ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Friday, October 27, 2006

ஐரோப்பா, நவீனத்துவம், மரண தண்டனை!

தமிழ்சசி மரண தண்டனை குறித்து எழுதிய பதிவை தாமதமாகத்தான் நிதானமாக படித்தேன். அதில், அவர் என் பதிவிலிருந்த கருத்தை முன்வைத்து சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதற்கு பதிலாக இப்போதய அளவில், நான் வந்தடைந்திருக்கும் சில கருத்துக்களை முன்வைப்பதும், முடிந்தால் வேறு விஷயங்களை தொட்டுச் செல்வதும் இந்த பதிவின் நோக்கம். மரணதண்டனை குறித்து ஏற்கனவே வலைப்பதிவுகளில் எழுதி குவிக்கப் பட்ட பின்பு, இதை எழுதவும் படிக்கவும் அலுப்பாக இருக்கலாம். ஆனால் அலுப்பாக இருக்கும் ஒரே காரணத்திற்காக, சொல்லவேண்டியவை என நினைக்கும் கருத்துக்களை, முக்கியமான கட்டத்தில் சொல்லாமல் விடலாகுமா என்று தோன்றுவதால்... !

மற்ற பதிவுகளில் இருந்து மேற்கோள் காட்டப்படுபவைகளை //,// குறிகளுக்கு இடையில் தருகிறேன். சசி எழுதியது கீழே.

//அதே சமயத்தில் தூக்கு தண்டனை கூடாது என்பவர்களின் வாதங்களும் சரியாக முன்வைக்கப்படுவதில்லை. அரசாங்கத்திற்கு ஒரு உயிரை எடுக்க உரிமையில்லை என்று கூறும் ரோசாவசந்த் ஐரோப்பாவை மனிதகுல நாகரிகத்திற்கு உதாரணமாக எப்படி மேற்க்கோள் காட்டுகிறார் என்பது புரியவில்லை. அமெரிக்கா சதாம் உசேனுக்கு எதிரான தாக்குதல் எனக்கூறி இராக்கில் அப்பாவி மக்கள் பலரை குண்டுவீசி தாக்கியதே அது மனிதநாகரிகத்தின் முதிர்ச்சியான நிலையா ? அமெரிக்காவின் இந்த தாக்குதலை அதன் ஐரோப்பிய நேச நாடுகள் ஆதரித்துக் கொண்டு தானே இருக்கின்றன. எண்ணெய் வளத்திற்க்கு நடக்கும் இந்தச் சண்டையில் மனித நாகரிகம் இன்னும் முதிர்ச்சி அடையாத நிலையில் இருப்பது தான் தெளிவாகிறது.

மரண தண்டனையை நீக்கினால் மட்டும் நாகரிக முதிர்ச்சி ஒரு நாட்டிற்கு வந்து விடுமா ? எத்தனையோ அப்பாவிகள் அரசாங்க இயந்திரங்களால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு சத்தமில்லாமல் மரணிக்கும் நிலையில், சட்டங்களை நீக்குவதால் மட்டும் நம்மை மனிதகுல நாகரிகத்திற்கு உயர்த்திக் கொள்ள முடியுமா ? அரசாங்கத்தின் சட்டங்களே சில இடங்களில் அமுக்கப்பட்டு இராணுவத்திற்கு நிறைய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள சூழ்நிலையில் சட்ட வரையறைகள் மட்டுமே நம்மை எந்தவகையிலும் நாகரீகமான சமூகமாக மாற்றாது.. //

முதலில் எனது பதிவு மரண தண்டனை குறித்த எனக்கிருக்கும் கருத்துக்களை எழுதும் நோக்கத்துடன் எழுதப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட பிரச்சனையில் 'பொதுபுத்தி' என்பது எவ்வாறு செயல்படுகிறது என்பதை பற்றி பேசுவதே முக்கிய நோக்கமாக இருந்தது. தமிழ் வலைப்பதிவுகள் மட்டுமில்லாது இணையத்தில் மற்ற இடங்களில், செய்திதாள்களில் வாசிக்க நேர்ந்த, பொதுப்புத்தி என்று நான் நினைக்கும் ஒன்றை சார்ந்த எதிர்வினைகளினால் தூண்டபெற்று, அவற்றை முன்வைத்து எனது பதிவு எழுதப்பட்டது. 'பொதுப்புத்தி' என்பது குறித்து நான் எழுதிய கருத்துக்களை, என் பதிவிற்கு வந்த எதிர்வினைகளை விட நேர்த்தியாக வேறு வகையில் நிருபிக்க இயலாது; வேறு பிரச்சனையாக இருந்திருந்தால், இவ்வாறு என் கருத்துக்களுக்கு பலம் சேர்த்ததற்கு நன்றி தெரிவித்திருப்பேன்.

அஃப்சலின் மரண தண்டனை பற்றிய சர்ச்சையை முன்வைத்தே பதிவு எழுதத் தொடங்கியிருந்தாலும், பதிவில் நான் முன்னிலை படுத்திய பிரச்சனை அஃப்சல் தொடர்பானதும் அல்ல; ராஜிவ் கொலை வழக்கில் 26 பேரை ஒட்டு மொத்தமாக தூக்கிலிடும் தீர்ப்பு வெளிவந்த போதும், பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் SAR கீலானி அனுபவிக்க நேர்ந்த கொடுமைகளின் போதும், பொதுப்புத்தி எவ்வாறு செயலாற்றியது என்பதையே முக்கிய ஆதாரமாக முன்வைத்திருந்தேன். ஜுர வேகத்தில் வெளிபடும் கூட்டு கூச்சலினிடையில் , அஃப்சல் வழக்கு குறித்த தெளிவின்மையை முன்வைப்பதே எனக்கான அரசியலாகப் படுவதாகவும் சொல்லியிருந்தேன். தங்களின் வசதிக்கும், அறிவிற்கும் தோதான வகையில் அவை வாசிக்கப்பட்டதையும், திரிக்கப்பட்டதையும் குறித்து இங்கே ஆராய்வது எனது தற்போதய வல்லமைகளுக்கு உட்பட்டது அல்ல. ஆனாலும் தூக்கு தண்டனை பற்றிய என் விரிவான கருத்துக்களை சொல்லும் நோக்கத்தில் பதிவை எழுதவில்லை என்பதை சசிக்கான பதிலில் சொல்ல வேண்டியிருக்கிறது.

பிரச்சனை குறித்த எனது நிலைபாட்டை மொட்டையாகவேனும் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் மட்டும், சுருக்கமாக தூக்குதண்டனை குறித்த என் கருத்தை பதிவில் எழுத வேண்டிவந்தது. அதே நேரம் 'தூக்கு தண்டனை எதிர்ப்பு' என்பதுடன் மட்டும் (மற்ற சந்தர்ப்பங்களில் இல்லாது இந்த பிரச்சனையில் மட்டும்) தொடர்புப் படுத்தி பேசுவது, பிரச்சனையை திசை திருப்புவதாக அமையும் என்று சொல்லி, "ஐரோப்பிய கூட்டமைப்பு போன்ற, மனித நாகரீகத்தின் முக்கியமான ஒரு கட்டத்தை அடைந்துவிட்ட ஒரு குமுகாயமாக நாம் இல்லாத யதார்த்தத்தை ஒப்புகொண்டே, நாம் இந்த விஷயத்தை அணுக வேண்டியிருக்கிறது." என்று எழுதியிருந்தேன். தமிழ்சசி புரிந்து கொண்டது போல, இப்படிச் சொல்லும்போது ஐரோப்பாவை மனித நாகரீகத்தின் உதாரணமாக கற்பித்து, அந்த கற்பிதத்தை மரண தண்டனைக்கு எதிரான ஆதாரமாக முன்வைக்கவில்லை; மரண தண்டனையை ஒழித்து விட்டதால் மட்டும் ஒரு சமூகம் நாகரீகம் பெற்றுவிட்டதாகவும் சொல்ல வரவில்லை.

'மனித நாகரீகம்' என்பதற்கு மேற்கை, ஐரோப்பாவை ஆதர்ச உதாரணமாக கொள்வது எனக்கு எந்தவிதத்திலும் ஒப்புதலும் உவப்பானதும் அல்ல; குறிப்பாக விளக்க வேண்டுமெனில், 'நவீனமாதல்' என்ற வார்த்தை கொண்டு விளங்கிக் கொள்ளக் கூடிய (மதநீக்கம், அறிவியல், பகுத்தறிவு துணைகொண்டு வந்தடைந்தவை உட்பட்ட), கடந்த ஒரு நூற்றாண்டில் நிகழ்ந்த மாற்றங்களை கூட மனித நாகரீகத்தின் வளர்ச்சியாக என்னால் பார்க்க முடியவில்லை. மனித வறலாற்றிலேயே உச்ச காட்டுமிராண்டித்தனமான (நாகரீகத் தன்மை என்பதாக கருதும் ஒன்றிற்கு எதிரானதாக மட்டும் இந்த வார்த்தையை பயன்படுத்துகிறேன்) கூறுகளை கொண்டதாக, சென்ற நூற்றாண்டின் நவீனத்துவத்தின் வறலாறு இருப்பதாகவே நினைக்கிறேன். இத்தனை கோடி ஆண்டுகளாக உயிர்த்து இருக்கும் இந்த பூமியே அழிந்து, மனித இனமே இல்லாமல் போகக் கூடிய நிலை வருமானால், அது நவீனத்துவத்தால் மட்டுமே சாத்தியமாகும்; மத அடிப்படைவாதமோ பழமைவாதமோ கூட அதை செய்யும் அளவிற்கு வல்லமை கொண்டது அல்ல. நடக்கும் நடப்புகளை பார்த்தால் நவீனத்துவம் நம்மை அப்படிபட்ட அழிவுக்காலத்துக்கு இட்டுச் செல்வதாகவே தோன்றுகிறது. அது குறித்து பேசுவது இங்கே நோக்கம் அல்ல.

மரண தண்டனையை ஒழிக்க முயல்வது என்பது ஒரு சமூகம் நாகரீகம் அடைவதன் (இதற்கு என்ன பொருள் கற்பித்து கொண்டாலும்) ஆரோக்கிய அறிகுறி; நாகரீக சமுதாயத்தை நோக்கிய பயணத்தில் முக்கியமான ஒரு கட்டம்; அதற்காக அதே அரசு நடத்தும் (அல்லது ஆதரவளிக்கும்) மற்ற சமூகங்கள் மீதான தாக்குதலும், சிறை சார்ந்த சித்ரவதைகளும் நாகரீகமானது என்பதல்ல கருத்து; எல்லா சமூக குற்றங்களையும் ஒழித்துவிட்டு, அல்லது அவைகளுடன் தொடர்புப் படுத்தித்தான் எல்லாவற்றையும் பேசவேண்டும் என்றால் நாம் பேசத் துவங்கவே முடியாது.

ஒரு நாட்டின் அரசு, தனது நிறுவனங்களின் விசாரணைகள் ஊடாக, தர்க்கபூர்வமான வாதங்கள் மூலம், சில மனித மனங்கள் கன்வின்ஸ் ஆவதன் அடிப்படையில் குற்றம் உறுதி செய்யப்பட்டு, அளிக்கப்படும் மரணதண்டனை என்பதை ஒழிப்பது, மனித நாகரீகத்தின் முக்கியமான ஒரு கட்டம் என்று மிக தெளிவாக எந்த குழப்பமும் இல்லாமல் கருதுகிறேன். வறலாறு முழுக்க மரண தண்டனையின் உக்கிரம், அளிக்கப்படும் அதிகாரம், நிறைவேற்றப் படும் முறை இவைகள் மாறி வந்திருப்பதையும், அதற்கு எதிராக ஒலித்துள்ள குரல்களையும் நோக்கினால் இதை புரிந்துகொள்ள முடியும் என்று தோன்றுகிறது. அந்த வகையில் ஐரோப்பிய கூட்டமைப்பு மரண தண்டனையை ஒழித்தது, மனித நாகரீகத்தின் முக்கியமான கட்டமாகத்தான் எனக்கு படுகிறது. இந்த இடத்தில் ஒரு முக்கியமான முரண்பாட்டை கவனிக்கலாம். மனித குலம் நவீனமடைய அடைய, (சட்டபூர்வமாக, சமூகத்தால் அங்கீகரிக்கப் பட்டு அளிக்கப் படும்) மரண தண்டனையின் எண்ணிக்கை, நிறைவேற்றப் படும் முறையின் கொடூரத்தன்மை ஆகியவை குறைந்து இறங்கு முகமாக இருப்பதையும், அதற்கு நேர்மாறாக சிறை, ராணுவம், போலீஸ் சார்ந்த சித்ரவதைகளின் உக்கிரம் அதிகமாகி, நவீனமாகி, விஞ்ஞானபூர்வமாய் வலிகளை பெருக்கும் விதமாக, அது அடுத்த பரிணாம கட்டத்தை அடைந்திருப்பதையும் காணமுடியும்; இந்த முரண்பாட்டை கணக்கில் கொண்டே நாம் பேசவேண்டும்.

சசி தனது பதிவின் இறுதிப் பகுதியில், அமேரிக்காவை 'Free Democratic country ' சொல்வதை ஒப்புகொள்வதாகவும், அதே நேரம் அதன் சட்டங்கள் கடுமையாக இருப்பதை பாராட்டுவதாகவும் எழுதியுள்ளது, அதற்கு முந்தய பத்திகளில் ஐரோப்பாவை முன்வைத்து அவர் எழுப்பிய கேள்விகளின் தர்க்கத்திற்கு முரணானதாக இருக்கிறது. நிர்பந்தித்துக் கொண்ட சில கட்டுபாடுகளுக்கு உட்பட்டு, தனி மனித சுதந்திரங்கள் maximise செய்யப்பட்ட ஒரு லிபரல் சமூகம் என்பதாக அமேரிக்க குமுகாயத்தை, கருதினால், எனக்கு எதிர்ப்பு பெரிதாக எதுவும் கிடையாது. அதே சமுதாயத்தை சாத்தியமாக்கி நடைமுறைப்படுத்தும் அரசுதான், உலகில் ஜனநாயகத்துக்கான எழுச்சிகளை நசுக்குவதையும், அவைகளுக்கு எதிராக சதி செய்வதும், ஜனநாயக அரசுகளை கவிழ்ப்பதுமான வேலைகளில், மனித வறலாற்றில் ஒப்பிடக்கூடிய வேறு உதாரணம் இல்லாத தனித்தன்மையுடன் செயலாற்றி வருகிறது. எந்த சுதந்திரம் அமேரிக்க சமுதாயத்திற்கு உயிர்நாடியாக இருக்கிறதோ, அதே சுதந்திரம் மற்ற சமூதாயங்களுக்கு கிடைக்காமலிருக்க, அதே அரசுதான் காரணமாக இருக்கிறது. அதற்காக அமேரிக்கா லிபரல் சமுதாயம் அல்ல என்று வாதிடுவது நியாயமானதாக இருக்காது. ஆகையால் மீண்டும் இப்படி ஒரு சமூகம் தனக்குள்ளே பேணிவரும் விழுமியங்களுக்கும், அதன் அரசு மற்ற சமூகங்களை பாதிப்பதற்கும் உள்ள முரண்பாட்டை மனதில் கொண்டே எல்லா பிரச்சனையையும் அணுக வேண்டியிருக்கிறது.

ஏற்கனவே வேறு ஒரு பதிவில் நான் பேசியது போல், பொலிடிகலி கரக்ட்னெஸ் என்பதை பேணுவதிலும், பண்மை தன்மைக்கு முக்கியத்துவம் தருவதிலும், ஐரோப்பிய சமுதாயங்களே இப்போதைக்கான நடைமுறை முன்னுதாரணங்களாக இருக்கிறது. 'வேட்டையாடு விளையாடு' திரைப்படத்தில், அரவாணிகள் கேவலமாக சித்தரிக்க பட்டிருப்பதை நம் சூழலில் பேசுவதே இப்போதுதான் நடக்கிறது; அதுவும் பகடி செய்யப் படுவதை கவனிக்க வேண்டும். ஒரு ஐரோப்பிய சமுதாயத்தில் பொதுக்கருத்தே இந்த சித்தரிப்புகளுக்கு எதிரானதாக இருக்கும்; குறைந்த பட்சம் வெளிப்படையான நியாயப்படுத்துதல் எதையும் கேட்க இயலாது. நம் சூழலிலோ, இலக்கியத் தேடல் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு கூட, இந்த படத்தின் (அரவாணிகளுக்கு எதிரான, ஒரு பாலின புணர்ச்சியாளர்களுக்கு எதிரான சித்தரிப்பு பற்றிய) பிரச்சனை புரியவேயில்லை; நம் சமூகத்தில், கல்வி பெற்ற மக்கிளிடையே கூட, பொலிடிகலி கரெக்ட்னெஸ் பிரச்சனை குறித்த அடிப்படை பிரஞ்ஞை கூட இல்லை என்பதையே இது காட்டுகிறது. வறலாற்றில் பெருத்த வன்முறைகளை தன் அண்டை நாடுகளின் மீது பெய்த ஜப்பான், பண்மைதன்மை பேணுவதை ஒரு அரசாங்க கொள்கையாக தற்போது கொண்டிருக்கிறது; தன் வறலாற்று குற்றங்களுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கும் உதாரணமாகவும் அது திகழ்கிறது. அமேரிக்காவின் இராக் மீதான ஆக்ரமிப்பிற்கு ஜப்பான் அளிக்கும், விமர்சனமற்ற ஆதரவை காரணம் காட்டி இதை மறுக்க இயலாது. இந்தியா பங்களாதேஷ் மக்களை நடத்தும் விதத்தையும், ஈழத் தமிழ் மக்களை அகதிகளாக நடத்தும் மனித தன்மையற்ற விதத்தையும், ஐரோப்பா அதே மக்களை (சில பிரச்சனைகள், விதிவிலக்குகள் தவிர்த்து), தங்கள் நாட்டு பிரஜைகளாக்கி, சட்டபூர்வமாக சமமாக அங்கீகரிப்பதையும் ஒப்பிட வேண்டும். கடைசியாக ஐரோப்பாவின் பல நாடுகள் (மற்றும் ஐரோப்பா முழுவதும் அதன் மக்கள்) ஈராக் போரை தீவிரமாக எதிர்த்ததையும், பின்னர் அமேரிக்கா நிகழ்த்திக் காட்டிய நிர்பந்தத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். ஆகையால் ஐரோப்பிய குமுகாயத்தின் குறிப்பிட்ட கூறுகளை நாகரீகத்தின் உதாரணங்களாக, குறிப்பிட்ட கட்டத்தை அடைந்ததாக சுட்டும்போது, மற்ற பிரச்சனைகள் இல்லை என்று பொருள் இல்லை; மற்ற பிரச்சனைகளை காரணம் காட்டி அந்த கூறுகளை மறுக்கவும் கூடாது என்று நினைக்கிறேன்.

ஐரோப்பா பற்றி பேசுவதை இங்கே நிறுத்திக் கொண்டு, மரண தண்டனை குறித்த கருத்துக்களுக்கு வருகிறேன். 'பொதுப்புத்தி' குறித்த பதிவில் சுருக்கமாக மரணதண்டனை குறித்து நான் எழுதியது கீழே.

//எனது நிலைபாடு தூக்குதண்டனை என்பதற்கே எதிரானது. அது ஆட்டோ சங்கருக்கும், வீரப்பனுக்கும், சிறுமியுடன் பாலியல் வல்லுறவு கொண்டவனுக்கும், 24பேரை ஒரே சமயத்தில் கொன்றவனுக்கும் சேர்த்து அது பொதுவானது; 'ஒரு நிரபராதி கொல்லப்பட்டு விடக்கூடாது' என்ற வாதத்தின் அடிப்படையில் வரும் தூக்குதண்டனை எதிர்ப்பு வாதம் அல்ல; எந்த வகை குற்றம் நிறுவப்படுதலுக்கும், ஒரு உயிரை அரசாங்கம் என்ற நிறுவனம், மிகுந்த இயந்திரத்தனமான திட்டமிடுதலுடன் (உதாரணமாய் தூக்கில் இடும்போது மலம் வெளிவந்துவிடாமலிருக்க, அதற்கு முன் சில மணிநேரங்களுக்கு பட்டினிபோடுதல் உட்பட்ட) மிக நிதானமாக செய்யப்படும் அங்கீகரிக்கப் பட்ட கொலையை செய்வது, ஒரு நாகரீக சமுதாயத்தில் நடக்க முடியாது என்ற கருத்தின் அடிப்படையில் தூக்கு தண்டனையை எதிர்க்கிறேன். அந்த பார்வையில் கமலின் 'விருமாண்டியை', அவர் பிரசாரித்தது போல், தூக்குதண்டனைக்கு எதிரான ஒரு படமாக என்னால் பார்க்க முடியவில்லை. குற்றம் செய்யாமல் மாட்டிகொண்ட கமலின் நிரபராதி பாத்திரம, தூக்கிலிடப்படுவதை பிரச்சனையாக பார்ப்பது அல்ல, தூக்குதண்டனைக்கு எதிரான பிரச்சாரம்; கமல் தூக்கு தண்டனையை எதிர்த்து படமெடுக்க நினைத்தால், அவர் பசுபதியின் பாத்திரம் தூக்கிலிடப்படுவாதாகவும், அதற்கு எதிராகவும் என்பது மாதிரி கதை நகர்ந்திருக்க வேண்டும். ஆனால் பசுபதி கொல்லப்படுவதுதான் சரி என்கிற நியாயத்துடன் அமைந்த திரைக்கதையை, தூக்கு தண்டனைக்கு எதிரானதாக என்னால் பார்க்க முடியவில்லை. (படத்தில் வேறு பல பிரச்சனைகள் உண்டு எனினும் இது முதன்மையானது.)//

மரண தண்டனை குறித்து நான் தெரிவித்த கருத்துக்கள் விரிவானதாக இல்லைதான்; ஆனால் அவை எப்படி சரியானதாக இல்லை என்று சசி சொல்கிறார் என்று சரியாக புரியவில்லை. நீதி மன்றத்தால் அளிக்கப்படும் தீர்ப்பு என்பது சட்டபூர்வமான வாத பிரதிவாதங்கள், 'ஆதாரங்கள்' அடிப்படையில், நீதிபதிகளின் மனம் 'தெளிவாகி' ஒரு முடிவுக்கு வருவதன் மூலம் அளிக்கப்படுகிறது. தர்க்கபூர்வமாய் 'உண்மையை' வந்தடைவது என்பதே, பல துறைகளில் மிகவும் பிரச்சனைக்குரியது என்பது இன்று தெளிவாகிப் போன ஒரு விஷயம். அந்த வகையில், விசாரணை நேர்மையுடனும், திறந்த மனதுடனும் நடத்தப்பட்டாலும் கூட, ஒரு குறைபாடுகள் சாத்தியமுள்ள வழிமுறையில், முழுமையற்ற சட்டகத்தில் வழங்கப்படும் தீர்ப்பு தவறானதாகவும், நியாயமற்றதாகவும் இருக்க சில வாய்ப்புக்கள் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் ஒரு முறை தண்டனை நிறைவேற்றப் பட்ட பின்பு, சரி செய்ய இயலாததாக இருக்கும் மரணதண்டனையை, 'ஒரு நிரபராதி தண்டிக்கப் பட்டுவிடக்கூடாது' என்று எதிர்ப்பது மிக முக்கியமான வாதம்.

அடுத்த வாதம் தமிழ்சசி சொல்வது போல, நீதிமன்றம் தண்டனை அளிப்பது என்பது குற்றவாளி திருந்துவதற்காக என்றால், மரண தண்டனை திருந்துவதற்கானது அல்ல என்பது; மரணதண்டனை உள்ளே உறைந்திருப்பது பழிவாங்குதலே அன்றி திருத்தும் நோக்கம் அல்ல என்பது; பிரபு ராஜதுரையும் இதை சொல்கிறார். அஃப்சல் தண்டனை குறித்த தீர்ப்பில், மக்களின் அபிலாஷைகளை திருப்தி செய்யவேண்டியிருப்பதாக ஒரு வாதத்தை அடுக்கும் போது, குற்றத்திற்கான பழிவாங்குதலே அதில் உள்ளடங்கி இருப்பது வெளியாகிவிடுகிறது. சசியும் மற்றவர்களும் முன்வைக்கும் மரணதண்டனைக்கு எதிரான இந்த வாதமும் முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை.

இவற்றை ஏற்றுக்கொண்டு, இவைகளை விட முக்கியமானதாக நான் முன்வைக்கும் வாதம், நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் மரணதண்டனை எல்லா வகை உயிர்பறித்தல்களிலேயே - அதாவது கொலைகளிலேயே - மிகவும் கொடூரமானது; அதற்கு அளிக்கப்படும் சட்டபூர்வமான சமூக அங்கீகாரம் நாகரீகத்தை நோக்கிய சிந்தனைகளினால் ஏற்றுக்கொள்ள இயலாதவை; இதற்கான காரணமாக நான் சொல்வது அதில் இருக்கும் இயந்தரத்தனம், நிதானம், மிகவும் பகுத்தறிவு பூர்வமாக தண்டனை அளிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் முறை, மற்றும் சட்டத்தின் சமூகத்தின் அங்கீகாரத்துடன் அதற்கு பின் வைக்கப்படும் நியாயம்; நண்பர் சுமு சரியாக எடுத்துக் கொண்டது போல, இந்த மரண தண்டனையை எந்த கொடூரமான குற்றத்திற்கும் ஒரு நாகரீக சமுதாயத்தில் அளிக்கக் கூடாது என்பதுதான் எனது வாதம். அப்படியானால் அந்த கொடூரமான குற்றம் நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் மரணதண்டனை அளவிற்கு கொடூரமானது இல்லையா என்ற கேள்வி எழலாம்; 'இல்லை' என்பதுதான் எனது பணிவான கருத்து.

மனித சமுதாயத்தில் நிகழும் எல்லாவகை குற்றங்களுக்கும் தேவை சார்ந்த, (பழிவாங்கல், துவேஷம் உட்பட்ட) உணர்வு சார்ந்த ஒரு பிண்ணணி இருக்கலாம்; அப்படி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவை அனைத்திற்கும் பின்னால், மனித மனத்தோடு புகை போல கலந்திருக்கும் பயித்தியகாரத்தனம் -Madness - இருப்பதை அறியலாம். கோயம்புத்தூரில் ஒரு போலிஸ்காரரை கொன்றவருக்கும், பழிக்கு பழியாக பல இஸ்லாமியர்களை போலிஸுடன் கூட்டு சேர்ந்து தாக்கி கொன்றவர்களுக்கும், அடுத்த கட்டமாக அதவானியை கொல்வதற்கும், அப்பாவிகளை கொல்வதற்கும் குண்டு வைத்தவர்களுக்கும் இந்த madness உண்டு. கோத்ராவில் ரயிலை எரித்தவர்களுக்கும், பின்பு குஜராத் முழுவதும் முஸ்லீம்களை வேட்டையாடிவர்களுக்கும், அக்ஷர்தாமில் துப்பாக்கியால் சுட்டவர்களுக்கும் இந்த மேட்னெஸ் உண்டு; இப்படி எதுவும் இல்லாவிட்டாலும் கூட, மனைவியையோ, கணவனையோ, குழந்தையையோ, பக்கத்து வீட்டுக்காரனையோ கொல்லக்கூடிய பயித்தியக்கார வன்முறை, மனித இனம் எவ்வளவு நாகரீகம் அடைந்தாலும் இருந்து கொண்டுதான் இருக்கும். ஒரு வகையில் மனித மிருகங்களுக்கு மட்டுமே இருக்கும், அதன் இயல்புத் தன்மையாகவும் தோற்றமளிக்கும் இந்த பயித்தியகாரத்தனத்தில் வெளிப்படும் வன்முறையை விட, இதற்கு எதிர் பண்புடனிருக்கும் பகுத்தறிவின் விளைவாக வெளிபடும் வன்முறையே மிக கொடூரமானது என்பது நான் வந்து அடைந்திருக்கும் கருத்து. நீதிமன்றத்தால் அளித்து நிறைவேற்றப்படும் மரணதண்டனை முழுக்க பகுத்தறிவு சார்ந்து அளிக்கப்பட்டு, பகுத்தறிவின் நிதானத்துடன் நிறைவேற்றப்படும் தண்டனை ஆகும்; அதை விட கொடூரம் அது முழுக்க ஒரு சமூகத்தால் அங்கீகரிக்கப்படும் முழுவதும் திறந்த வெளியில் பகீரங்கமாக நிறைவேற்றப்படுவது.

தமிழ்சசி குறிப்பிடுவது போல, 'அரசாங்கத்திற்கு ஒரு உயிரை எடுக்க உரிமை இல்லை' என்று எளிமைப்படுத்தப் பட்டது என் வாதம் அல்ல. அராசாங்கம் எந்த உயிரையும் பறிக்ககூடாது என்று பொதுவாய் சொன்னாலும், ஒரு போரின் நடைமுறைகளின் போதோ, அராசங்க நிறுவனம் தாக்கப்பட்டு அதன் உறுப்பினர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும்போதும், எதிலும் சம்பந்தப்படாத பொதுமக்கள் மீது பயங்கரவாதம் தாக்குதல் நடக்கும் போது அதை எதிர்கொள்ளும் நேரடி நடவடிக்கையின் போதும், 'யார் உயிரையும் பறிக்க கூடாது' என்று ஒரு சுயநிபந்தனை வைத்துக் கொண்டு இயங்க முடியாது; எந்த ஒரு நாகரீக சமுதாயத்திற்கும் இத்தகைய நடவடிக்கைகளுக்கான கட்டாயங்கள் இருக்கும் வரை, இப்படி ஒரு நிபந்தனையால் கையை கட்டிக்கொள்ள முடியாது. நான் அது குறித்து எதுவும் சொல்லவில்லை. ஒரு நாகரீக சமுதாயத்தில், மரண தண்டனை போன்ற, எந்த பயித்தியக்காரத்தனமும் சம்பந்தப்படாமல் பகுத்தறிவு பூர்வமான சமூகத்தால் அங்கீகரிக்கப்படும் கொலை நிகழ்த்தப் படக் கூடாது என்பதுதான்.

எப்போது மரண தண்டனை தீர்ப்பளிக்கப் படுகிறதோ அப்போதே அது நிறைவேற்றப்படத் துவங்குகிறது. அந்த கணத்திலிருந்து தூக்கில் தொங்கி இறக்கும் வரை அந்த தண்டனை அனுபவிக்கப்படுகிறது. அது குறித்த கருணை மனு, அது குறித்த விவாதம், வினாக்கள், சண்டைகள், செய்திகள், அலசல்கள், தெரிவிக்கப் படும் அனுதாபங்கள், எல்லா பக்கமும் உள்ள வாதங்கள் இவை அனைத்திலும் குற்றவாளி தண்டனையை அனுபவிக்கிறார். அவரது தண்டனை மிக தீர்மானமான முறையில் திட்டமிடப்பட்டு, அந்த திட்டங்கள் குற்றவாளிக்கும் அனைவருக்கும் வெளிப்படையாய் அறிவிக்கப்பட்டு, மறைப்பதற்கு எதுவுமில்லாமல் நிறைவேற்றப்படுகிறது. தண்டனைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சமயத்திற்கு முன்னால், குற்றவாளி எல்லா வகையிலும் தூக்கில் தொங்குவதற்காக மனதளவிலும் உடலளவிலும், கோரமானதாக தோற்றமளிக்காமல் இருப்பதற்காக, தண்டனை நிறைவேற்றும் பணியாளர்களின் மனசாட்சி, குமட்டல்தன்மை இவற்றை கணக்கில் வைத்தும் தயார் செய்யப்படுகிறார். அவருடைய கடைசி ஆசை கேட்கப்படுவதும், தண்டனையின் இன்னொரு சடங்காகிறது. உடல்ரீதியில் அவர் தயார் செய்யப்படுகிறார்; முந்தய நாள் அவருக்கு நல்ல உணவு அளிக்கப்படுகிறது; தண்டனைக்கு முன்னால் மலம், மூத்திரம் வெளிவராமலிருக்க, உணவும் நீரும் சில மணி நேரங்கள் முன்னால் அவருக்கு தடை செய்யப்படுகிறது; முகம் போர்த்தப்படுகிறது. இவையெல்லாம் தண்டனை பற்றி மிக குறைந்த அளவு நான் கேள்விப்பட்டு எழுதுவது; ஆராய்ந்தவர்களும், நேரடி தொடர்புள்ளவர்களும் இன்னும் அதிகமாக மரணதண்டனையின் இயந்தரத்தனமான, நிதானமான திட்டமிதல்களையும், குற்றவாளி மீதான அதன் பாதிப்புகளையும் விளக்க இயலும். ஆகையால் எனது மரண தண்டனை எதிர்ப்பின் பின்னால், அதன் பகுத்தறிவு பூர்வத்தின், நிதானத்தின், இயந்தரத்தனமாக திட்டமிடல்களின் கொடூரமே முக்கிய காரணமாக இருக்கிறது. ஐரோப்பிய கூட்டமைப்பில் மரண தண்டனை இத்தகைய ஒரு பார்வையின் அடிப்படையிலேயே - இதே வகையில் வாதங்களை அடுக்கி வெளிப்படையாய் அறிவித்திருக்கவிட்டாலும் - தடை செய்யப்பட்டிருப்பதாக நான் நினைக்கிறேன்.

இந்த எனது பார்வை சரியாக புரிந்து கொள்ளப்படாமலோ, ஏற்றுகொள்ளப்படாமலோ போவது வேறு விஷயம். மிக எளிதாக இதற்கு எதிர்வாதங்களை முன்வைக்க முடியும் என்றும் தெரியும். 'நிராபராதி கொல்லப்பட்டு விடக் கூடாது' எனபதற்கும் எதிர்வாதாடுவது கடினம் அல்ல; விபத்து நடக்கும் என்பதற்காக விமானத்தில் போவதில்லையா, ஒரு பெரும் விபத்து நடந்து பலர் சாக சிறு வாய்ப்பு இருந்தாலும் அணுமின்சாரம் தயாரிப்பது இல்லையா என்பது போல கேட்கலாம். சட்டம் 'பழி வாங்குவதாக இருக்க கூடாது' என்பதற்கும் இது போல கேட்க இயலும்; மதத்தில் பாவத்திற்கு தண்டனை என்பதுபோல, குற்றத்திற்கான (எந்த விதமானாலும்) தண்டனை என்பதிலேயே ஒரு பழிவாங்கும் நோக்கம் உள்ளுறையாக இருப்பதுதான். மேலும் பழிவாங்காத தண்டனை, சாலை விபத்து நிகழ்த்தி ஒரு உயிரை காவு கொண்டு விட்டு, 1000ரூபாய் ஃபைன் கட்டி தப்பிப்பது போல் இருந்துவிடும் என்றும் ஒரு வாதத்தை முன்வைக்கலாம். முன்னமே ஒரு நிலைபாட்டை பற்றிக் கொண்டவர்கள், எதிர்வாதம் செய்வது மிக மிக எளிதானது. உடலில் அழுக்கெடுப்பதை விட, மிக எளிதாக தர்க்கத்தை சமைத்துவிடலாம். யோசித்து பார்தால் அவைகளுக்கு எல்லோரையும் நிறைவு செய்யும் ஒரு பதிலும் கிடையாது. நாகரீகமான சிந்தனை என்று நான் நினைப்பதை முன்வைத்துள்ளேன். ஏதாவது ஒருவகையில் அதனுடன் பகிர்ந்து கொள்பவர்களுக்கும், தங்களை பரீசீலனை செய்ய தயாராய் இருப்பவர்களுக்கும் மட்டுமே இது பயன்படும். இதே கருத்துக்களை வேறு சிலரும் சொல்லியிருக்கக் கூடும்;வேறு மாதிரியும் சொல்லியிருக்கக் கூடும் (ஆனால் நான் படிக்கவே படிக்காத தெகல்காவில் இப்படி எதுவும் தட்டுப்படும் என்றும், நான் ஓரளவு படித்த அருந்ததி ராய் எங்காவது இப்படி சொல்லியிருப்பதாகவும் எனக்கு தோன்றவில்லை). அவைகளும் நான் ஆதரிப்பவையே; 'தூக்கில் போடத்தான் வேண்டும்' என்று சிறு மன உதறல் இல்லாது, கூட்டமாய் கூச்சல் கேட்கும் என் சமுதாயத்தில், இதை ஓரமான ஒரு பார்வையாக, யார் மீதும் திணிகாமல், அதே நேரம் அழுத்தமாய் சொல்வது என் கடமை என்பதால், சோர்வினிடையே இந்த பதிவு எழுதப்பட்டுள்ளது.

'பொதுப்புத்தி' பதிவில் மிக தெளிவாக பொதுப்புத்தி என்று எதை குறிப்பிடுகிறேன், அதன் வன்முறை என்று எதை சொல்கிறேன் என்று குழந்தைக்கும் புரியும் வகையில் எழுதியும், மீண்டும் பின்னூட்டத்தில் அதை விளக்கியும், பலர் அதை புரிந்து கொண்டவிதம், இவ்வளவு கொடுமையாகவா வாசிக்கும் திறன் கொண்டிருக்கிறார்கள் என்று சோர்வை ஏற்படுத்துகிறது. ( பிரச்சனை அவர்களின் வாசிக்கும் திறனில் இல்லை என்பது வேறு விஷயம்). இதில் 'பொதுப்புத்தி' என்பதாக லேபிள் ஒட்டப்படுமோ என்ற கவலை இல்லாமல் தங்கள் கருத்தை சொல்வதாக சிலர் காட்டும் வீரத்தை பார்த்தால் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. 'தேவனே எல்லோரையும் ரச்சியும்' என்பதை தவிர சொல்ல வேறு எதுவும் இல்லை.

அஃப்சல் பிரச்சனையை, குற்றத்துடன் அவர் தொடர்பிற்கு உரிய தீவிரத்தை முன்வைத்து விவாதிக்க வேண்டும் என்பதை என் பார்வையாக சொல்லியிருந்தேன். எனக்கு தெரிந்து ரவி ஸ்ரீனிவாஸ் பதிவில் மட்டும் அப்படி ஒரு பார்வை வெளிபட்டதாக நினைக்கிறேன். ஆனால் ரவி எழுதியதை பற்றி பேசவேண்டுமெனில் இதுவரை பதிவில் காட்டிய நிதானத்தை, வேண்டுமென்றே விலக்க வேண்டிவரும். அவ்வாறு செய்வதுதான் நியாயமானது என்று சில காரணங்களால் நான் நினைக்கிறேன். அப்படி செய்வதற்கான விருப்பமின்மை மட்டுமின்றி, ரவியின் 'கருத்துக்களுக்கு' முக்கியத்துவம் அளிக்கவும் தேவை எதுவும் இருப்பதாக தோன்றாததால், ரவி பெயர் குறிப்பிடும் நாகரீகமும் நேர்மையும் இல்லாமல் திரித்துள்ள எனது சில கருத்துக்களை பற்றி மட்டும் நான் சொல்ல வேண்டியிருக்கிறது.

//காவல் துறை கை காட்டுபவர்களையெல்லாம் குற்றவாளிகள் என்று நீதிமன்றங்கள் தீர்மானிப்பதில்லை என்ற மிக எளிய அடிப்படை உண்மையைக் கூட புரிந்து கொள்ளாமல் ஒருவர் எழுதுகிறார்......//

என்னை சொல்கிறரா, பிரபு ராஜதுரையை சொல்கிறாரா என்கிற குழப்பம் வரும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பிரபு ராஜதுரையின் பதிவில் ரவி எழுதி நீக்கிவிட்டதை நான் படிக்கவில்லை. மேலே உள்ள வரியில் அடுத்தவர் சொல்வதை ரவி எப்படி வாசிக்கும் திறன் கொண்டவர் என்பதையும், மற்றவர்களின் அறிவை எந்த அளவு எளிதாக்கி, மற்றவரை முட்டாளாக்கி எளிமைப் படுத்துகிறார் என்று புரிந்து கொள்ளலாம். நக்கீரன் ராஜதுரையிடன், அரசாங்கம் தவறுதலாக இழைக்கும் தண்டனை என்ன வகையில் நஷ்ட ஈடு செய்ய இயலும் என்று கேட்டதற்கு பதிலாக நான் பதில் கூறியிருந்தேன். 'சட்டங்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது' என்றே பதிலை துவங்கியிருந்தேன். நடைமுறையில் வைகோவிற்கும், கீலானியிற்கும் யாரும் பொறுபேற்றுக் கொள்ளவில்லை, ஈடு செய்யும் எந்த முயற்சியும் நடைபெறவில்லை என்பதை மட்டுமே குறிப்பிட்டிருந்தேன். இந்த செய்தியில் தவறு இருந்தால் கூறலாம். மாறாக 'காவல் துறை கை காட்டுபவர்களையெல்லாம் குற்றவாளிகள் என்று நீதிமன்றங்கள் தீர்மானிப்ப'தாக திரிப்பது என்னவென்று சொல்லலாம் என்று வாசிப்பவர்கள் தீர்மானிக்கலாம்.

நகைச்சுவை உணர்வு என்பதை என்ன தேடினாலும் கண்டுபிடிக்க இயலாத எழுத்துக்கு சொந்தக்காரரான ரவி ஸ்ரீனிவாஸ் பகடி செய்து பதிவு போடுகிறாராம். (அவர் எழுத்தில் இல்லாதது நகைச்சுவை உணர்வு மட்டுமல்ல என்பது வேறு விஷயம்). அதை ரசித்து சிரிக்க நகைச்சுவை உணர்வை விட ஒத்த அரசியல் நிலைபாடு ரொம்ப முக்கியம். அப்படி இல்லாமல் எல்லோரும் வாசித்து சிரிக்க அவர் பதிவிலிருந்து ஒரு மேற்கோள்.

//ஒரு வகையில் இதையெல்லாம் எழுதுவது கூட வீண் என்றே தோன்றுகிறது. பல பதிவுகளைப் படித்த பின் சலிப்பும், ஏமாற்றமுமே மிஞ்சியது. என் கருத்துக்களை ஏற்கனவே எழுதிவிட்டேன். மீண்டும் அடுத்த வாரம் என் கருத்துக்களை எழுதுகிறேன்.//

Post a Comment

9 Comments:

Blogger Gurusamy Thangavel said...

ரோசா, மிக நீளமான பதிவு. முழுமையாகப் படிக்கவில்லை. நேரமாகிவிட்டது, நாளை முழு பதிவையும் படிக்கவேண்டும். குறிப்பாக நவீனத்துவம் குறித்த தங்களது விமரிசனம் பற்றி.

10/27/2006 9:59 PM  
Blogger Muthu said...

//வறலாற்றில் பெருத்த வன்முறைகளை தன் அண்டை நாடுகளின் மீது பெய்த ஜப்பான், பண்மைதன்மை பேணுவதை ஒரு அரசாங்க கொள்கையாக தற்போது கொண்டிருக்கிறது; தன் வறலாற்று குற்றங்களுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கும் உதாரணமாகவும் அது திகழ்கிறது. அமேரிக்காவின் இராக் மீதான ஆக்ரமிப்பிற்கு ஜப்பான் அளிக்கும், விமர்சனமற்ற ஆதரவை காரணம் காட்டி இதை மறுக்க இயலாது.//
உண்மை...

//நீதிமன்றத்தால் அளித்து நிறைவேற்றப்படும் மரணதண்டனை முழுக்க பகுத்தறிவு சார்ந்து அளிக்கப்பட்டு, பகுத்தறிவின் நிதானத்துடன் நிறைவேற்றப்படும் தண்டனை ஆகும்; அதை விட கொடூரம் அது முழுக்க ஒரு சமூகத்தால் அங்கீகரிக்கப்படும் முழுவதும் திறந்த வெளியில் பகீரங்கமாக நிறைவேற்றப்படுவது//
இது மட்டும் தான் நீங்கள் மரண தண்டனையை எதிர்ப்பதற்கு காரணமா? முழுமையடையாமல் இருப்பது போல் தோன்றுகிறதே ரோசா...ஏதோ குறைகிறதே...

//'மனித நாகரீகம்' என்பதற்கு மேற்கை, ஐரோப்பாவை ஆதர்ச உதாரணமாக கொள்வது எனக்கு எந்தவிதத்திலும் ஒப்புதலும் உவப்பானதும் அல்ல; குறிப்பாக விளக்க வேண்டுமெனில், 'நவீனமாதல்' என்ற வார்த்தை கொண்டு விளங்கிக் கொள்ளக் கூடிய (மதநீக்கம், அறிவியல், பகுத்தறிவு துணைகொண்டு வந்தடைந்தவை உட்பட்ட), கடந்த ஒரு நூற்றாண்டில் நிகழ்ந்த மாற்றங்களை கூட மனித நாகரீகத்தின் வளர்ச்சியாக என்னால் பார்க்க முடியவில்லை. மனித வறலாற்றிலேயே உச்ச காட்டுமிராண்டித்தனமான (நாகரீகத் தன்மை என்பதாக கருதும் ஒன்றிற்கு எதிரானதாக மட்டும் இந்த வார்த்தையை பயன்படுத்துகிறேன்) கூறுகளை கொண்டதாக, சென்ற நூற்றாண்டின் நவீனத்துவத்தின் வறலாறு இருப்பதாகவே நினைக்கிறேன். இத்தனை கோடி ஆண்டுகளாக உயிர்த்து இருக்கும் இந்த பூமியே அழிந்து, மனித இனமே இல்லாமல் போகக் கூடிய நிலை வருமானால், அது நவீனத்துவத்தால் மட்டுமே சாத்தியமாகும்; மத அடிப்படைவாதமோ பழமைவாதமோ கூட அதை செய்யும் அளவிற்கு வல்லமை கொண்டது அல்ல. நடக்கும் நடப்புகளை பார்த்தால் நவீனத்துவம் நம்மை அப்படிபட்ட அழிவுக்காலத்துக்கு இட்டுச் செல்வதாகவே தோன்றுகிறது. அது குறித்து பேசுவது இங்கே நோக்கம் அல்ல. //

நவீனத்துவத்தின் வரலாறு என்று நீங்கள் கூறுவது நவீனத்துவ காலகட்டத்தின் நிகழ்வுகள் என்று கூறுகிறீர்களா? அல்லது நவீனத்துவம் என்று நீங்கள் கூறியுள்ள கூறுகளின் காரணமாக ஏற்பட்ட நிகழ்வுகள் என்கிறீர்களா?

நவீனத்துவத்தால் உலகம் அழியும் என்பது போன்ற கருத்துக்கள் சொல்லப்பட்டிருப்பதால் இதைப்பற்றி விளக்கமாக ஒரு பதிவு எழுத முடியுமா?

10/28/2006 12:30 AM  
Blogger PRABHU RAJADURAI said...

"எனது நிலைபாடு தூக்குதண்டனை என்பதற்கே எதிரானது. அது ஆட்டோ சங்கருக்கும், வீரப்பனுக்கும், சிறுமியுடன் பாலியல் வல்லுறவு கொண்டவனுக்கும், 24பேரை ஒரே சமயத்தில் கொன்றவனுக்கும் சேர்த்து அது பொதுவானது"

It seems nobody has understood this concept...anyway I am happy that arundathi too shocked in the similar way at the way that the SC Judges allowed themselves to be carried away by the 'collective conscience' of the public

10/28/2006 2:27 AM  
Blogger ROSAVASANTH said...

தங்கவேல், படித்த பிறகு சொல்லுங்கள்.

முத்து, நான் மற்ற காரணங்களாலும் எதிர்கிறேன், எதிர்பதற்கு அவைகளை விட முக்கிய காரணமாக, 'முழுமையான' காரணமாக இதை சொல்லியிருக்கிறேன். இது உடனடியாய் பரவலாய் உள்வாங்குவதில் சில சிக்கல்கள் உண்டு என்று தெரியும். சிலவற்றுக்கு நாம் பழக்கப்பட்டபின்பே, சிலவற்றின் சீரியஸ்னெஸ் புலப்படும், அல்லது அதற்கான வடிவம் கிடைக்கும். மற்றபடி நவீனத்துவம் பற்றி எனது சில கருத்துக்களை விரிவாய் சொல்லும் நோக்கம் உண்டு. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

பிரபு ராஜதுரை, கருத்துக்கு நன்றி. என் வேண்டுகோள் கரணமாய் பதிவு எழுதி, அதனால் ஏதாவது பூசை கிடைத்திருந்தால் அதற்கு மன்னிக்கவும். முன்னமே சொல்ல நினைத்தேன்.

இங்கே நல்ல மழை, மீண்டும் எப்போது வருவேன் என்று தெரியாது. அது வரை மேலே பின்னூட்டங்கள் இருந்தால் காத்திருக்க வேண்டி வரும். நன்றி!

10/28/2006 6:15 PM  
Blogger ROSAVASANTH said...

http://pksivakumar.blogspot.com/2006/11/blog-post.html

//நாடாளுமன்றத்தின் மீது 2001 டிசம்பர் 13ந் தேதி நடத்தப்பட்ட தாக்குதலின் சூத்ரதாரியாக இருந்ததாக நிரூபிக்கப்பட்ட முகமது அ·ப்சல் குருவுக்குத் திஹார் சிறையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது. //

இந்தியா டுடே கட்டுரையின் துவக்கமே ஒரு முழு புளுகில் துவங்குகிறது. பாரளுமன்ற தாக்குதலின் சூத்ரதாரி அஃப்சல் இல்லை; நீதிமன்றமும் அப்படி சொல்லி தீர்பளிக்கவில்லை. இது எல்லோருக்கும் தெரியும். அஃபசலுக்கு அந்த தாக்குதலுக்கான திட்டங்களில் தொடர்பு இருப்பதாக மட்டுமே நீதிமன்றமே கருதுகிறது. அதற்கான நேரடி சாட்சியம் எதுவுமில்லை. சந்தர்ப்ப சாட்சியங்கள் மட்டுமே உள்ளது. இவ்வாறு ஒரு நேரடியான அப்பட்டமான புளுகுடன் ஒரு கருத்துக்கணிப்பு கட்டுரை துவங்குகிரது. அதன் நம்பகத் தன்மையும், கருத்து கணிப்பு நடத்திய விதத்தையும் (உதாரணமாய் என்ன விதத்தில் கேள்வி கேட்கப்படுகிறதோ அதற்கு ஏற்பவே பதில் வரும்). இங்கிருந்து புரிந்து கொள்ள தொடங்கலாம். பொதுப்புத்தி என்று நான் எழுதிய கருத்துக்களுக்கு வலு சேர்ப்பதாகவே இவை அனைத்தும் இருக்கின்றன.

11/03/2006 6:05 PM  
Blogger PKS said...

Roza, I replied to your comment at my blog. Please read when time permits.

Thanks and regards, PK Sivakumar

11/04/2006 1:27 AM  
Blogger ROSAVASANTH said...

பிகேஎஸ், உங்கள் பதிலை படித்தேன். உங்கள் வாதத்திறமை, தர்க்க வலைமை, இதில் எல்லாம் அண்மையில் மாற்றம் வந்து, என் பழைய கருத்துக்களை மாற்றிகொள்ள வேண்டுமோ என்று சில நேரம் தோன்றியதுண்டு. ம்ஹும், சான்ஸே இல்லை!

11/06/2006 2:22 PM  
Blogger PKS said...

ரோசா,

வஞ்சப் புகழ்ச்சி என்றே நம்புகிறேன்.. ஆனாலும் நன்றி.

பொதுப்புத்தி பற்றியும் எனக்கு சற்று மாற்றான கருத்து இருக்கிறது. ஆனால் உங்கள் கருத்தை மறுப்பதற்காக - இப்படி ஒருவரையொருவர் மறுக்கிற வாதங்கள் அலுப்படிக்கின்றன - அதை எழுதவேண்டாம் என்று இருந்தேன். அந்தக் கருத்தையொட்டி செல்வன் சிறிது என் பதிவில் எழுதியிருக்கிறார். பிறிதொருமுறை பேசும்வாய்ப்பு வரும்போது பேசுவோம்.

நன்றி.

11/07/2006 5:03 AM  
Blogger ROSAVASANTH said...

பிகேஎஸ்,

'பொதுப்புத்தி' பற்றி மட்டும் இல்லாது எது பற்றி வேண்டுமானாலும் மாற்று கருத்து இருக்கட்டும். மாற்று கருத்தை அங்கீகரிப்பதிலும், அதற்கு இடமளிப்பதிலும், ஒப்புகொள்ளாத அதே நேரத்தில் அதற்கு காதுகளை திறந்து வைப்பதிலும் எனக்கு நம்பிக்கை உண்டு என்பதை, திறந்த மனதுடன் அணுகினால் ஒருவேளை நீங்கள் புரிந்து கொள்ளலாம். உங்களுடன் விவாதிப்பதிலோ, உரையாடுவதிலோ, (சுய நிலைபாட்டுக்கும் எதிராளியின் கருத்துக்கான இருததலுக்கும் நேர்மையாக ) சண்டைபோடுவதிலோ எனக்கு எந்த பிரச்சனையும் தயக்கமும் கிடையாது. வாய்ப்பு இருக்கும் போதெல்லாம் அதை செய்யவே முயல்கிறேன். ஆனால் ஒரு கருத்தை மறுக்க குண்டக்க மண்டக்க எதை வேண்டுமானாலும் தர்க்கம் என்று அடுக்குவது, எதிராளி என்றோ சொன்னதை சம்பந்தமில்லாமால் ஒட்டுபோடுவது, திரிப்பது போன்றவைகளுக்கு அந்த மரியாதையை தரமுடியாது. நீங்கள் எனக்கு எழுதிய பதிலை இந்த வகையிலேயே என்னால் சேர்க்க முடியும். ஒருவேளை நீங்கள் விருப்பம் தெரிவித்தால் எப்படி என்று என்னால் இதை விளக்க முடியும். உங்கள் கருத்துக்கு நன்றி.

11/07/2006 2:58 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter