். (வெற்றி பெறாவிட்டால் அதற்கு எந்த கற்பிதமும் இல்லை.) (வேலூரில்தான் போட்டியிடுகிறாரா என்று தெளிவுபடுத்திக் கொள்ள தேடினால், வேலூரில் சல்மா என்பவர் ஆண் அடையாளத்தில் போட்டியிடுவதாக அறிந்து கொள்ள முடிந்தது.)

சில வருடங்களுக்கு முன்னால் எதிர்பார்த்தது இப்போது நடக்கிறது. ரவிக்குமார் வேலையை துறந்துவிட்டு அரசியலில் குதித்திருப்பது (அவருக்கு நல்லதா என்று தெரியாவிட்டாலும்), குறைந்த பட்சம் இரண்டு விதங்களில் நல்லது. நிறப்பிரிகை ஆசிரியர் குழுவிலிருந்து விலகி, இரண்டு வருட மௌனத்திற்கு பிறகு, ரவிக்குமார் முன்வைத்த பெரியார் விமர்சனம் (அதுவும் அ.மார்ஸுடனான ஈகோ சண்டையில், காலச்சுவடு பாலிடிக்ஸில் தொடங்கியது என்றாலும்), ஆரோக்கியமான ஒரு விவாதத்தை நோக்கியதாகவே எனக்கு துவக்கத்தில் தெரிந்தது. பின்னர் அது அழுகிப் போய், காலச்சுவடில் அவரது கடைசி கட்டுரையில் பெரியாரை பொம்பளை பொறுக்கியாய் காட்டும் அயோக்கியத்தனமாகவும், அகில இந்திய பத்திரிகைகள்/அறிவுஜீவி களுடனான குசும்பாகவும் வெளிப்பட்டாலும் கூட, அவரை போன்ற தலித் அரசியல் சார்பும், சமூக அக்கறையும், கோட்பாட்டு தெளிவும், களப்பணி அனுபவங்களும் கொண்ட அறிவு ஜீவு ஒருவர், வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைவதை ஆதரிப்பதை தவிர, நமக்கெல்லாம் வேறு வேலை என்ன இருக்கிறது! ஆகையால் தோழர் ரவிக்குமார் வெற்றி பெற்று அரசியலில் மேலும் மேலும் பிரகாசித்தால் ரொம்ப ரொம்ப சந்தோஷம்!

இதில் இருக்கும் வேறு சந்தோஷம் என்னவென்றால், ரவிகுமார் ஜெயலலிதாவின் ஆதரவோடு நிற்பதும், அதன் காரணமாய் அவர் செய்ய வேண்டிய சமரசங்களும், குறிப்பாய் ஜெயலலிதாவின் பணத்தில் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டியதான நிலை. இதில் சந்தோஷப்பட என்ன இருக்கிறது என்று தோன்றலாம். முதலில் ஜெயலலிதாவின் (அதாவது அதிமுகவின்) பணத்தில் அவர் செய்யும் தேர்தல் பிரசாரத்தை குற்றமாகவோ, தவறாகவோ, தார்மீகம் இழந்ததாகவோ, எதிர்மறையான ஒரு விஷயமாக கூட பார்க்கவில்லை. மாறாக நேர்மறையானதாகத்தான் பார்கிறேன். தேர்தல் களத்தில் இறங்குவது என்றாகிய பின், இதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. முடிந்த வரை பயன்படுத்திக் கொள்ளட்டும் என்பதுதான் என் பார்வை. எனவே நமது விமர்சனத்துக்கு இலக்கானவரும் 'யோக்கியமல்ல' என்ற அற்ப சந்தோஷம் பற்றியது அல்ல.

ரவிகுமார் முன்வைக்கும் அரசியலின் அறிவுஜீவித்தனத்தை எடுத்துகொண்டால், அது மிக வித்தியாசமாய் கலக்கப் பட்ட காக்டெய்ல். ஒரு பக்கம் அவர் (மார்க்சிய லெனினிய அரசியலில் இருந்து விலகி), தனது பாணியில் நிறப்பிரிகை காலத்தில் கைகொண்ட தலித், மாற்றுக் கலாச்சார, பெரியாரியம் சார்ந்த எதிர்ப்பு அரசியல். இன்னொரு பக்கம் தமிழ் சிறுபத்திரிகைகளின் நவீனத்துவம் சார்ந்த, அவரது இலக்கிய அறிவுஜீவி முகம். இடையே தன் வாசிப்பில் ஒட்டிகொண்டு வெளிகாட்டலுக்கு நிர்பந்திக்கும் ஃபூக்கோ. இவை முரண்படாமல் பயணிக்க முடியாது என்பது என் வாதமல்ல. ஆனால் ஒன்றின் காட்டமும், இன்னொன்றின் சாந்தமும், ரவிக்குமாரின் தனிதன்மை கொண்ட குசும்புகளுடன், உணர்ச்சிவயப்பட்ட பெரிது படுத்தல்களுடன் ஒன்று சேரும் போது, வண்டி குண்டக்க மண்டக்க பயணித்து விபத்துக்கு உள்ளாகிறது. சகபயணிகளின் போக்கிற்கு ஏற்ப, ஆக்சிலேட்டரை அழுத்தும் போதெல்லாம், வெறுப்பாய் புகை கக்குகிறது, எதிர்திசையில் பயணித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, கருத்தியல் ரீதியாய் இருக்கும் பலவீனத்தையே தெம்பாக்கி, தார்மீகப் படுத்தி பில்லியனில் ஏற்றிகொண்டு ஒரு குத்துமதிப்பாய் பயணிக்கிறது.

அவரது இலக்கிய நவீனத்தவமும், எதிர்ப்பு அரசியலும் இணைந்து இலக்கிய தளத்தில் வெளிபட்ட போது, சாருநிவேதிதாவின் சொந்த வாழ்க்கையை கிசுகிசுப்பதை, தமிழவனை திட்டுவதை தாண்டி எதையும் செய்ததாய் (எனக்கு வாசிக்க கிடைத்தவரை) தெரியவில்லை. இதையெல்லாம் நேரடியாய் சொல்வதில் உள்ள நேர்மை, வலிந்த புனைவாக முன் வைக்கும்போது கயமைத்தனமாகவே வெளிபடுகிறது. (சாருநிவேதிதாவிற்கும் இது பொருந்தும் என்றாலும் அவரது சாதனை என்று தனித்துவமாக வேறு விஷயங்கள் உள்ளன.) ஒரு காலத்தில் ரவிக்குமாரால், எல்லோரையும் விட அதிகமாக தூக்கி, கட்டவுட்டிற்கு மேலே வைக்கப் பட்ட பெரியார், இன்று அவரால் மிக மோசமாய் தாக்கப்பட்டு, அவுட்லுக் ஆனந்த் போன்று தான் என்ன எழுதுகிறோம் என்ற நேர்மையும் தெளிவும் இல்லாத அவரது நண்பர்களால் ஆங்கிலத்தில் கிறுக்கப்பட்டு, விஷயமும் பிண்ணணியும் சரியாய் தெரியாத இந்திய அளவிலான தலித் சார்புடையவர்களிடம் ஒரு பக்கமாய் மட்டும் போய் சேருகிறது.

ஒரு உதாரணமாய் 1995இல் பெரியாரியம் தொகுப்பில் ரவிக்குமார் பேசியதைப் பார்த்தால்,

"தமிழவன் எழுப்பிய பிரச்சனையை யாரும் விரிவாய் பேசவில்லை, ............

அவர் முன்னிலைப்படுத்துகிற ஆட்களுக்கு ஆபத்து வந்துட்டுங்கறதுதான் அவர் முன் வைக்கிற குற்றச்சாட்டு. மௌனி, காநசு இது மாதிரி ஆட்களுக்கு. கார்ல் மார்க்சிடம் இருக்கக் கூடிய இசை பற்றிய ஆர்வம், கவிதை பற்றிய ஆர்வம் இதையெல்லாம் இவர்கள் வியந்து போன்றுவார்கள். என்னை 'ஸ்தானோஸ்'ன்னு சொன்னாலும் சரி. இது மாதிரி கூறுகள் மார்க்சிடமிருந்த ஹெகலிய தாக்கத்தின் விளைவுகள். இது என்ன மாதிரி meta physical சிந்தனைகளை அவரிடத்தில் ஏற்படுத்தியது என்றெல்லாம் பார்கணும். மார்க்சியத்திலுள்ள இடைவெளிகள் பற்றி பேசும் போது இலக்கியம் பற்றிய அதனுடைய பார்வையும் ஒன்று. அந்த வகையில் மார்க்சிடமிருந்த சில தவறுகளுக்கு பெரியார் இடமில்லாமல் செய்திருந்தார் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கு."

(பெரியாரியம் - நிறப்பிரிகை கட்டுரைகள், பக்கம் 115.)

பெரியாரியம் தொகுப்பிலும், 90களின் நடுவே வந்த சிறு பத்திரிகைகளில் வேறு சில இடங்களிலும் ரவிக்குமார் பெரியாரை அளவுக்கு மீறி புகழ்ந்து பேசிய பல வாசகங்கள் இருந்தும், இதை மட்டும் எடுத்து போட காரணம், மார்க்ஸை விட பெரிய ஆளாக பெரியாரை அவர் புகழ்ந்துள்ளது மட்டுமல்ல. இன்று அவர் ஜெயமோகனுடன் (கருத்தியல் ரீதியாய்) பகிர்ந்து கொண்டு, பெரியாரை இலக்கியத்தின் எதிரியாய் முன்வைக்கும் பார்வையையே, அன்று பெரியாரின் சிறப்பு தன்மையாக சொன்னதை எடுத்துக் காட்டத்தான். (எனக்கு ரவிக்குமாரின் கருத்து பெரியாருக்கு பொருந்தி வருவது என்ற விதத்தில் மட்டுமில்லாது, அதன் அடிப்படையிலேயே ஒப்புதலில்லாதது.) இவ்வாறு ஒரு சந்தர்ப்பத்தில் பெரிதுபடுத்தி, தடாலடியாய் வெளிவரும் ரவிக்குமாரின் ஒரு பார்வையின் தன்மையே, அவரது இப்போதய பெரியார் பற்றிய கட்டுரைகளிலும், திருமாவளவனின் செயல்பாடுகளை எல்லாம் நியாயப்படுத்தும் எழுதுக்களிலும் வெளிப்படுவதை காணலாம். இந்த பதிவின் நோக்கம் ரவிக்குமாரின் பெரியார் எதிர்ப்பின் முரண்பாட்டை, சந்தர்ப்ப வாதத்தை, ஆபத்தை பற்றி விவாதிப்பதல்ல, ரவிக்குமார் தேர்தலில் போட்டியிடுவதை முன்வைத்தது என்பதால் அதை நோக்கியே பேசுகிறேன்.

எந்த ஒரு அடையாளம் சார்ந்த அரசியலிலும் ஒரு அடிப்படை பிரச்சனை இருக்கும். தூக்கிப் பிடிக்கும் அடையாளத்தை தூய்மையானதாய் கற்பித்து, அதன் அடைப்படையில் கட்டமைக்கப் பட்ட கருத்தாக்கத்தை முன்வைத்து, மற்ற எல்லா வகை அடையாளங்களையும் அரசியல்களையும் நிகழ்வுகளையும் அணுக முனைவது. தூக்கி பிடிக்கும் அடையாளத்தோடு, இயைந்து வரும் அனைத்தையும் தூய்மையாக்கப் பட்டதாக பார்க்க வேண்டிவரும். மற்ற அடையாளங்களின் கற்பிதத் தன்மை (அல்லது பொய்மை) பற்றி தயக்கமில்லாமல் பேசும் போது, தூக்கிப் பிடிக்கும் அடையாளத்தை மட்டும் இயற்கையானதாய் பேசவேண்டி வரும். இந்திய தேசியம், தமிழ் தேசியத்தை முன்வைத்து இதை விலாவாரியாக விளக்க உதாரணங்கள் இரைந்து கிடக்கின்றன. ஆனால் தலித் என்ற அடையாளம் கூட இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடாத வண்ணமே இருக்கிறது. அதற்கு சிறந்த உதாரணம் ரவிக்குமாரும் அவரை சார்ந்த சிலரும். (இதை எல்லாம் சொல்லும்போது அடையாளம் சார்ந்த அரசியலை எல்லாமே ஆபத்தானதாக சொல்லி நிராகரிக்கவோ, அதற்கான தேவையை மறுக்கவோ இல்லை.)


தமிழ் தேசியம் குறித்தோ, பெரியாரின் அரசியல் குறித்தோ எழுதிய விமர்சனத்தில், தான் நிராகரிக்கப் பயன்படுத்தும் தர்க்கங்களை, ரவிக்குமாரால் தலித்தியத்திற்கு பொருத்தி பார்க்க இயலாது. குறைந்த பட்சமாய் பெரியாரிடம் காட்டும் கறார்தன்மையை அயோத்திதாசரிடம் அவரால் காட்ட முடியாது. அயோத்திதாசரை பற்றி விமர்சனம் வந்தால் அதை வசையாலோ மௌனத்தாலோ மட்டுமே அவரால் எதிர்கொள்ள முடியும். பெரியாரை 'கட்டுடைக்கவும்' , அல்லது மறுவாசிப்பு என்ற பெயரால் அவதூறுகள் செய்யவும் முடியும். ஆனால் அயோத்திதாசரை வியந்து இல்லாததை எல்லாம் கட்டமைக்க மட்டுமே முடியும். பெரியார் குறித்த அவரது கடைசி காலச்சுவடு கட்டுரையை எடுத்து கொண்டால், வலிந்து பெரியார் சொன்னதை எல்லாம் திரித்து, பெரியார் சொன்னதெல்லாம் வெறும் அதிர்ச்சியூட்டும் கருத்துக்களே தவிர, அது குடும்பம் என்ற நிறுவனத்தை நிராகரிப்பதல்ல என்று நிறுவ, படாத பாடுபட்ட தர்க்கங்களை எல்லாம் அனாசியமாய் அள்ளி போடுவார்(ஆனால் ரவிக்குமார் எழுதுவது முற்றிலும் பொய், பெரியார் குடும்பம் என்ற கருத்தாக்கதை முற்றிலும் கட்டுடைக்கும் உரைகளையே நிகழ்த்தியிருப்பார்.) அதே கட்டுரையில் போகிற போக்கில், அம்பேத்கார் தனது 'இந்தியாவில் சாதிகள்' புத்தகத்தில், குடும்பம் என்ற கருத்தாக்கத்தை கட்டுடைத்ததாக சான்றிதழ் வழக்குவார். அம்பேத்காரின் 'இந்தியாவில் சாதிகள்' புத்தகத்தை படித்த யாருக்குமே இப்படி தோன்றியிருக்க வாய்ப்பில்லை. அம்பேத்கார் சதி போன்ற வழக்கங்கள் கூட, சாதிய ஒழுங்கை (அக திருமணத்தை) காப்பாற்றும் நோக்கில் உருவானதை பற்றிய ஆய்வை தந்திருப்பரே ஒழிய, குடும்பம் பற்றி எந்த பெரிய ஆச்சரியப்படக் கூடிய கருத்தையும் (பெரியாரை போல) கூறியிருக்க மாட்டார். மேலும் அம்பேத்காரின் பல கருத்துக்கள் (தலித் சார்ந்தவைகள் தவிர) பழைமைவாத தன்மை கொண்டது என்பதையும், குடும்பம் என்ற நிறுவனத்தின் மீது அவருக்கு எந்த பெரிய விமர்சனமும் (பெரியாரை போல) இல்லை என்பதையும் அறிய, வெறும் வாசிக்கும் திறன் மட்டும் போதும். ஆனால் அம்பேத்கார், அயோத்திதாசர் தலித் அடையாளம் சார்ந்தவர்கள், ரவிக்குமாரின் கற்பிதப்படி அவர்கள் தூய்மையான அடையாளம் கொண்டவர்கள் என்பதால், அவர்களுக்கு இல்லாத தகுதிகள் தரப்படுவதும், பெரியார் உண்மையாகவே வைத்த கருத்தாக்கங்கள் கூட திரிக்கப் பட்டு, அவர் பெண்பித்தராக, வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக கருத்து சொன்னவராக அவதூறு செய்யப்படுவார். தமிழ் தேசியம் என்பதை எதிர்க்கும் ரவிக்குமார், இதுவரை நடந்த அத்தனை 'மொழிபோர்களையும்' வரிசையாக சாக்குகளை சொல்லி நிராகரித்துவிட்டு, இன்றய பாமக-விசி 'மொழிப்போர்' மட்டும் அவற்றிலிருந்து வேறுபட்டதாய், திருமாவளவன் தலமை தாங்குகிறார் என்பதால் மட்டுமே தூய்மைப்படுத்தப் பட்டதாய், ரொம்ப கஷ்டப்பட்டு கட்டுரை வரைந்ததை விட, இன்னும் ஜோக்காக எதிர்காலத்தில் பேசவேண்டிவரும் என்றாலும்,

தலித் என்ற அடையாளத்தை புனிதமானதாய் கற்பித்து, அதை சார்ந்து நிகழும் எதையும் உன்னதப்படுத்தும், ரவிகுமாரின் கருத்தியல் தூய்மையை, அவருடய தேர்தல் அரசியல் ஈடுபாடுகள், ஜெயலலிதாவின் கூட்டணி, ஜெயலலிதாவின் பணம் மாசு படுத்தும் என்பதுதான், ரவிக்குமார் தேர்தலில் போட்டியிடுவதில் எனக்கு இருக்கும் இன்னொரு சந்தோஷப் படக் கூடிய விஷயம். இங்கே மாசுபடுதல் என்பதை ஒரு நல்ல விஷயமாகவே, ஒரு நேர்மறையான பொருளிலேயே சொல்லுகிறேன். தூய்மை என்பது பாசிசக் கூறை கொண்டது என்பதனால், அதற்கு எதிராக நிகழ்வதாய் இந்த மாசுபடுதலை கருதுகிறேன்.

தேர்தல் முடிந்த உடன் அதிமுகவுடனான கூட்டணிக்கு அருத்தமில்லாமல் போகும். அதனால் இதன் மூலம் தலித் சார்ந்த அரசியலுக்கு பின்னடைவு ஏற்பட வாய்பில்லை. (வேறு காரணங்களால் ஏற்படலாம்.) தலித் என்ற அடையாளத்தை தூய்மையானதாய், ரவிக்குமார் செய்யும் கற்பிதம் மட்டுமே மாசடையும் என்று தோன்றுவதால், ரவிக்குமாரின் அரசியல் பிரவேசத்தை வாழ்த்தி வரவேற்கிறேன். முதலாய் சொன்ன, ரவிக்குமார் என்ற தலித் அரசியல் சார்ந்த அறிவிஜீவி வெற்றி சட்டசபைக்குள் நுழைவதுதான் முக்கிய காரணம் என்றாலும், இந்த காரணத்தாலும் வரவேற்கிறேன்.

எதை நோக்கி குவிப்பது என்ற தெளிவில்லாமல் நீட்டி முழக்கிய இந்த பதிவிற்கு மன்னிக்கவும். இந்த பதிவுடன் தேர்தல் குறித்த என் பதிவுகள் நிறைவுறுவதை மகிழ்வுடன் அறிவிக்கிறேன். வாசித்த, பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு மிகவும் நன்றி.

Post a Comment

3 Comments:

Blogger -/சுடலை மாடன்/- said...

உங்களுடைய நான்கு பதிவுகளுமே பெருமளவு ஒத்துக்கொள்ளும் படியாக இருந்தது. இந்தத் தேர்தலில்தான் முதன் முதலாக எனக்கு இரண்டு அணிகளின் மேலும் ஒரு ஆர்வமில்லாத நிலை. இருந்தாலும் தமிழ் நாட்டின் அடுத்த ஐந்து ஆண்டுகளின் இந்த இரண்டில் ஒன்றுதான் ஆளப்போகிறது என்ற கட்டாயத்தில் சில கருத்துக்கள் உண்டு. அவையெல்லாம் நடந்து விடும் என்ற கனவெல்லாம் இல்லை. இருந்தாலும் சொல்லி வைக்கிறேன்.

1. ஜெயலலிதா முதல் மூன்று ஆண்டுகளில் நடந்து கொண்ட சர்வாதிகாரப் போக்கினை தண்டிக்காமல் விட்டால் அவர் மீண்டும் பயங்கரமான சர்வாதிகாரியாக மாற வாய்ப்புண்டு. அதிமுக கூட்டணி தோற்கடிக்கப் பட வேண்டும். அதனால் அவருடைய அணி ஒரு வேளை வெற்றி பெற நேர்ந்தாலும் கூட, அவர் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிட்டக் கூடாது. வைக்கோ, திருமா ஓரளவுக்கு அக்கூட்டணியின் இடங்களைப் பங்கு போட வேண்டும். அதற்காக நீங்கள் அடுக்கிய அத்தனைக் காரணங்களுடனும் உடன்படுகிறேன்.

2. ஜெயலலிதாவை தண்டிக்க நினைத்து, அதற்கு மாற்றாக முற்றிலும் சுயனலக் கூடாரமாக மாறிப் போன சன்டிவிக் கட்சியைக் (திமுக என்று குறிப்பிடவே எனக்கு மனமில்லை) கொண்டு வைப்பதால் தமிழ் நாட்டுக்கு வர இருக்கும் பிரச்னை மட்டும் அல்லாமல் எந்தக் கொள்கைக்காக திமுக ஆரம்பிக்கப் பட்டதோ, அந்தக் கொள்கையைப் பலவீனப்படுத்தி மக்கள் மனதில் ஒரு வெறுப்பை உண்டு பண்ணும். மக்கள் விரோத இந்துத்துவ சக்திகள் ஆட்சிக் கட்டிலில் ஏறியபின் ஊழல் குற்றச்சாட்டுகளில் மாட்டிக் கொண்டதால் அவர்களுடைய இந்துத்துவக் கொள்கைகள் பலவீனப் பட்டுப் போனது நமக்கு உவப்பாக இருக்கிறது. ஆனால் திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை சமூக நீதி, அடிப்படை மொழியுரிமை, மானில சுயாட்சி போன்ற சமதர்மக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. அக்கொள்கை திராவிடக் கட்சிகளின் ஊழல்களால பலவீனப் பட்டு, தமிழ் மக்களால் ஏற்கனவே நோயாளியாகப் பார்க்கப் பட்டு வருகிறது. பல குறைகள் இருந்தாலும் கலைஞர்தான் அக்கட்சியில் எஞ்சி இருக்கும் ஒரே கண்ணி. ஆனால் அக்கொள்கையைத் தன் சொந்த இலாபத்துக்கு குழி தோண்டிப் புதைப்பதில் சன் டிவிக் கும்பல எப்பொழுதும் தயாராக இருக்கிறது, அக்கும்பல் திமுகவை ஆட்டிப் படைப்பது நன்றாகத் தெரிகிறது.

3. எழுபது, எண்பதுகளில் கலைஞரின் மற்றும் திமுகவின் வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணம் பார்ப்பனிய (அரசு மற்றும் தனியார்) ஊடகங்கள். திமுகவின் ஊழலையும், அவப் பெயரையும் ஊதிப் பெருக்கின. அந்த ஊடக வன்முறைக்கு முக்கியக் காரணம், திமுக ஆட்சியில் நிகழ்ந்த அதிகாரப் பரவல் மூலம் நிகழ்ந்த சமுதாய மாற்றம். ஆனால் எந்த ஊடக வன்முறையால் திமுக துன்புறுத்தப் பட்டதோ, அதே ஊடக வன்முறையை திமுக பயன்படுத்துவது, அதுவும் தனக்கு ஓட்டு வாங்கிக் கொடுத்த வைக்கோ போன்றவர்கள் மீதே பயன்படுத்துவது அநீதியானது.

4. திமுகவின் அடிப்படைக் கொள்கை மொழியுரிமையும், தமிழ் மொழிக்குக் கிடைக்கவேண்டிய சம அந்தஸ்தும். திமுகவின் இன்னொரு அடிப்படைக்கொள்கை சமூக நீதி, பிறப்பால் அனைவரும் ஒன்று என்பது. ஆனால் தயாநிதி மாறனை மத்திய மந்திரியாக்கியது இந்த இரண்டுக்கும் நேர் எதிரான கொள்கையடிப்படையில்.

5. மேலே சொன்ன காரணங்கள் (2 முதல் 4 வரை) அடிப்படையில் திமுகவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிட்டக் கூடாது. மத்தியிலும், மாநிலத்திலும் கூட்டுக் கள்ளாளிகளாக இருக்கும் காங்கிரஸுக்கும் நிறைய இடங்கள் கிடைக்கக் கூடாது. அக்கூட்டணியில் உள்ள மற்றக் கட்சிகளுக்கும் கணிசமான இடங்கள் கிடைக்க வேண்டும்.

6. வைக்கோ செய்தது துரோகம் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. கலைஞர் வைக்கோவுக்கு செய்த துரோகத்தை (கொலைப் பழி உட்பட) விட இது ஒன்றும் பெரிதல்ல. ஆனால் வைக்கோ கூட்டணி மாறிய பிறகு, தயானிதி மாறன், டி. இராஜேந்தர் போன்றவர்களின் இழிவான பேச்சுக்களுக்குப் பதிலாக தரக்குறைவாகப் பேசி வருவது சகிக்க முடியவில்லை. (குறிப்பாக முன்பெல்லாம் அவர் கலைஞர் தரமிழந்து பேசிய போது கூட, கண்ணியம் காத்து வந்திருக்கிறார்). தேர்தலில் வைகோ ஒருவேளை நல்ல வெற்றி பெற்றாலும் கூட அவரது செல்வாக்கில் தோல்வியடைந்துள்ளார் என்று சொல்வேன். கடந்த சில ஆண்டுகளாக சன் டிவி குடும்பத்தினர் மேலான கோபத்தை அடக்கி வைத்திருக்கிறார் என்று மட்டும் தெரிகிறது. பெருந்தன்மையாக அவற்றைக் கடந்து வந்தவர் போலத் தோன்றவில்லை.

7. கலைஞர் திருமாவுக்கு இழைத்தது அவமதிப்பும், துரோகமும் - ஆனாலும் திருமா தேர்தல் பிரச்சாரத்தில் கண்ணியமாக நடந்து கொண்டிருக்கிறார். ஜெயலலிதாவையும் தலை மேல் வைத்து ஆடவில்லை. தமிழகத்துக்குக் கிடைத்துள்ள ஒரு நம்பிக்கையூட்டக் கூடிய தலைவர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் கட்சிகள், ஊடகங்கள், அறிவுஜீவிகள் அவரை தலித்துத் தலைவராக மட்டுமே பார்க்கின்றனர். அதனால் தான் அவர் தமிழ் மொழியைப் பற்றியெல்லாம் அக்கறைப் படக் கூடாது. தலித்து பிரச்னைகளை மட்டுமே கையிலெடுக்க வேண்டும் என்று பேசுவதெல்லாம். இப்படிச் சொல்லுகிறவர்களுக்கெல்லாம் திருமாவை தலித்துப் பிரச்னைகளுக்காக மட்டுமே போராடிய போது தெரியாது. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகக் கூட அவர் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக நடத்திய போராட்டங்கள் மட்டும்தான் தெரியும். அவருடைய தலித்து உரிமைப் போராட்டங்களைப் பற்றித் தெரியாது. தான் ஏன் தமிழ் பதுகாப்புப் இயக்கத்தில் பங்கு கொள்கிறேன் என்று பலமுறை எடுத்துச் சொல்லியிருக்கிறார். பிபிஸி இணையதளத்தில் கூட அவருடைய செவ்வி உள்ளது. மற்றபடி தலித்துகளுக்கு ஆங்கில மொழிப் பயிற்சியளிக்க வேண்டும் என்பதில் உடன்பட்டாலும் இங்கு சொல்லப் பட்ட காரணங்களுடன் உடன் படன் விடவில்லை. பின்னூட்டத்தின் நீளம் கருதி இங்கு தவிர்க்கிறேன்.

7. எழுத்தாளர் இரவிக்குமார், சல்மா இன்னும் அவர்கள் போன்ற மற்ற வேட்பாளர்கள் யாரேனும் இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற ரோசாவின் கருத்தில் முழுக்க உடன்படுகிறேன். இரவிக்குமாரின் பெரியார் விமர்சனத்தைப் பற்றி ஏற்கனவே சில இடங்களில் (குறிப்பாக டோண்டு, தங்கமணி பதிவுகளில்) கருத்துச் சொல்லியிருப்பதாலும், இப்பின்னூட்டத்தின் நீளம் கருதியும் இங்கு தவிர்க்கிறேன்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

5/04/2006 2:24 PM  
Blogger ROSAVASANTH said...

சங்கர பாண்டி, விரிவான பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. கிட்டத்தட்ட முழுமையாக உடன்பாடு உண்டு.

5/04/2006 4:38 PM  
Blogger Muthu said...

ரோசா,


முதல் மூன்று பதிவுகளை விட
இந்த நான்காவது பதிவை நான் மிகவும் ரசித்தேன்.


விளக்கமாக பின்னர் எழுதுகிறேன்.(?)
ரவிகுமார் குறுக்கே திரும்பியது அதிசயம்தான்.இந்த பெரியார் எதிர்ப்பை இதை திருமா ஏற்றுக்கொள்கிறாரா)

5/04/2006 4:41 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter