ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Wednesday, February 22, 2006

கண்மணி பப்பா!

உயிர்மை இதழை படித்து விட்டு ஒரு சிறு பதிவாய் இதை எழுத வேண்டும் என்று நினைத்தேன். இன்னும் படிக்க கிடைக்கவில்லை யாகையால் கேள்விப்பட்டதை மட்டும் வைத்து.

எல்லோரும் எதிர்பார்த்தது போல், நீட்டி முழக்கி தன் பக்க நியாயத்தை, மாறி மாறி மனுஷ்யபுத்திரன் தர்க்க சுயமைதுனம் செய்திருப்பார் என்று கேள்விபட்டதிலும் படித்ததிலும் தெரிகிறது. சுரேஷ் கண்ணன் போன்றவர்களை கூட அது குமட்டியிருப்பதிலிருந்து அதன் 'வீர்யத்தை' புரிந்து கொள்ள முடிகிறது. வலைப்பதிவிலிருந்து தேடி எடுத்து ரஜினி ராம்கி மற்றும் தேசிகனின் பதிவுகளை உயிர்மையில் மறு பதிப்பு செய்துள்ளாராம். மனுஷ்யபுத்திரனிடம் அவர் இதுவரை வாசித்துள்ள, எழுதியுள்ள, பதிப்பித்துள்ள இலக்கிய அறிவுலக சமாச்சாரங்கள் அளித்திருக்கக் கூடிய அறிவு நேர்மையும் ஜனநாயக உணர்வும் கொஞ்சமாவது இருந்திருந்தால், ஒரு (நிதானமான, 'நாகரிகமான') எதிர்கருத்தாக நாரயணணின் பதிவையும் பதிப்பித்திருக்க வேண்டும். ஆனால் அவர் நடத்துவது சன் ஜெயா டீவிக்களிடமிருந்து, நேர்மையில் ஜனநாயகத் தன்மையில் எந்த விதத்திலும் வேறு படாத ஒரு ஊடகம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், தனக்கு ஜால்ரா சத்தமெழுப்பும் இரண்டு பதிவுகளை மட்டும் தேர்ந்தெடுத்து வெளியிட்டிருக்கிறார். சன் ஜெயா டீவிக்கள் உயிர்மையிலிருந்து வேறுபடும் இடம் என்னவெனில், அவை ஒரு போதும் மனுஷ்யபுத்திரனைப் போல 'சன் டீவியின் உளவியல் வன்முறை' என்ற தலைப்பில் ஒரு தார்மீக குரல் எழுப்பாது.

முழுக்க எதிர் தரப்பிலிருந்து வெளிவரும் நாரயணனின் கட்டுரையை வெளியிடுவதில் ஏதாவது சஞ்சலம் இருக்கலாம். ஒரு விலகிய தாளமாய், ஒருவகையில் மனுஷ்யபுத்திரனுக்கு ஆதரவான என் பதிவை வெளியிடும் ஜனநாயக தன்மை கூட இல்லை. (அவர் வெளியிடாத வருத்தத்தில் நான் எழுதுவதாக நினைப்பவர்களுக்கு எல்லா நன்மையும் உண்டாக கடவது. ஆனால் வெளியிடாததற்கு நான் முழுக்க நன்றியுடையவனாக இருக்கிறேன் என்பதுடன், ஒருவேளை வெளியிட என்னை அணுகியிருந்தால், என் கருத்து பயன்படப்போகும் தளம் கருதி அதை நான் மறுத்திருப்பேன் என்பதை சும்மாவேனும் இங்கே பதிவு செய்கிறேன் என்பது வேறு விஷயம்.) என்னை பொறுத்தவரை மனுஷ்யபத்திரன் என் பதிவை வெளியிடாதது எதேச்சையானது அல்ல. (அதை அவர் நிச்சயம் படித்திருப்பார் என்று எனக்கு தெரியும்.)

சுந்தர்மூர்த்தி 'பொடி வைக்கவில்லை' என்று பின்னால் நழுவினாலும், குறிப்பிட்ட அரசியலுக்கு சாதகமாக என் பதிவு இருக்கும் என்பதுதான் 'பாராட்டி வரப் போகும் பின்னூட்டங்களை கவனியுங்கள்' என்று அவர் சொன்னதன் பொருள் என்று வாசிக்க தெரிந்த அனைவருக்கும் தெரியும். என் பதிவை ஒழுங்காக படிக்கும் எவருக்கும், அதன் அரசியல் நிலைபாடு புரியாமல் போகாது என்பதாகவே என் நினைப்பு. அந்த அரசியல் நிலைபாட்டின் காரணமாகவே, சுந்தரமூர்த்தியால் குறிப்பிடப் பட்டவர்களுக்கு என் பதிவு முழுக்க உவப்பாய் இருக்கும் சாத்தியம் இல்லை என்று நினைத்திருந்தேன் (அப்படி இருக்கக் கூடாது என்று திட்டமிட்டு எழுதும் நேர்த்தி கடன் எதுவும் இல்லையெனினும்). அதே காரணத்தினாலேயே மனுஷ்யபுத்திரன் நடத்தும் மக்கள் குரலில் அது வெளிவரவில்லை என்று நினைக்கிறேன். ஒருவேளை (தான் தீர்க்க தரிசித்த பின்னூட்டங்கள் வராததற்கு காரணமாய் நினைத்து கொண்டிருப்பது போல்) தான் முன்னமே ஆரூடம் சொன்னதால் தான் மனுஷும் பதிப்பிக்கவில்லை என்று சுமு நினைத்தால், அப்படிப்பட்ட ஒரு பார்வையையும் அங்கீகரிப்பதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

Post a Comment

---------------------------------------
Site Meter