ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Wednesday, July 12, 2006

புரட்ச்சியாளன் ஜிதான்!

ஜிதான் முட்டி மெதராத்ஸி கீழே விழுந்த அந்த வரலாற்று கணத்திற்கு சில மணி நேரங்களுக்கு பின்னால், யதார்த்தமாய் பலருக்கும் தோன்றியிருக்க வேண்டிய விஷயத்தை, இப்போதுதான் உலகம் பேசத் தொடங்கியிருக்கிறது. முதலில் தான் எதுவுமே பேசவில்லை என்று சொன்னதை மாற்றி, இரண்டு நாட்கள் கழித்து, ஜிதானை இகழும் வார்த்தைகளால் தான் கேவலப்படுத்தி கோபமூட்டியதை மெதராத்ஸி இப்போது ஒப்புகொண்டுள்ளார்.

எரிச்சல் என்னவென்றால் ஒரு இரண்டு நாட்கள் தலையங்கங்களிலும், கட்டுரைகளிலும் ஜிதானை, மாபாதகம் செய்தது போல் உலகம் திட்டிக் கொண்டிருந்தது. அந்த காட்சியை பார்த்த அடுத்த சில நொடிகளிலேயே அல்லது திரும்ப திரும்ப அந்த காட்சியை பார்த்தபின்னாவது, மிக தெளிவாக ஒரு விஷயம் தெரியும். மெதாராத்ஸியை விலக்கிவிட்டு சாதாரணமாக நடந்து சென்ற ஜிதான் திடீரென திரும்பி மண்டையால் முட்டி கீழே தள்ளுகிறார். அந்த செயல் விளையாட்டின் முரட்டுத்தனத்தின் போக்கில் நடைபெற்றதல்ல. ஒரு கோபமூட்டுதல் இல்லாமல் அவ்வாறு திடீரென திரும்பி அடிப்பதற்கான உந்துதல் இருக்க வாய்பில்லை. ஜிதானின் அல்ஜீரிய வேர்கள் எல்லோருக்கும் தெரியும். ஐரோப்பாவில் வட ஆப்பிரிக்கர்கள் பற்றிய முன்னபிப்ராயமும், பல இனவாத சொல்லாடல்களும், அதை வைத்து மிக எளிதாய் ஒரு கோபமூட்டலை செய்ய முடியும் என்பதும் தெரியும். இது தெரிந்தும், ஜிதான் ஏன் முட்டினார் என்ற கேள்வியை எழுப்பாமல், விளையாட்டு நேயத்தை அழுக்கு படுத்திவிட்டதாக ஒரு பாட்டம் பத்திரிகைகளும் பார்வையாளர்களும் திட்டித் தீர்த்தனர். பொதுப்புத்தி என்பது எப்படி வேலை செய்யும் என்பதற்கான இன்னொரு உதாரணம் இது.

இப்போதும் மெதாரத்ஸி தான் 'dirty terorist' என்றோ, ஜிதானின் அம்மா/சகோதரியை கேவலப்படுத்தும் விதமாகவோ எதுவும் சொல்லவில்லை என்கிறார். இன்னும் வேறு எதையோ எல்லாம் அவர் சொல்கிறார். ஆனால் 'நாகரீகமான முறையில்' ஜிதானை கேவலப்படுத்தி கோபப்படுத்த என்ன வார்த்தைகளை பயன்படுத்தினார் என்று மட்டும் சொல்லவில்லை. அநாகரிக வசவு பற்றியே விலாவரியாய் விவாதிக்கும் போது, நாகரீகமான வசவை அவர் பிரயோகித்திருந்தால், அதை சொல்வதில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.

மெதாரத்ஸி அந்த கோபமூட்டும் வார்த்தைகளை சொன்ன விதத்தை கவனிக்க வேண்டும். வெளிப்படையாய் தெரியும் வகையில் இல்லாமல், கேமாராவில் சிக்காத வகையில், உதட்டசைவு கூட தெரியாத வகையில் பார்வையாளர்களின் பார்வையிலிருந்து மறைந்து சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். வெள்ளை குசும்பு என்பது இதுதான். மாறாக தனது உடனடி எதிர்வினையை காட்டிவிட்டு ஜிதான் காட்டிய காட்டும் மௌனம் மிகுந்த நாகரீக தன்மை வாய்ந்தது.

இந்த கால்பந்தாட்டத்தின் போது பல இடங்களில் இனவாதம் நேரடியாய் தலைகாட்டியிருக்கிறது. கருப்பு வீரர்கள் வந்து இறங்கும் போது கூச்சலிடுவதும், கேவலப்படுத்தும் வகையில் சைகைகள் காட்டுவதும் நடந்திருக்கிறது. இந்த காரணங்களால்தான் 'இனவாதத்திற்கு எதிராய் கால்பந்தாட்டம்' என்பதாக விளம்பரப்படுத்த பட்டு, இறுதி ஆட்டத்திற்கு முன்னால் ஜிதானும் கானவாரோவும் இணைந்து இனவாதத்திற்கு எதிராய் அறிக்கையும் விட்டார்கள். இப்போது என்னவகை சுயசோதனைகளில் எல்லோரும் இறங்குவார்கள் என்பதை அவர்கள்தான் வெளிகாட்டவேண்டும்.

இன்னமும் உண்மையாய் என்ன நடந்தது என்று தெரியாதுதான். ஒருவேளை ஜிதான் எதையாவது தவறாக எடுத்துக் கொண்டு கோபப்பட்டிருக்கலாம்தான். அப்படி நடந்திருந்தாலும் அவருக்கு அதற்கான நியாயம் இருக்கிறது. இனவாதத்தையும் தன்னை கேவலப்படுத்தும் செய்கைகளையும் முன்னரே அவர் எதிர்கொண்டிருக்கிறார். இதன் விளைவாக எந்த இடத்திலும் தான் கேவலப்படுத்தப் படலாம், கோபமூட்டப்பட்டு வேடிக்கை பார்க்கப்படலாம் என்ற உணர்வு அதீதமாய் இருக்கவும், அதன் காரணமாய் தவறாக எடுத்து கொள்ளவும் வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. இதை மற்றவர்கள் உணர்ந்து கொள்ள முடியாது. வெட்டியாக அறிவுரை மட்டுமே சொல்ல முடியும். மதிவண்ணன் இப்படிப்பட்ட ஒரு உணர்வு பற்றி சொல்லக் கேட்டிருக்கிறேன். ( தவறாக எடுத்து கொண்டிருக்கும் பட்சத்தில் அவர் மன்னிப்பு கேட்கலாம். ஆனால் அதற்காக தண்டைனையை அவர் ஏற்கனவே பெற்றாகிவிட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.)

ஆனால் எரிச்சல் தருவது எதுவென்றால், ஜிதானை உடனடி எதிர்வினைகளால் திட்டி தீர்த்த பொது புத்தியும், தன் நிலையிலிருந்து செய்த அறிவுரைகளும்தான். தனது செயலுக்கான தண்டனையை பெற்ற பின்னரும், அதற்கான மிக பெரிய விலையை அளித்த பின்னரும் திட்டி தீர்த்தன. 8 ஆண்டுகளுக்கு முன்னால் ஜிதான் இன்னொரு தாக்குதலில் வாங்கிய சிகப்பு அட்டையை பற்றி பேசியது பொது புத்தியின் இன்னொரு கேவலமான பகுதியை காட்டுகிறது. எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் அவருக்கு வந்த ஒரு முன்கோபம் (அதற்கான காரணம் எதுவாகவும் இருக்கட்டும்), இப்போது அவரை குற்றவாளியாக்க ஒரு ஆதாரமாகிறது. ஏற்கனவே தீக்காயம் பட்டவன் தீயிடம் இன்னுமல்லவா ஜாக்கிரதையாக இருப்பான் என்ற காமன் சென்ஸ் இவர்கள் பட்டறிவில் படவில்லை.

இப்படிப்பட்ட பொது புத்தியினிடையே, அதை ஏற்கனவே எதிர்கொண்ட, தன் கோபத்திற்கு கொடுக்க வேண்டிய பெரிய விலையையும் நன்றாக அறிந்து, போலி நாகரீக தளைகளால் தன்னை இன்னமும் அடிமைப்படுத்திக் கொள்ளும் உளவியலிலிருந்து விடுப்பட்டு, தனது அந்த நேரத்து எதிர்வினையை நிகழ்த்திய புரட்ச்சியாளன் ஜிதானிற்கு என் வணக்கங்கள்!

பிகு: புரட்சி என்று சொன்னது அவர் முட்டி மோதிய சம்பவத்தை அல்ல; ஆட்டத்தின் கணிப்புகளையும், போக்குகளையும் புரட்டிப் போட்ட அவரது அற்புதமான விளையாட்டை குறிக்கிறது.

Post a Comment

8 Comments:

Blogger கருப்பு said...

இருப்பினும் தங்க பந்து விருதைத் தட்டிச் சென்றார்!!!

7/12/2006 6:29 PM  
Blogger குழலி / Kuzhali said...

யோசித்துக்கொண்டே இருந்தேன் நீங்கள் போட்டுவிட்டீர்கள்...

ஜிடேன் விடயத்தையும் ஜிடேன் கோபத்தையும் அது ஏற்படுத்திய சரி செய்ய முடியாத பாதிப்பையும்,

எல்லா மொள்ளமாறித்தனத்தையும் செய்துவிட்டு சத்தம் போடாமல் வெற்றியை சுவைப்பவர்களையும் பார்க்கும் போது வெறுப்பாக உள்ளது...

7/12/2006 6:54 PM  
Blogger புதுமை விரும்பி said...

இது நடு நிலையிலிருந்து எழுதப்படாத படைப்பாக எனக்குப் படுகிறது. உங்களின் ஜிதேன் மீதான, கண்மூடித்தனமான ஈர்ப்பு காரணமாயிருக்கலாம். என்னை பொருத்தவரை ஜிதேன் செய்தது காட்டுமிராண்டித்தனம். அவர் எத்தனை பெரிய விளையாட்டு வீரராய் இருந்தாலும், தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில், இன்னொரு விளையாட்டு வீரரைத் தாக்கியது கண்டனத்துக்குரியது. Verbal attack does exist in all games and it is a part of games and many players use it as a strategy for winning. Physical attack is not a response to it. A sports person represents a country when he is standing in the play ground. If he is not able to behave properly and follow sports mannerism, he has to be eliminated from the game whoever he may be and whatever sprorting strength he has.

7/12/2006 7:28 PM  
Blogger Unknown said...

RV sir,

இப்போ நான் சொன்ன //கோபத்தின் விளைவால் சிவப்பு அட்டை வாங்கிய சிடானுக்கு வருந்துகிறேன்.// - இந்த வார்த்தையை ஒத்துக்கிறிங்களா :-)?

7/12/2006 7:49 PM  
Blogger ROSAVASANTH said...

கருத்தளித்த கறுப்பு, குழலில், புதுமை விரும்பி, கேவியாருக்கு நன்றி.

புதுமைவிரும்பு, வாயால் அதை சொன்னாலும் தப்பில்லை, திருப்பி அடிப்பது மட்டுமே விளையாட்டில் தவறு என்பது நடுநிலமை, ஜிதானின் பின்னுள்ள நியாயத்தை புரிந்துகொள்ள முயல்வது நடுநிலமையில்லை என்றால், நான் நிச்சயம் நடுநிலமைவாதியில்லை. நடுநிலமையை வைத்து கொண்டு என்ன செய்யப் போகிறோம்?!

கேவியார், நான் அப்போதே நீங்கள் சொன்னதை முழுமையாய் ஒப்புகொண்டுதான், முதன் முறையாய் அப்படி வாசிப்பதாய் எழுதியிருந்தேன்.

7/12/2006 8:16 PM  
Blogger Unknown said...

புதுமை விரும்பி சார்,

சும்மா போறவனை சட்டையைப் பிடித்து இழுத்து விளையாடுவதும், அவனது பிறப்பை கேலி செய்வதும் நீங்கள் சொல்லும் sports mannerismல் உண்டா?

//கேவியார், நான் அப்போதே நீங்கள் சொன்னதை முழுமையாய் ஒப்புகொண்டுதான், முதன் முறையாய் அப்படி வாசிப்பதாய் எழுதியிருந்தேன்.//

நன்றி RV.

//எல்லா மொள்ளமாறித்தனத்தையும் செய்துவிட்டு சத்தம் போடாமல் வெற்றியை சுவைப்பவர்களையும் பார்க்கும் போது வெறுப்பாக உள்ளது... //

குழலி, நீங்கள் சொல்வது சரியே. சில விஷயங்கள் preplannedஆக செய்தது போல இருந்தது.

7/12/2006 8:46 PM  
Blogger Boston Bala said...

Guardian Unlimited Football | World Cup 2006 | The mother of all insults: "The suggestion that Marco Materazzi might have insulted Zinédine Zidane's mother during the World Cup final seems justification enough for the head-butt that followed. But why is it that the worst insults in the world are always about your mum? Stuart Jeffries reports

7/12/2006 11:01 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

ரோசா,
எனக்கும் ZIDANE செய்தது பெரிய தவறாகத் தோன்றவில்லை, அதற்கான காரணம் வெளியில் கசியத் தொடங்கியவுடன் !! என்ன, அவர் Penalty Shoot out-இல் இருந்திருந்தால், பிரான்ஸ் வெற்றி பெற்றிருக்குமோ என்ற நப்பாசை (உறுத்தல்!)

மேலும், நீங்கள் பிரேசில் ஆதரவு நிலையிலிருந்து, ZIDANE (the footballer I adore!) ரசிகரானது குறித்து மிக்க மகிழ்ச்சி :)

7/13/2006 1:59 AM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter